OUR CLIENTS
குமரியில் சீரமைக்கப்படாத பள்ளி கட்டடங்கள்!
குமரியில் சீரமைக்கப்படாத பள்ளி கட்டடங்கள்! Posted on 18-May-2018 குமரியில் சீரமைக்கப்படாத பள்ளி கட்டடங்கள்!

நாகர்கோவில், மே 18-

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கவுள்ளன. இதையொட்டி பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயாராகி வருகின்றனர்.

குழந்தைகளுக்கு வேண்டிய சீருடைகள், பேக் உட்பட பள்ளிக்கூடங்களுக்கு செல்ல தேவையான பொருட்களை வாங்கும் பணிகளில் பலரும் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஜவுளிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் உட்பட பள்ளிக்கூட பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.கடந்த சில மாதங்களாக போதிய வருவாய் இன்றி காணப்பட்ட டெய்லர்களும் தற்போது பிசியாகி விட்டனர். டெய்லர்கள் பலரும் மாணவ, மாணவியருக்கான சீருடைகளை தைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பிற துணிகள் தைக்க தற்போது டெய்லர்களை நாடினால், ‘இரண்டு வாரங்கள் கழித்து வாங்க சார்’ என கூலாக அனுப்பி வைத்து விடுகின்றனர். 

மாணவ, மாணவிகளுக்கு தேவையான ஷூ, சாக்ஸ், பேக் போன்ற பொருட்களை குறைந்த விலையில் விற்கும் தெருவோர கடைகளும் தற்போது ஆங்காங்கே துவங்கி, விற்பனையை ஜரூராக நடத்தி வருகின்றன. தங்கள் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை பெற்றோர் ஆவலுடன் வாங்கி வந்தாலும், பள்ளிக்கூடங்கள் திறக்கும் நேரங்களில் ஏற்படும் கூடுதல் நிதி நெருக்கடி அவர்களை சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறது.இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி கட்டடங்களை சீரமைத்து மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக கல்வி கற்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி உறுதியான, பாதுகாப்பான பள்ளி கட்டடங்கள், சுகாதாரமான கழிப்பறைகள், குடிநீர் வசதி, பாதுகாப்புடன் சுத்தமான நிலையில் பள்ளி வளாகம் இருக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்ய வேண்டும்.இந்த அடிப்படையில் பள்ளிகளில் தற்போது சீரமைப்பு மற்றும் பெயின்டிங் பணிகள் நடந்து வருகின்றன. ஆனாலும் பல பள்ளிகளில் அரசின் உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. பள்ளி திறக்க இன்னும் 14 நாட்களே உள்ளன. இந்த நிலையில் எந்தவித பராமரிப்பும் மேற்கொள்ளாமல், மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யாமலும் பல பள்ளிகள் ஹாயாக இருந்து வருகின்றன. 

கடந்த 2017 நவம்பர் 29ம் தேதி உருவெடுத்த ஓகி புயல் குமரி மாவட்டத்தையே புரட்டி போட்டது. இதில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. அதுபோல பள்ளி வளாகங்களில் நின்ற பல மரங்களும் முறிந்து விழுந்தன. இதில் மரங்கள் விழுந்தும், புயலின் கோர தாக்குதலாலும் பள்ளி கட்டிடங்கள் பலவும் சேதமடைந்தன. கூரை ஓடுகள் காற்றில் பறந்தும், உடைந்தும் கட்டிடங்கள் எலும்பு கூடுகளை போல மாறிவிட்டன.பல பள்ளிகளில் சாய்ந்த மரங்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவை மாணவ, மாணவிகள் நடமாட இடையூறாக இருந்து வருகின்றன. மேலும் பள்ளி வளாகத்தில் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. அதுபோல சில பள்ளிகளில் சாய்ந்த மரங்கள் வெட்டப்பட்டு அப்பகுதியிலேயே குவித்து வைத்துள்ளனர். பொதுவாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் விளையாட்டு திடல் மற்றும் வளாகம் குறுகிய பகுதியாகவே இருக்கும். இதில் இந்த மரத்தடிகள் மேலும் இடத்தை அடைத்து கொண்டுள்ளதால் மாணவ, மாணவியர் விளையாட முடியாத நிலை மட்டுமல்லாது அவர்கள் சகஜமாக நடமாடவும் இயலாமல் உள்ளது.அதுபோல உடைந்துபோன ஓடுகள், சேதமடைந்த கட்டிடங்களும் சரிசெய்யாமல் அப்படியே விட்டுள்ளனர். பெயின்டிங் வேலைகளும் நடக்கவில்லை. பள்ளி வளாகம், கழிவறைகள் சுத்தப்படுத்தப்படாமலேயே கிடக்கின்றன. இதனால் மாணவ, மாணவியர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை நேரங்களில் நனைந்தும், வெயில் நேரங்களில் காய்ந்தும் கல்வி கற்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவியரின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும்.

நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோட்டாறு கவிமணி மகளிர் மேல்நிலைப்பள்ளி, எஸ்பி ஆபிஸ் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளி, இடலாக்குடி சதாவதானி செய்குதம்பி பாவலர் பள்ளி, எஸ்எல்பி மகளிர் பள்ளி உட்பட பல பள்ளிகளில் எந்தவித பராமரிப்பும் இன்றி பள்ளி கட்டடங்கள் பாழ்பட்ட நிலையிலேயே காட்சி அளிக்கின்றன. அதுபோல முறிந்து விழுந்த மரங்களும் இடையூறாக பள்ளி வளாகத்திலேயே இடத்தை அடைத்துக்கொண்டு அப்படியே உள்ளது.பொதுவாக அரசு பள்ளிகள் நாளுக்குநாள் நலிந்து வருகின்றன. தனியார் ஆங்கில வழி பள்ளிகளின் மோகத்தால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க தயங்குகின்றனர். இதில் அரசு பள்ளி கட்டிடங்களின் உறுதியற்ற தன்மை, சுகாதாரமின்மையால் பள்ளிகளில் சேர்க்கை இன்னும் குறையும் அபாயம் உள்ளது. மேலும் அந்தந்த பள்ளிகளில் படித்துவரும் மாணவர்களுக்கும் பெரும் கெடுதல் ஏற்படும்.எனவே, மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டும், கூடுதல் மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டும் கல்வித்துறை அதிகாரிகள் சிறப்புடன் செயல்பட வேண்டும். பள்ளிகள் திறக்க சில நாட்களே உள்ள நிலையில், உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பள்ளி கட்டடங்களை சீரமைக்கவும், இடையூறாக கிடக்கும் மரங்களை அகற்றவும், வளாகத்தை சுத்தப்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

மேலும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சிறப்பாக மேற்கொண்டு, தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் மேம்பட்டு நல்லமுறையில் செயல்பட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். அதுபோல கல்வித்துறை அதிகாரிகள் அனைத்து பள்ளிகளையும் ஆய்வுசெய்து பராமரிப்பு பணிகள் முறையாக செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் கண்காணித்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label