OUR CLIENTS
ஹோட்டல்களில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பேப்பர்களில் உணவு பொட்டலம்!
ஹோட்டல்களில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பேப்பர்களில் உணவு பொட்டலம்! Posted on 04-Jun-2018 ஹோட்டல்களில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பேப்பர்களில் உணவு பொட்டலம்!

வேலூர், ஜூன் 4-
            வேலூரில் பல ஹோட்டல்கள் மற்றும் பிரியாணி கடைகள், ரோட்டோர தள்ளுவண்டி கடைகளிலும் தடை செய்யப்பட்ட பாலிதீன் பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் பார்சல் செய்து நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பிளாஸ்டிக்கில் உள்ள நச்சு தன்மை உணவில் கலப்பதால் கேன்சர் போன்ற அபாயகரமான நோய்கள் ஏற்படுகின்றன. 
                வேலூருக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கோயில்கள் மற்றும் சிஎம்சி மருத்துவமனை, விஐடி பல்கலைக்கழகம் என்று பல்வேறு அலுவல் காரணமாக ஆயிரக்கணக்கில் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இப்படி மக்கள் புழக்கம் அதிகம் காணப்படும் பகுதியாக வேலூர் திகழ்கிறது. ஆனால் ஹோட்டல்களை பொறுத்தவரை அவர்கள் விருப்பம்போல உணவு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். சைவம் என்று பார்த்தால் விலைதான் தாறுமாறாக இருக்கிறது. எதை எடுத்தாலும் ரூ.150க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. அசைவ வகைகளை பொறுத்தவரை ரூ.200க்கு மேல்தான் விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. 
        இப்படி விற்பனை செய்யப்படும் ஹோட்டல்களில் வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரியாணி கடையும் ஒன்றாகும். இங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மைக்ரான் அளவு சரிபாராமல் உள்ள பாலிதீன் கவர்களை வாங்கி வந்து பார்சல் வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். வெங்காய பச்சடி, கத்தரிக்காய் கொஸ்து போன்றவைகளும் சிறிய பாலிதீன் பேக்குகளில் அடைத்து தரப்படுகிறது. பிரியாணி சுடச்சுட இருப்பதால் அதன் ஆவி வெளியே போக முடியாமல் பிளாஸ்டிக் பையில் தஞ்சமடைந்து விடுகிறது. செலபோன் பேப்பர்களில் பார்சல் கட்டி தரப்படுகிறது. 
                இதனால் வேதி விளைவுகள் ஏற்பட்டு விஷமாக மாறும் அபாயமும் நேரிடுகிறது. இதை பல நுகர்வோர்கள் உணருவது இல்லை. பாலிதீன் பைகளுக்கு பதிலாக வாழை இலைகளை பயன்படுத்தலாம். இதைவிடுத்து பாலிதீன் பைகளை தவிர்ப்பது நல்லது என்று பல சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த அசைவ உணவில் சுவையை மேலும் கூட்ட அஜினமோட்டோ வேறு சேர்க்கப்படுகிறது. இவை அப்பண்டிக்ஸ் என்னும் குடல்வால்வு வளர வழிவகை செய்கிறது. பாலிதீன் பைகளில் சுடச்சுட உணவு வாங்கி பயன்படுத்துவோருக்கு புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் பரவவும் வாய்ப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் அடிக்கடி எச்சரித்து வருகின்றனர். இப்படி நமக்கு தெரியாமல் பேராபத்துகள் நிறைந்த பாலிதீன் பைகளை நுகர்வோர் தலையில் கட்டி கொள்ளை லாபம் பார்த்து வருகிறது  பிரியாணி  கடைகள் மற்றும் ஹோட்டல் நிர்வாகம் என்று சொன்னால் அது மிகையாகாது. பிரியாணி தவிர குஷ்கா விற்பனை என்பதே இல்லை என்று   பிரியாணி நிர்வாகத்தினர் கறாராக சொல்லி விடுகின்றனராம். கொள்ளை லாபம் பார்ப்பதையே தொழிலாக கொண்டு இயங்கி வருகிறது இந்த   பிரியாணி ஹோட்டல். 
            வேலூர் மாநகராட்சியில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர் இந்த ஹோட்டல்களை ஆய்வு செய்ததாக இதுநாள் வரை எந்தவித தகவலும் இல்லை என்றே சொல்லலாம். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பிரபலமான சில ஹோட்டல்களில் உள்ள குளிர்சாதன பெட்டிகளை ஆய்வு செய்தால் 10 நாட்களுக்கு மேற்பட்ட கோழி இறைச்சிகள், ஆட்டு இறைச்சிகள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு அவற்றையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது என்கின்றனர் பல நுகர்வோர். 
அன்றைக்கு தயாரிக்கப்பட்ட புதிய இறைச்சிகளை   பிரியாணியில் பயன்படுத்துவதே இல்லை என்ற அதிர்ச்சி தரும் தகவல்களும் வெளியாகி உள்ளது. இதேபோன்று வேலூர் மாநகரில் இயங்கும் பல அசைவ ஹோட்டல்களிலும் நடந்து வருகின்றன. இதற்கு பின்னணியில் இருப்பது என்னவென்றால் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டு, நமக்கு பின்னால் சங்கம் உள்ளது என்று தைரியாக தில்லு முல்லுகள் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். இந்த சங்கத்தை பார்த்துதான் வேலூர் மாநகராட்சி அலுவலர்கள் பின்னுக்கு செல்கின்றனரா? என்ற சந்தேகம் சமூக ஆர்வலர்கள்  மத்தியில் எழுந்துள்ளது. 
         குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஃபுட் பாய்சன் போன்ற வயிறு உபாதைகள் இதுபோன்ற நாட்பட்ட இறைச்சிகளை உண்பதால் ஏற்படுவதாக கூறப்படுகிறது. உண்ணும் உணவே விஷமாக மாறும் அபாயமும் உள்ளது. கோழி இறைச்சியை காலை சமைத்ததை இரவு உண்ணக் கூடாது என்று கூறுவதுண்டு. இது பல வீடுகளில் இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில்    இது போன்ற ஹோட்டல்களை கண்காணித்து உணவு கட்டுப்பாட்டு அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் ராமன், மாநகராட்சி ஆணையர் விஜயகுமார் இதுபோன்ற ஹோட்டல்கள் மீது ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 
            நுகர்வோர்களை மனிதர்களாக  இந்த ஹோட்டலில் பணியாற்றும் பணியாளர்கள் மதிப்பதில்லை என்றும், ஒருமையில் பேசுவது, அவர்கள் மனது நோகும் அளவுக்கு நடந்து கொள்வதாகவும் பலதரப்பட்ட புகார்கள் வருகின்றன.   இது போன்ற ஹோட்டல்களில் சாப்பிடுவது என்பது காசு கொடுத்து சூனியம் வைத்து கொள்வதாகும். இது போன்று பணம் கொடுத்து சாப்பிட்டு விட்டு பலதரப்பட்ட நோய்களுக்கு நுகர்வோர் ஆளாக  வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது உடனடியாக போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. உணவே மருந்து என்று ஒருபுறம் வலியுறுத்தி வருகின்ற வேளையில் உணவே விஷமாக மாறுவதற்கு நாம் தெரிந்தோ, தெரியாமலோ அனுமதி அளிக்க கூடாது. குறிப்பாக அசைவ உணவுகள் தயாரிக்கும் உணவகங்களில் நுகர்வோர்களின் உடல் நலனை கவனத்தில் கொள்ளாமல் யாரோ சாப்பிட்டு விட்டு செல்லப்போகிறார்கள், நமக்கென்ன என்று அலட்சியப் போக்குடன் நடந்து கொள்கின்றனர் ஹோட்டல் நிர்வாகத்தினர். இந்த நிலை மாற வேண்டும். பலருக்கு   ஹோட்டல்களில் சாப்பிட்டவுடன் அஜீரண கோளாறு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் பாலிதீன் பைகள் இல்லாத நிலைக்கு இந்த  ஹோட்டல்களை வேலூர் மாநகராட்சி நகர் நல அலுவலர், சுகாதார ஆய்வாளர், உணவு கட்டுப்பாட்டு அலுவலர்கள் மாற்றியமைக்க வேண்டும் என்று வேலூர் மாநகர மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். வேலூர் மாநகராட்சியை கிரீன் சிட்டியாக மாற்றுவதற்கு முன்னால் பொதுமக்க ள் நலமுடனும், நோய்நொடியில்லாமல் வாழவும் மாநகராட்சி நிர்வாகம் வழிவகை செய்ய  வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.     
             பிளாஸ்டிக் பொருட்களின் கழிவு நிலத்தடி நீரில் கலப்பதால் குழந்தைகளின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது.  இத்தகைய பாலிதீன் பைகள் சாக்கடைகளை அடைத்து  சாக்கடை நீரோட்டத்தைத்தடுத்து, கொசு உற்பத்தியாகி  கொடிய நோய்கள்  ஏற்பட வழிவகுக்கிறது.  இதன் பயன்பாட்டை உடனடியாக நிறுத்தவேண்டும்.
            மாநகராட்சி முதலில் இதுபோன்ற உணவு பொட்டலங்களுக்கு பயன்படுத்தும் பாலிதீன் பேப்பர் முறையை அடியோடு ஒழிக்கவேண்டும்.  சாக்கடைகளில் அடைத்திருக்கும் பாலிதீன்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பணத்தை வாங்கி கொண்டு மாநகராட்சி அலுவலர்கள் மௌனம் சாதிக்கிறார்களா? என்பதும் சிதம்பர ரகசியமாக உள்ளது. இதுபோன்ற அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ளும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாநகர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
          ஹோட்டல்களில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சியின் பிளாஸ்டிக் ஃப்பிரியாக மாற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதையும், துறைவாரியான  ஒட்டுமொத்த செயல்பாடுகளை யும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label