OUR CLIENTS
கேமராமேன் அசோக்குமார் மறைவுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் இரங்கல்!
கேமராமேன் அசோக்குமார் மறைவுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் இரங்கல்! Posted on 26-May-2018 கேமராமேன் அசோக்குமார் மறைவுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்  தேசிய தலைவர் கா.குமார் இரங்கல்!

 வேலூர், மே 26-
தனியார் தொலைகாட்சி ஒன்றில் கேமராமேனாக பணியாற்றிய அசோக்குமார் மறைவுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் தேசிய தலைவர் கா.குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

வேலூர் சலவன்பேட்டை எஸ்.எஸ்.கே. மானியம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 35). இவர் தனியார் தொலைகாட்சி ஒன்றில் கேமராமேனாக பணியாற்றி வந்தார்.  கஞ்சா விற்பனை குறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தாக கருதி 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக தாக்கி படுகொலை செய்துள்ளனர். இதனால் அசோக்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

கேமராமேன் அசோக்குமார் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அண்ணாரை இழந்து வாடிக் கொண்டிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், சக ஊழியர்கள் அனைவருக்கும், ஆழ்ந்த இரங்கலை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவனடி சேரவேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் அகில இந்திய தலைவர் மற்றும் காலச்சக்கரம் நாளிதழ் நிறுவனருமான கா.குமார் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.  

மேலும், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்குவதுதான் ஊடகம். ஜனநாயகம் என்பதே மக்களுக்கானது தான். ஜனநாயக முறையில் ஊடகங்களின் பணி மிக அதிகமாகவே இருந்து வருகிறது. எங்கோ ஒரு குக்கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க ஊடகங்களால் மட்டும்தான் முடியும். மக்களின் பிரச்சனைகளை பலர் அறியத் தர முடியும். மக்கள் பிரச்சனைகள் குறித்த தீர்வுகளை முன்வைக்கவும், இதன் மூலம் மக்களின் அறிவையும், அவர்களின் மனித ஆற்றலையும் நாட்டின் முக்கியப் பிரச்சனைகளுக்கு பயன்படுத்த தூண்ட முடியும். மக்களின் பிரச்சனைகளை பரவலாக இருக்கும் செய்தியாளர்கள் மூலம் ஆட்சியாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும். ஊடகங்களுக்கு இருக்கும் இத்தகைய பலத்தால் தான் பத்திரிக்கைகளை ஜனநாயகத்தின் நான்காவது தூண்களாக கூறினர். ஜனநாயக நடைமுறையில் ஊடகங்களின் சுதந்திரத்திற்கு அதிக மதிப்பும் கொடுக்கப்பட்டது.

அதனால்தான், 1993ம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் 
“மனித உரிமைகள் சாசனம் - பகுதி 19” இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, “பத்திரிகை சுதந்திரம் ஜனநாயகத்தை வலிமையாக்குகிறது’’ என்று பிரதமர் நரேந்திர மோடி, பத்திரிகை சுதந்திர நாள் வாழ்த்தில் கருத்தும் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மீது வன்முறை தாக்குதல் தொடர்ந்து நடந்தேறியுள்ளது. கடந்த 2014-2015 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 142 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் துப்பறியும் பணியில் ஈடுபட்டவர்கள். அரசியல் மற்றும் மதவாத சக்திகள் இந்திய பத்திரிகையாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறார்கள். இதுபோன்று பத்திரிகையாளர்கள் தாக்குதல் தொடர்கதையாக உள்ளது என்பது ஜனநாயக வெட்க கேடு என்றுதான் கூறவேண்டும். 

மக்கள் பணியாற்றும் உடகத்துறையை சார்ந்தவர்களை தாக்குவதும், அவர்களது பொருட்களை சேதபடுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அவர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் அரசு முறையாக வழங்குவதும் இல்லை. அதுமட்டுமின்றி, அரசிடமிருந்து அவர்களுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை சலுகைகளும் கிடைப்பதில்லை என்பது மிகவும் வேதனையான ஒன்று. 

அரசு கட்டாயம் வழங்க வேண்டிய ஊடக அங்கீகார அட்டையே வழங்குவதில்லை என்பது மிகவும் வேதனையான ஒன்று. 2017, 2018ம் ஆண்டில் அங்கீகார அட்டை வேண்டி விண்ணபித்த  பத்திரிகையாளர்கள் ஒருவருக்குகூட புதிய அங்கீகார அட்டை வழங்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக செய்தி மக்கள் தொடர்பு துறை, தலைமைச் செயலகம் சார்பாக தகவல் அளிக்கபட்டுள்ளது. மக்களுக்காகவும், அரசுக்காக செயல்படும், ஜனநாயக தூணாக விளங்கும் பத்திரிகை துறையை காக்கவேண்டிய அரசே, பத்திரிகையாளரை நசுக்கவது போன்று இச்செயல் உள்ளது.  

மக்கள் பணியாற்றிய கேமராமேன் அசோக்குமார் உயிரிழப்புக்கு  தமிழக முதல்வர் உரிய இழப்பீட்டு தொகையும், அவர் குடும்பத்தாருக்கு மாதந்திர தொகையும் வழங்க வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் தேசிய தலைவர் கா.குமார் கோரிக்கை வைத்துள்ளார். ஜனநாயக தூணாக விளங்கும் பத்திரிகை துறைக்கு உரிய சலுகைகளும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று  தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பத்திரிகை சுதந்திரம்தான் மக்களின் ஜனநாயகத்தை மீட்டெடுக்கிறது என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Label