OUR CLIENTS
ஐஏஎஸ் தேர்வில் புதிய விதிகளை கைவிட வேண்டும்: மு.க. ஸ்டாலின்
ஐஏஎஸ் தேர்வில் புதிய விதிகளை கைவிட வேண்டும்: மு.க. ஸ்டாலின் Posted on 21-May-2018 ஐஏஎஸ் தேர்வில் புதிய விதிகளை கைவிட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

சென்னை,  மே 21-

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வில் சமூகநீதிக்கு எதிரான புதிய விதிகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என திமுக செயல் தலைவர்  மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு சமூகநீதிக் கொள்கைகளை குழி தோண்டிப் புதைக்கும் வகையில் அநியாயமாக செயல்பட்டு வருவதாக  ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  
சிவில் சர்வீசஸ் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கு இளைஞர்களை நியமிக்க வேண்டும் என்றும்,  முசோரியில் நடைபெறும் பயிற்சியில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்வது தவறு என்றும் கூறியுள்ளார்.  முசோரியில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கு ஒருவரை நியமிக்க வேண்டும் என பிரதமர் அலுவலகம் விரும்புவதாக கூறுவது, அரசியல் சட்டம் அளித்துள்ள சமூக நீதியை தட்டிப்பறிக்கும் செயல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக அரசு, அநீதியான பவுண்டேசன் கோர்ஸ் தேர்வு முறையைப் புகுத்துவதாக  மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.  சிவில் சர்வீஸ் தேர்விலும், ஒரு வகையான நீட் தேர்வை அறிமுகப்படுத்தி, இளைஞர்களின் கனவை சிதைக்க மத்திய அரசு முயற்சிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், புதிய விதிகளை கைவிடாவிட்டால், திமுக சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Label