OUR CLIENTS
கூட்டாட்சி அமைப்பின் முக்கிய இணைப்பு ஆளுநர்கள்
கூட்டாட்சி அமைப்பின் முக்கிய இணைப்பு ஆளுநர்கள் Posted on 04-Jun-2018 கூட்டாட்சி அமைப்பின் முக்கிய இணைப்பு ஆளுநர்கள்

புதுடெல்லி, ஜுன் 5-

டில்லியில் நேற்று துவங்கிய ஆளுநர்களுக்கான 2 நாள் மாநாட்டில் பேசிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கூட்டாட்சி அமைப்பின் இணைப்பாக ஆளுநர்கள் உள்ளதாக கூறினார்.

மாநில ஆளுநர்கள் பங்கேற்கும் 49ஆவது மாநாடு டில்லி குடியரசு தலைவர் மாளிகையில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு மொத்தம் 6 அமர்வுகளாக நடைபெற உள்ளது. இதில், முதலாவது அமர்வில் நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடக்க உரை ஆற்றினார். இதில் பேசிய குடியரசு தலைவர்,”மாநில அரசுகளின் வழிகாட்டியாக விளங்கும் ஆளுநர்கள் கூட்டாட்சி அமைப்பின் இணைப்பாக விளங்குகின்றனர்” என்று கூறினார்.

”மாநிலத்தில் உள்ள மக்கள், அங்குள்ள ஆளுநரின் அலுவலகம் மற்றும் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனை கொள்கை மற்றும் மதிப்புகளின் ஊற்றாக பார்க்கின்றனர். நமது நாட்டில் வசதிகள் இல்லாமல் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஆளுநர்கள் எடுக்கவேண்டும்” என்று ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டார். “ஆளுநர்களாகிய நீங்கள், இளைஞர்களின் பாதுகாவலர்கள். இளைஞர்களை ஊக்குவித்து நன்மதிப்புகளை அவர்களிடம் வளர்க்கவேண்டும்.நவீன கல்வியை பெறவும், இந்திய பண்பாட்டினை பின்பற்றவும் அவர்களை ஊக்குவிக்கவேண்டும். நமது நாடு மற்றும் சமூகத்தின் நலனை கருத்தில்கொண்டும் எதிர்கால சந்ததியினரை கருத்தில்கொண்டும் இதனை நீங்கள் செய்யவேண்டும்” என்று கூறினார்.

இந்த அமர்வில் அமர்வில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்துடன், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி விரிவாக உரையாற்றினார். ”பழங்குடியினர் அதிகம் வாழும் மாநிலங்களில் அரசு கொண்டுவரும் திட்டங்கள் அவர்களுக்கு முழுமையாக சென்றடைகிறதா என்பதை உறுதிபடுத்த ஆளுநர்கள் உதவவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். ”நமது நாட்டின் அரசியலமைப்பு கட்டமைப்பு மற்றும் கூட்டாட்சி அமைப்பில் ஆளுநரின் பணி மிகவும் முக்கிய பங்கு வகித்து வருகின்றது” என்று மோடி கூறினார். நம் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பழங்குடியின மக்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களது பெருமை மற்றும் வரலாற்றை அவர்களுக்கு எடுத்து கூற டிஜிட்டல் அருங்காட்சியகம் போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

மத்திய அரசின் நலதிட்டங்கள் அனைத்தும் சரியாக செயல்படுத்தப்படுகிறதா? மக்கள் நலத்திட்டங்களால் பலன் பெறுகிறார்களா ? என்பது குறித்து ஆளுநர்கள் ஆய்வு நடத்த வேண்டும். வரும் ஜூன் 21ம் தேதி உலக யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. பல்கலைகழகத்தின் வேந்தர்களான ஆளுநர்கள் அன்றைய தினத்தில் மாணவர்கள் மத்தியில் யோகா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மகாத்மா காந்தியடிகளின் 150ம் ஆண்டு பிறந்த நாளையும் பல்கலைகழகங்கள் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும்.

சமீபத்தில் மின் இணைப்பு பெற்ற கிராமங்களுக்கு ஆளுநர்கள் நேரில் சென்று மக்களிடம் பேசி மின்சாரம் எந்த வகையில் அவர்கள் வாழ்க்கை நிலையை மேம்படுத்த உதவுகிறது என்று ஆய்வு நடத்த வேண்டும் என மோடி தெரிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 50ஆவது ஆளுநர்கள் மாநாட்டினை நடத்துவதற்கான திட்டங்கள் குறித்து இப்போது இருந்தே வகுக்க தொடங்குமாறு என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Label