கலைஞர் 95வது பிறந்தநாளில் வாழ்த்துப் பெற்று மகிழ்ந்த மு.க. ஸ்டாலின் Posted on 03-Jun-2018
சென்னை, ஜூன் 3-
உலகத் தமிழ் மக்களின் சிந்தையெல்லாம் நீக்கமற நிறைந்து-நெஞ்சினில் நித்தமும் இனிக்கும் ஆருயிர்த் தலைவர் கலைஞர் அவர்களின் 95வது பிறந்தநாளில், அவரிடம் வாழ்த்துப் பெற்று மகிழ்ந்தேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்திய அரசியலின் மூத்த தலைவராகவும், தமிழ்நாட்டு அரசியல் சக்கரம் சுழல்வதற்கான அச்சாணியாகவும் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் திகழும் தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்வும் வளமார்பணியும், தமிழ் மொழிக்கும்-தமிழ் இனத்திற்கும்-தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும்துணையாக இருக்கின்றன.
ஓய்வறியாச் சூரியனாக உழைத்த தலைவர் தற்போது ஓய்வில் இருப்பதுகூட, அவரது உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்வைத் தந்து மீண்டும் அவர், ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என்று அந்த மந்திரச் சொற்களால், தமது காந்தக் குரலில் நம்மையெல்லாம் அழைப்பதற்காகத்தான் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். நம்மைத் தொடர்ந்து வழிநடத்திட, நூறாண்டு கடந்து வாழவேண்டும் என தலைவர் கலைஞர் அவர்களை அனைவரும் வாழ்த்திடுவோம்! வணங்கிடுவோம்!. இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்