OUR CLIENTS
போக்குவரத்து துறையில் மீண்டும் ரொட்டேஷன் பேட்ஜ் முறை அமல்?
போக்குவரத்து துறையில் மீண்டும் ரொட்டேஷன் பேட்ஜ் முறை அமல்? Posted on 07-Jun-2018 போக்குவரத்து துறையில் மீண்டும்  ரொட்டேஷன் பேட்ஜ் முறை அமல்?

வேலூர், ஜூன் 7-

 போக்குவரத்து துறையில் குறிப்பிட்ட வழித்தடங்களுக்குச் செல்ல ஆளும் கட்சியின் தொழிற்சங்கத்தினர் வசூல்வேட்டையில் இறங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே ரொட்டேஷன் பேட்ஜ் முறை கொண்டுவர வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் இடையே கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் சென்னை மாநகரம், கும்பகோணம், மதுரை, சேலம், கோவை, விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய ஏழு கோட்டங்களும், 18 மண்டலங்களும் உள்ளன. இவற்றில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 1.50 லட்சம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இதில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் டிரைவர், கண்டக்டர்கள். இதில், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை உள்ளடக்கி, விழுப்புரம் கோட்டம் இயங்கி வருகிறது. இக்கோட்டத்தில் மட்டும் 20 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். போக்குவரத்து துறையில் ரொட்டேஷன் பேட்ஜ் என்ற முறை இருந்தது. டிரைவர், கண்டக்டர்களின் சீனியாரிட்டி பட்டியல், அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். இதன்படி பேருந்து வழித்தடங்கள் ஒதுக்கப்பட்டன.

தற்போது டிரைவர், கண்டக்டர்களின் வழித்தடங்கள் தொடர்பான விபரம் ஆளும்கட்சி தொழிற்சங்கத்தினரால் முடிவு செய்யப்படுகிறது. சீனியாரிட்டி இல்லாமல் யார் வேண்டுமானாலும் எந்த வழித்தடத்திலும் செல்ல முடிகிறது.  இதனால் பாதிக்கப்பட்ட சீனியர் டிரைவர், கண்டக்டர்கள் குமுறலில் உள்ளனர்.

சில டெப்போக்களில் ஆளுங்கட்சியினருக்கு ஆன் டூட்டி, அலுவலகப் பணி போடுவதால், மற்ற டிரைவர்கள் கூடுதல் பணியாற்ற வற்புறுத்தப்படுகின்றனர். இரவு முழுவதும் கண் விழித்து ஓட்டிய டிரைவர்கள், பகலிலும் பணி செய்வதால் விபத்து நடப்பது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட வழித்தடத்துக்கு வசூல் வேட்டை நடப்பதாகவும் போக்குவரத்து தொழிலாளர்கள் கடும் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். எனவே, மீண்டும் ரொட்டேஷன் பேட்ஜ் முறை கொண்டு வர வேண்டும் என்றும் போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு பணிகளை பிரித்து கொடுப்பது, வழித்தடங்களை முடிவு செய்வது போன்ற பணிகளை கிளை மேலாளர்கள் பார்ப்பதில்லை. அண்ணா தொழிற்சங்கத்தினர் கையில் எடுத்து கொண்டு வசூல் வேட்டை நடத்துகின்றனர். பலர் பணிக்கே வராமல் ஊதியம் மட்டும் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மீது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காண்பித்து வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும் என்பதே போக்குவரத்து தொழிலாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label