OUR CLIENTS
வங்கிகள் யாருக்காக இயங்குகிறது? வாடிக்கையாளர்கள் அடிக்கடி அவதி!
வங்கிகள் யாருக்காக இயங்குகிறது? வாடிக்கையாளர்கள் அடிக்கடி அவதி! Posted on 06-Jun-2018 வங்கிகள் யாருக்காக இயங்குகிறது? வாடிக்கையாளர்கள் அடிக்கடி அவதி!

வேலூர், ஜூன் 6-

நாடெங்குமுள்ள வங்கி ஊழியர்கள் கடந்த மாதம் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (மே 30 மற்றும் 31) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இரு நாள்களிலும் சுமார் ரூ.40,000 கோடிக்கும் மேற்பட்ட காசோலைப் பரிவர்த்தனை நடைபெறவில்லை.
ரொக்கப் பரிவர்த்தனை தனி. வங்கிகளின் ஏடிஎம்-கள் இயங்காததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். அடிக்கடி வங்கி பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். வாடிக்கையாளர்களை மறந்துவிட்டனர்.

 கடந்த பத்து ஆண்டுகளில் வங்கித்துறையில் மிகப் பெரிய சீர்திருத்தம் ஏற்பட்டுள்ளது. தனியார் வங்கிகளின் வரவுக்குப் பின்னர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் நடவடிக்கைகளிலும் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஊழல் என்று எடுத்துக் கொண்டால் அரசும் தனியார் வங்கிகளும் ஒன்றையொன்று மிஞ்சும் அளவுக்குத்தான் போய்க் கொண்டிருக்கின்றன. நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பலவற்றில் ஒரு கட்டத்தில் வாராக்கடன்கள் அதிகரித்தன. கண் மண் தெரியாத அளவுக்கு மிகப் பெரிய தொழிலதிபர்களுக்கு(?) வாரிக் கொடுத்தனர். அவர்கள் சுருட்டிக் கொண்டு ஓடினர். இப்போது அந்தப் பிரச்னைகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு என்ன பலனென்ற தகவல்கள் எப்போது வெளிவரப்போகின்றனவோ தெரியாது. ஐசிஐசிஐ பிரச்னை மட்டும் இப்போது வெளியே வந்துள்ளது.

 பாரத ஸ்டேட் வங்கியின் காலாண்டு லாபத்தை விட அப்பாவிப் பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்கவில்லை என்று அபராதம் வசூலித்த தொகை அதிகம். பாரத ஸ்டேட் வங்கியின் அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இப்போதெல்லாம் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் பணம் கட்டுவதற்கும் எடுப்பதற்கும் அதிகபட்ச எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கணக்கு வைத்துள்ள வங்கியில் இத்தனை முறைதான் எடுக்கலாம், பிற வங்கிகளில் இத்தனை முறைதான் எடுக்கலாம். அதற்கும் மேல் நமது பணத்தை எடுக்கவே நாம் கட்டணம் செலுத்த வேண்டும். இது ரிசர்வ் வங்கியின் உத்தரவு. குறிப்பிட்ட வங்கிகளின் ஏடிஎம்கள் இயங்காதபோது வங்கிகள் வாடிக்கையாளர் கணக்கில் அபராதத் தொகை செலுத்த வேண்டும் என்று ஏன் ரிசர்வ் வங்கி உத்தரவிடக் கூடாது? ஏடிஎம்களில் எடுக்கப்படும் பணம் தொடர்பான கணக்குகளும் வங்கிக்குத் தெரியுமல்லவா? இப்போது வங்கிகளின் கட்டமைப்பும் மாறிவிட்டது. குளிர்பதன வசதியுடன் கூடிய அறைகள். 24 மணி நேரமும் பணம் எடுக்கவும் செலுத்தவும் ஏடிஎம், பணம் செலுத்தும் இயந்திர வசதிகள், பாஸ் புத்தகத்தில் கணக்கு பதிவு செய்யவும் தேவையான வசதிகள். அதாவது, முடிந்த அளவு வங்கிக்கு வராதே என்று சொல்கின்றனர். வங்கி ஊழியர்களும் இன்று முகம் கொடுத்துப் பேசும் நிலையில் இல்லை. ஆனால் நேரடியாக வருவதை விட ஏடிஎம்-களில் பணம் எடுப்பதால் வங்கிக்குக் கூடுதல் செலவுதான். ஒரு காலத்தில் வங்கியே தேவையில்லை என்ற நிலை இருந்தது. கடன் கொடுக்கவும், நகையை அடமானம் வைத்துப் பணம் வாங்க மட்டுமே என்றிருந்த வங்கி, இப்போது அனைவருக்கும் அத்தியாவசியம் என்றாகிவிட்டது. இப்போதும் நகையை அடமானம் வைக்கலாமென்றாலும் அச்சமாகத்தான் உள்ளது. வங்கி ஊழியர் உதவியோடு அல்லது நகை மதிப்பீட்டாளர் உதவியோடு கொள்ளையர்கள் திருடிச் சென்றதாக செய்திகள் வருகின்றன. போலீஸார் பலமுறை கூறியும் வங்கிகளுக்கு இன்னமும் இரவுக் காவலர்களைப் பெரும்பாலான வங்கிகள் நியமிக்கவில்லை.

 வங்கியின் மூலமாகத்தான் அனைத்துப் பரிமாற்றங்களும் என்ற நிலை இப்போது வந்துவிட்டது. ஆனால், இது அனைத்துமே பெரும் பணம் படைத்த கார்ப்பரேட் தொழிலதிபர்களுக்கு என்றாகிவிட்டது. அரசும் அவர்களுக்குத்தான் ஆதரவாக இருக்கிறதே தவிர சாதாரண மக்களுக்கு உதவும் எண்ணத்தில் இல்லை. வங்கிகள் தேவைக்கேற்பக் கடன் வழங்காததால்தான் மக்கள் தனியாரிடம் கடன் பெறுகின்றனர். ஒரு சில இடங்களில் மனிதாபிமானமிக்க மேலாளர்கள் துணிந்து சாமானியர்களுக்கும் கடன் வழங்குகின்றனர். அந்த இடங்களில் மக்கள் கடனைத் திருப்பிச் செலுத்தித்தானே வருகின்றனர்.இவ்வளவு ஏன், உரிய தகுதிகள் இருந்தும் கல்விக் கடன் வழங்குவதற்கு மறுக்கும் வங்கிகள் எத்தனை? தந்தையின் “சிபில்’ விவரம் சரியில்லை, உங்களுக்கு இவ்வளவுதான் கடன் தகுதி என்று சொல்லும் வங்கியாளர்கள் பற்றிய புகார்களைச் சொல்வதென்றால் விசாரணை அதிகாரிகளுக்கு இது மட்டுமே வேலையாக இருக்கும். கல்வி தடைபட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் கடன் வாங்குகிறார்கள். ஆனால் அதிலும் கல்விக்கூடங்கள் கேட்கும் தொகையையும் குறைத்தால் என்ன செய்வார்கள் அப்பாவிப் பொதுமக்கள்.

 முன்கூட்டியே கடனை செலுத்தினால் அபராதம் வேறு. உரிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காகவா? அல்லது இதுவும் வாராக்கடனாக வேண்டும் என்பதற்காகவா? முன்கூட்டியே கடனைச் செலுத்தினால் கூடுதல் சலுகைதானே தர வேண்டும். வங்கி நிர்வாகங்கள் இதுகுறித்துச் சிந்திக்க வேண்டும். சாதாரண மக்கள் தங்கள் உடலை வருத்தி, உதிரத்தைத் தந்து சம்பாதிக்கும் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர். அதை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கின்றன வங்கி நிர்வாகங்கள். கார்ப்பரேட் நிறுவனங்களின் பரிவர்த்தனை அதிகமாக இருக்கலாம். ஆனால் சாதாரண மக்கள் ஒரே நாளில் சென்று தங்கள் தொகையைத் திரும்ப எடுக்கும் சூழ்நிலை வந்தால் அனைத்து வங்கிகளும் திவாலாகிவிடும் என்பதைக் கவனத்தில் கொண்டு வங்கி நிர்வாகங்கள் செயல்பட வேண்டும். இனிமேலாவது வங்கிகள் சாதாரண மக்களுக்காகச் செயல்படும் சூழ்நிலை உருவாக வேண்டும். “வாடிக்கையாளரே முக்கியம்‘ என்று போர்டு வைத்தால் மட்டும் போதாது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களை நாய்களை விரட்டுவது போன்று விரட்டுவதை பல வங்கிகள் வாடிக்கையாக கொண்டுள்ளன. சில வங்கிகள் வாடிக்கையாளர்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை. இப்படி வாடிக்கையாளர்களே தெய்வம் என்ற நிலைக்கு வங்கியில் பணியாற்றுவோர் மாற வேண்டும். எப்படி அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை பள்ளியில் சேர்த்து விடுகின்றனரோ அதேபோன்று வாடிக்கையாளர்களை வங்கியில் சேர்க்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.

Label