OUR CLIENTS
காலச்சக்கரம் நாளிதழ் செய்தி எதிரொலி! காட்பாடி பள்ளிக்குப்பம் ஏரியில் மண் கடத்தல் தடுத்து நிறுத்தம்!
காலச்சக்கரம் நாளிதழ் செய்தி எதிரொலி! காட்பாடி பள்ளிக்குப்பம் ஏரியில் மண் கடத்தல் தடுத்து நிறுத்தம்! Posted on 24-May-2018 காலச்சக்கரம் நாளிதழ் செய்தி எதிரொலி! காட்பாடி பள்ளிக்குப்பம் ஏரியில்  மண் கடத்தல் தடுத்து நிறுத்தம்!

வேலூர், மே 24-

வேலூர் மாவட்டம், காட்பாடி பள்ளிக்குப்பம் ஏரியில் மண் கடத்தல் 24 மணி நேரமும் இடைவிடாது நடைபெறுகிறது. இதற்கு பில் போட்டும், பில் இல்லாமலும் மண் கடத்தல் நடந்து வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு வருவாய்த்துறையினர், காவல் துறையினர், போலி பத்திரிகையாளர்கள் மண் பாரம் ஏற்றிச் செல்லும் டிராக்டர்கள், வேன்கள், மண்பாடில லாரிகளிடம் வசூல் வேட்டை நடத்தி வந்தனர்.

பள்ளிக்குப்பம் ஏரியானது அருப்புமேட்டில் உள்ள ஏரியை விட பெரிய அளவில் உள்ளது. இங்கு ஒருபுறம் மணல் திருட்டும் நடக்கிறது. ஒருபுறம் வருவாய்த்துறையைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பில் போட்டு மண் பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அரசு முத்திரையிட்ட ரசீது வழங்கி வருகிறார். இந்த மண் பாரத்தை முறைப்படியும், முறைகேடாகவும் பள்ளிக்குப்பம் மற்றும் அந்த சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் எடுத்துச் சென்று விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். இந்த மண் டிராக்டர் லோடு ஒன்று ரூ.1500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படி அரசுக்கு செலுத்தி விட்டு ரசீது பெற்றுக் கொண்டு லோடு ஏற்றிச் செல்லவே பாரம் ஒன்றுக்கு பில் போடும் வருவாய்த்துறை ஊழியருக்கு டிப்ஸ் என ரூ.500, பெட்ரோல் செலவு என ரூ.200 என ரூ.700 வசூல் செய்து கொள்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. விருப்பமிருந்தால் தொழில் செய், இல்லையென்றால் வேறு எங்காவது சென்று விடுங்கள் என்று விரட்டியடிக்கிறாராம் அந்த வருவாய்த்துறை ஊழியர். ஆக மொத்தத்தில் மீதமுள்ள தொகையான ரூ.800 தான் ஒரு நடைக்கு வாகன ஓட்டுநர்களுக்கு கிடைக்கிறதாம். இப்படி கறாராக வசூல் வேட்டை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து அந்தப்பகுதி இளைஞர்கள் காவல் துறைக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளனர். காவல் துறை வந்தாலாவது தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று அவர்கள் நம்பி அழைத்துள்ளனர். ஆனால் நடந்தது என்னவோ காவல் துறையை அழைத்து தங்களுக்கு தாங்களே ஆப்பு வைத்து கொண்டது போல ஆகிவிட்டது. அதாவது, மண் கடத்தல் நடப்பதை புகார் வாயிலாக தெரிந்து கொண்டு காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் கார்த்தி சக போலீஸ்காரர் ஒருவரை பள்ளிக்குப்பம் ஏரிக்குச் சென்று ஆய்வு செய்து வருமாறு கூறி அனுப்பியுள்ளார். ஆனால் அங்கு நடந்ததோ வேறு விஷயம். அவரும் கடந்த சனிக்கிழமை (19ம் தேதி) பிற்பகல் பள்ளிக்குப்பம் ஏரிக்குச் சென்றுள்ளார். அவர் தனியாக செல்லாமல் அவருடன் போலி செய்தியாளர் ஒருவரை அழைத்துச் சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. காவல் துறை ஆசிர்வாதத்துடன் அந்த போலி செய்தியாளரும் அங்கு முகாமிட்டுள்ளார். அங்கிருந்த வாகனங்களிடம் அந்த போலி செய்தியாளர் அவர்கள் பங்குக்கு ஒரு வாகனத்துக்கு தலா ரூ. 1000 தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி மிரட்டியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு நின்றிருந்த 9 வாகனங்களுக்கும் தலா ரூ.9 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் நீ ரசீது வைத்திருந்தாலும் பரவாயில்லை, வண்டியை காவல் நிலையத்துக்கு எடுத்து வா என்று மிரட்டியுள்ளார் அந்த கடமை வீரரான காவலர். 
இந்த பிரச்னை முடிவுக்கு வராது என்று தெரிந்து கொண்ட டிராக்டர், வேன் ஓட்டுநர்கள் தங்களது வாகன உரிமையாளர்களை பள்ளிக்குப்பம் ஏரிக்கு வருமாறு கூறி அழைத்துள்ளனர். அவர்களும் அங்கு வந்து போலீஸ்காரரிடம் பேசிபார்த்துள்ளனர். ஆனால் வேலை முடிந்தபாடில்லை. இதனால் நொந்துபோன அந்த வாகன உரிமையாளர்கள் ஒவ்வொரு வாகனத்துக்கும் தலா ரூ.ஆயிரம் வீதம் 9 வாகனங்களுக்கும் பணம் செலுத்திவிட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து வாகன உரிமையாளர் ஒருவர் கூறுகையில், நாங்கள் மண் கடத்தவே இல்லை. அரசு ரசீது செலுத்திவிட்டு பணம் கட்டி விட்டுதான் மண் பாரம் ஏற்றிச் செல்கிறோம். ஆனால் ரசீது இருந்தால் என்ன, இல்லையென்றால் என்ன பணம் தர வேண்டும் என்று போலி செய்தியாளருடன் வந்து ஒரு பொறுப்புமிக்க காவல் துறையினர் எங்களை மிரட்டுவது அராஜகம் ஆகும். நியாயமாக தொழில் செய்பவர்களை போலீசார் தவறான வழியில் செல்ல தூண்டுவது போல் இச்செயல் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார். இவ்வாறு பள்ளிக்குப்பம் ஏரியில் சத்தம் போடாமல் மண் லோடு ஏற்றி கொள்ளையோ கொள்ளை அடித்து வருகின்றனர். அப்புறம் என்ன மணல் கொள்ளையர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது. லஞ்சத்தை ஊக்குவிப்பதையே தொழிலாக கொண்டு வருவாய்த்துறையினரும், காவல் துறையினரும் செய்து வருகின்றனர். 

குற்றவாளிகளை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித்தரும் வேலையை பார்க்காமல் திருடனிடமே இரந்துண்டு வாழ்வது மிகவும் கேவலமாக உள்ளது. காவல் துறையின் கம்பீரத்துக்கு சின்னமாக உள்ள அவரது தொப்பியில் உள்ள சிங்கத்தை காண்பித்து திருட்டு லோடு மண் கடத்துவோர் மற்றும் முறையாக மண் லோடு ஏற்றிச் செல்வோரிடம் தலைவணங்கி மாமூல் என்ற போர்வையில் வசூல் வேட்டை நடத்துவது மிகவும் வெட்ககேடானது. கம்பீரமாக இருக்க வேண்டிய காவல் துறை இப்படி பணத்துக்காக செயல்படுவது வேதனைக்குரியதாகும். சரி இவர்கள்தான் அரசு அலுவலர்கள் என்றால் போலி செய்தியாளர்களுக்கு ஆசி வழங்க வேண்டிய அவசியம் என்ன? அவரது கட்டுப்பாட்டில் காட்பாடி காவல் நிலையம் இயங்குகிறதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அன்று வசூலான தொகையை அங்கேயே மண் பாடி லாரி ஓட்டுநர்கள் மத்தியிலேயே அந்த போலீஸ்காரரும், அந்த போலி செய்தியாளரும் பங்கு போட்டு கொண்டார்களாம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் இந்த விஷயத்திலாவது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், அரசியல் நோக்கர்களும், பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் எதிர்பார்க்கின்றனர் என்று கடந்த 22ம் தேதி காலச்சக்கரம் நாளிதழ் விரிவாக செய்தி வெளியிட்டது.  இதன் எதிரொலியாக பள்ளிக்குப்பம் ஏரியில் மண் எடுக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இயற்கை வளம் காப்பாற்றப்பட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், அரசியல் நோக்கர்களும் காலச்சக்கரத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Label