OUR CLIENTS
அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதிய அலுவலகம் திறப்பு தினகரன் திறந்து வைத்தார்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதிய அலுவலகம் திறப்பு தினகரன் திறந்து வைத்தார் Posted on 03-Jun-2018 அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதிய அலுவலகம்  திறப்பு  தினகரன் திறந்து வைத்தார்

சென்னை, ஜூன் 3-

சென்னை அசோக்நகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதிய அலுவலகத்தை துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் திறந்து வைத்தார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகம் சென்னை அசோக்நகர் நடேசன் சாலை போலீஸ் பயற்சி கல்லூரி அருகே 2மாடி கட்டிடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர் களுக்கு இனிப்பு வழங்கினார்.

பின்னர் அவர் அலுவலகத்தில் உள்ள தனது அறைக்கு சென்று கட்சி சம்பந்தப்பட்ட கோப்புகளை பார்வையிட்டார். அவரது அறையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா படங்கள் இருந்தன.  முன்னதாக காரில் வந்த தினகரனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தனி மேடையில் டி.டி.வி.தினகரன், தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக நின்று அமோக வெற்றி பெற்றுள்ளோம். இதன் மூலம் மக்களின் ஆதரவும், தொண்டர்களின் ஆதரவும் நம்மிடமே உள்ளது.  இன்று தமிழகத்தில் துரோகிகள் ஆட்சி நடந்து வருகிறது. விரைவில் துரோகிகளை விரட்டி அடிப்போம். ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை கைப்பற்றுவோம். அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம்.

தேர்தலில் நாம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போது இப்போதுள்ள துரோகிகள் யாரையும் கட்சியில் சேர்க்கமாட்டோம்.  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு அலுவலகம் தேவை என்பதை உணர்ந்து இடத்தை தேடிக்கொண்டு இருந்தோம். 2 மாதத்துக்கு முன்பு இந்த இடத்தை முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா வழங்கினார். இந்த இடம் போதுமானதாக உள்ளது. இங்கிருந்து நாம் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளோம். விரைவில் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம். தமிழக மக்களுக்கு நல்லாட்சி தருவோம்.

தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூட சொல்ல முடியாமல் திராணியற்ற முதல்வராக எடப்பாடி உள்ளார். சட்டசபையில் தூத்துக்குடி போராட்டத்தை அடக்கி விட்டோம் என்று பெருமைபட பேசுகிறார்.  சுயநலத்துக்காக துரோக செயல்களில் ஈடுபட்டு வரும் இவர்களை தமிழக மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். விரைவில் இதற்கு தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்

இரட்டை இலை சின்னத்தை மீண்டும் மீட்டெடுப்போம். புரட்சித்தலைவி ஆட்சியை மீண்டும் அமைப்போம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வெற்றி பெறுவோம். மீண்டும் கோட்டைக்குள் செல்வோம்.  இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சசிகலா புஷ்பா எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் இசக்கி சுப்பையா, பழனியப்பன், செந்தில்பாலாஜி, செந்தமிழன், நிர்வாகிகள் கலைராஜன், சந்தான கிருஷ்ணன். அம்பத்தூர் பகுதி செயலாளர் கே.எஸ். வேதாசலம், டி.ஈஸ்வரன், துறைமுக பகுதி செயலாளர் இ.பி.பாண்டியன், சேப்பாக்கம்- திருவல்லிக் கேணி பகுதி செயலாளர் எல்.ராஜேந்திரன், தென் சென்னை எஸ்.கே.துரைராஜ், அண்ணாநகர் என்.எஸ்.விஜயன், ஏ.பி.சாகுல்அமீது, துருக்கி ரபீக்ராஜா, சி.பி. ராமஜெயம், கனகராஜ், அப்பாஸ், அபிராமி ஜி.பாலாஜி, கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Label