OUR CLIENTS
கர்நாடக அமைச்சரவையில் ஜனதா தளத்துக்கு நிதித்துறை - காங்கிரசுக்கு உள்துறை
கர்நாடக அமைச்சரவையில் ஜனதா தளத்துக்கு நிதித்துறை - காங்கிரசுக்கு உள்துறை Posted on 01-Jun-2018 கர்நாடக அமைச்சரவையில் ஜனதா தளத்துக்கு நிதித்துறை - காங்கிரசுக்கு உள்துறை

புதுடெல்லி, ஜுன் 1-

கர்நாடக அமைச் சரவையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு நிதித் துறையும், காங்கிரஸ் கட்சிக்கு உள்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கர்நாடக மாநிலத் தேர்தலில் 78 இடங்கள் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 38 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ம.ஜ.க தலைவர் குமாரசாமி கடந்த மே 23 அன்று முதலமைச்சராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான பரமேஸ்வராவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், அம்மாநில அமைச்சரவையில் எந்த கட்சிக்கு என்னென்ன துறைகள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய காங்&மஜத கட்சியினர் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். தற்போது கர்நாடக அமைச்சரவை பட்டியல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்காக காங்கிரஸ்  முன்னாள் தலைவர் சோனியா அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுலும் சென்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள ராகுல், தொலைபேசி வாயிலாக கர்நாடக அமைச்சரவை தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார். டெல்லியில் ஐந்து கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு நிதித்துறையும் காங்கிரஸ் கட்சிக்கு உள்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து டெல்லி பேச்சு வார்த்தையில் பங்கேற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் தானிஷ் அலி கூறும்போது, ‘ம.ஜ.க&விற்கு கர்நாடக அமைச் சரவையில் நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற இலாகாக்கள் குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பெங்களூரு சென்று கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவ கவுடாவிடம் ஆலோசனை செய்ய உள்ளேன்’ என்றார்.

காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம் நபி ஆசாதின் இல்லத்தில் அஹ்மத் படேல், அசோக் கெலாட் மற்றும் வேணுகோபால் ஆகியோரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தானிஷ் அலி உள்ளிட்டோரும் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Label