OUR CLIENTS
திண்டிவனம் பேருந்து நிலையத்தில் பழுதடைந்த கட்டடத்தால் உட்கார இடமின்றி பயணிகள் அவதி!
திண்டிவனம் பேருந்து நிலையத்தில் பழுதடைந்த கட்டடத்தால் உட்கார இடமின்றி பயணிகள் அவதி! Posted on 07-Jun-2018 திண்டிவனம் பேருந்து நிலையத்தில் பழுதடைந்த  கட்டடத்தால் உட்கார இடமின்றி பயணிகள் அவதி!

திண்டிவனம், ஜூன் 7-

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் உட்காரவே இடமின்றி பயணிகள் இடம் தேடி அலையும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் இருப்பதால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

 திண்டிவனத்தில், ரயில்வே லைன் அருகில் இந்திராகாந்தி பேருந்து நிலையம் கடந்த 1971ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்திருந்து செஞ்சி, திருவண்ணாமலை, சாத்தனூர்அணை, மேல்மலையனூர், ஆரணி, வந்தவாசி, வேலூர், சேத்பட்டு, காஞ்சிபுரம், செய்யாறு, திருத்தணி, திருப்பதி, பெங்களூரு, மயிலம் வழியாக புதுச்சேரி, விழுப்புரம் போன்ற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகள் பேருந்து ஏறி பலர் பயணம் செய்து வருகின்றனர். மேலும் ரெட்டணை, திருவக்கரை, பாதிராப்புலியூர், வந்தவாசி, வீடூர், செஞ்சி, தெள்ளார் போன்ற ஊர்களுக்கும் அரசு, மற்றும் தனியார் நகர பேருந்துகளில் சென்று வருகின்றனர். நூற்றுக்கணக்கான பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கிராமப்புறத்தில் இருந்தும் நகர பேருந்துகளில் வந்து, இங்கு இறங்கி ஏறிச் செல்கின்றனர். இங்கு பயணிகள் வசதிக்காக பேருந்து நிலையம் அருகில் ஹோட்டல்கள்,  பெட்டி கடைகள், பூக்கடை, கூல்டிரிங்ஸ் கடைகள், பழ கடைகள் உள்ளன. நகராட்சியின் ஆண், பெண் இலவச கழிவறை  வசதியும் உள்ளது. பயணிகளுக்கு ஆட்டோ, ஆம்னி வேன், டாக்சி, இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள் பேருந்து நிலைய நுழைவு வாயிலிலே அமைந்துள்ளன. 

இங்கு சராசரி ஐம்பது முதல் எழுபது பேருந்துகள் வந்து செல்கின்றன. பயணிகள் பாதுகாப்பாக பெருமளவில் இங்கு பேருந்துக்காக காத்து இருப்பார்கள். இந்த பேருந்து நிலைய கட்டடங்கள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி போனதால் கட்டடங்கள பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலை ஏற்பட்டது. அதனால் கடந்த ஆண்டு பயணிகள் நலன் கருதி கட்டடங்களுக்குள்   பயணிகள் செல்லாதவாறு நகராட்சியால் தடுப்பு போடப்பட்டு பயணிகளை கட்டடங்கள் அருகில் வரக்கூடாது என எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட்டது. மேலும் பயணிகள் தங்க தற்காலிக மாற்று இடமும் கட்டப்பட்டது.  ஆனால் இந்த மாற்று இடம் சுற்றுச்சுவர் இல்லாமல், பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இங்கு பொருட்களை வைத்துக் கொண்டு பேருந்துக்காக காத்து இருந்தால் பொருட்கள் சுலபமாக திருடு போகின்றன. பக்க தடுப்பு இல்லாததால் மழைசாரல், வெயில், புழுதிகள் அடிக்கின்றன. இதனால் பயணிகள் இங்கு அமர தயக்கம் காட்டுகின்றனர். 

குறிப்பாக இரவு 7 மணிக்கு மேல் சிகப்பு விளக்கு சிங்காரிகள் தொல்லை அதிகம் காணப்படுகிறது. இதனால் ஆண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. பேருந்து நிலையத்தில் முறையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டடத்தை விரைவில் கட்டித்தர நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விட வேண்டும். வரி வசூலித்தால் மட்டும் போதாது. அதற்குண்டான வசதிகளையும் செய்து தர வேண்டியது நகராட்சி நிர்வாகத்தின் தலையாய கடமையாகும். தொடர்ந்து இங்கு நிலவி வரும் பிரச்னைகள் தெரிந்தும் நகராட்சி நிர்வாகம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல அமைதி காப்பதால் எந்தவித பிரயோசனமும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சொந்த ஊர் திண்டிவனம். அவர் வெற்றி பெற்ற தொகுதிதான் விழுப்புரம். அமைச்சரின் சொந்த ஊரில் இப்படி மக்கள் தினந்தோறும் கயிற்று மேல் நடப்பது போன்று போராட்டத்தை சந்தித்து  வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள் சுத்தமும் இல்லை, சரியான தண்ணீர் வசதியும் இல்லை. ஆனால் குத்தகைதாரரோ ஒரு நபருக்கு தலா ரூ.5 அடாவடியாக வசூல் செய்கிறார். இது நகராட்சி நிர்வாகத்தின் காதுகளுக்கு இதுநாள் வரை எட்டாமலா உள்ளது.

இதுபோன்ற கொள்ளையடிக்கும் குத்தகைதாரரின் உரிமத்தை ரத்து செய்து நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு உதவ முன்வர வேண்டும். மழை பெய்தால் போதும் பேருந்து நிலையத்துக்குள் கால் வைக்க முடியவில்லை. துர்நாற்றம் வீசத் தொடங்கி விடுகிறது. இப்படி அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமலே பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. அமைச்சர் சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் உள்ள போது நேரம் இருந்தால் இந்த திண்டிவனம் பேருந்து நிலையத்துக்குள் ஒரு விசிட் செய்து உண்மை நிலையை ஆராய்ந்து நகராட்சிக்கு அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிட வேண்டும் என்பதே பயணிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் இருப்பதும் ஒன்றுதான், இல்லாததும் ஒன்றுதான் என்ற அளவுக்கு செயலிழந்து காணப்படுகிறார். இதுபோன்ற ஆட்சியர்களை மாற்றி விட்டு நன்கு மாவட்ட வளர்ச்சிக்காக பணியாற்றும் நேரடியாக ஐஏஎஸ் முடித்துவிட்டு வரும் துடிதுடிப்பு மிக்க இளைஞர்களை பணியமர்த்தினால் மட்டுமே விழுப்புரம் மாவட்டம் வளர்ச்சி பெறும். அதாவது விழுப்புரத்துக்கு முன்னாள் மாவட்ட ஆட்சியர்களாக பணியாற்றிய அஷோக்வர்தன் ஷெட்டி, அதுல்யமிஸ்ரா, பிரவீன்குமார் போன்ற மாவட்ட ஆட்சியர்கள் போன்று எப்போது ஆட்சியர்கள் கிடைப்பார்கள் என்று பொதுமக்கள் ஏங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இதுஒருபுறம் இருந்தாலும் திண்டிவனத்தில் பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரவே பாதுகாப்பான இடம் தேடி அலையும் அவல நிலை உருவாகி உள்ளது. நகராட்சிக்கு ஆண்டுதோறும் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்லும் பேருந்துகள் மூலம் ரூ.15 லட்சம் வரி வசூல் கிடைக்கிறது. ஆனால் பயணிகள் வசதிக்காக எந்த வசதியும் நகராட்சி நிர்வாகம் செய்துதரவில்லை. எனவே, பாழடைந்து பல மாதங்களாக இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள கட்டடங்களை அப்புறப்படுத்தி விட்டு  புதிய கட்டடங்களை விரைவில் கட்டித் தர வேண்டும் என பயணிகள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்,

Label