OUR CLIENTS
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? ஸ்டாலின் கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் !
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? ஸ்டாலின் கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் ! Posted on 07-Jun-2018 பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா?  ஸ்டாலின் கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் !

சென்னை, ஜுன் 7-

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக சட்டப்பேரவையில், திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது பேசிய  ஸ்டாலின் கேரளாவை போன்று தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்மீது துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசிய பேச்சு விவரம் வருமாறு: கேரள மாநிலத்தில் ஏற்கெனவே பெட்ரோல் மீது இருந்த மதிப்புக் கூட்டு வரி 31.8 சதவீதம். டீசல் மீதான வரி 24.5 சதவீதம்.  ஜூன் முதல் தேதியிலிருந்து  இந்த வரி பெட்ரோல் மீது 30.11 சதவீதமாகவும், டீசல் மீது 22.77 சதவீதமாகவும் குறைக்கப் பட்டுள்ளது.  இதற்குமேல் கேரளாவில் மேல் வரியும் விதிக்கப்படுகிறது. 

தமிழ்நாட்டில் தற்போது பெட்ரோல் மீது விதிக்கப்படும் மதிப்புக் கூட்டு வரி 34 சதவீதம்.  டீசல் மீதான இந்த வரி தற்போது 25 சதவீதம். கேரளாவில் இந்த வரிமீது மேல்வரியும் விதிக்கப்படுகிற சூழல் ஏற்பட்டிருக்கிறது. கேரளாவில் உள்ள சில்லரை விலையைவிட, சென்னையில் பெட்ரோல், டீசலுக்கான சில்லரை விலை குறைவாகத்தான் உள்ளது என்பதை நான் மாண்புமிகு உறுப்பினர்களுக்கு தெளிவாக குறிப்பிட்டுக்கூற கடமைப்பட்டிருக்கிறேன். ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி, தமிழ்நாட்டை விட கூடுதலாகவே உள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள், அடிப்படை விலையை அவ்வப்போது மாற்றி நிர்ணயிக்கின்றன. தற்போது இந்த விலை ஏறுமுகமாக உள்ளதால், விலை உயர்ந்து வருகிறது.  சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறையும்போது, இந்த விலையும் குறையும். எனவே இந்த ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றாற்போல், மதிப்புக் கூட்டு வரியை மாற்றி அமைப்பது, இயலாத ஒன்று.  பொருட்கள் மற்றும் சேவை வரிகள் அமலாக்கப்பட்ட பின், ஜிஎஸ்டி மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வரிகள், பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியும், மதுபானங்கள் மீதான வரிகள் மட்டுமே நம் அதிகாரத்தில் இருக்கிறது.

பொருட்கள் மற்றும் சேவை வரியிலும், 2017&2018 ஆம் ஆண்டுக்கான இழப்பீடு 1,120 கோடி ரூபாய் இன்னும் நிலுவையில் வராமல் உள்ளது. எனவே, கேரளாவின் சூழ்நிலை வேறு.  நமது மாநிலத்தின் சூழ்நிலை வேறு.  எனவே கேரளா வரிக் குறைப்பு செய்ததைப்போல், நாமும் செய்ய முடியுமா என்பதைக் கூர்ந்து பரிசீலிக்க வேண்டும் என்றும் இதுகுறித்து முதலமைச்சர் அவர்களிடம் கலந்தாலோசனை செய்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்பதை எதிர்கட்சியில் அமர்ந்தி ருக்கின்ற தலைவர்களுக்கு தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன். இவ்வாறு, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசினார்.

Label