OUR CLIENTS
ஆற்காட்டில் அரசு விதிமுறைகளை மீறி தாபாவில் 24 மணி நேரமும் மது விற்பனை!
ஆற்காட்டில் அரசு விதிமுறைகளை மீறி தாபாவில் 24 மணி நேரமும் மது விற்பனை! Posted on 11-Jun-2018 ஆற்காட்டில் அரசு விதிமுறைகளை மீறி தாபாவில் 24 மணி நேரமும் மது விற்பனை!

வேலூர், ஜூன் 11-
 
ஆற்காட்டில் அரசு விதிமுறைகளை மீறி தாபாவில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது. இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் குறட்டை விடுகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வேலூர் மாவட்டம், ஆற்காட்டில் தனியார் கலை&அறிவியல் கல்லூரி எதிரில் பஞ்சாபி தாபா  இயங்கி வருகிறது. இங்கு மது விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி மது அருந்தவும் அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் இங்கு வரும் குடிமகன்கள் எல்லோருக்கும் தங்கு தடையின்றி 24 மணி நேரமும் மது பாட்டில்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த தாபாவை நடத்துபவர் திமுக முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவர் திமுகவில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆதரவாளர் என்று தன்னை கூறிக்கொண்டு இதுபோன்ற இழிசெயலில் ஈடுபட்டு வருகிறார் என்ற சமூக ஆர்வலர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக புகார் இருந்து வருகிறது. அப்படியே பார் நடத்த தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள கடைகளுக்கு இரவு 11 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தாபாவில் 24 மணி நேரமும் மது விருந்து நடந்து வருகிறது. இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறை குறட்டை விடும் நிலையில் உள்ளது. சில விவரம் அறிந்த காக்கிகள் மட்டும் இந்த தாபாவுக்கு வந்து மூக்கு முட்ட தின்று விட்டு, தங்களது பாக்கெட்டில் தலா ரூ.500 (அ) ரூ.ஆயிரம் நிரப்பிக் கொண்டு ஹாயாக ஒன்றும் தெரியாதது போன்று சென்றுவிடுகிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 
இதுபோன்ற கறுப்பு ஆடுகள் காவல் துறையில் வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மாமூல் கொடுத்து விட்டு தாராளமாக பாரை நடத்தி வருகின்றனர். மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், உள்ளூர் போலீசார், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் என்றும், உளவுப்பிரிவு போலீசார், தனிப்பிரிவு போலீசார் என்று அனைவருக்கும் ÔபÕ வைட்டமின் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதனால் பயமின்றி தொழில் சிறப்பாக நடந்து வருகிறது. தாபாவில் மது விருந்துக்கு 24 மணி நேரமும் தடையேதும் இல்லை என்றே சொல்லலாம். குறிப்பாகச் சொல்லப்போனால் திமுகவை முன்னிறுத்தி அதிமுக ஆட்சியில் மது விற்பனையகத்தை ஹாயாக நடத்தி வருகிறார் இந்த மாஜி கவுன்சிலர் என்று சொன்னால் அது மிகையாகாது. குறுக்கு வழியில் பணம்  தேடுவதை இந்த மாஜி கவுன்சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளார். காவல் துறையில் பணியாற்றுவோருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தால் அவர்கள் கண்டும் காணாமல் விட்டுவிடுவார்கள் என்பதை அவர் நன்கு புரிந்து கொண்டார். இதைப் பின்பற்றி நடந்து கொள்கிறார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்தில் தொழிலை சிறப்பாக நடத்தி முடித்து கொள்கிறார். 
மதுபானங்களும் இங்கு எங்கும் இல்லாத அளவுக்கு கூடுதல் விலை வைத்தே விற்பனை செய்யப்படுகிறது. இந்த தாபாவுக்கு விஷயம் அறிந்தவர்கள் மட்டும் வந்து செல்கின்றனர். 24 மணி நேரமும் கூடுதல் விலை கொடுத்தால் போதும் மதுபாட்டில்கள் கேட்டது கிடைக்கும் என்கின்றனர். 

இந்த தாபா மீது காவல் துறை மற்றும் சுங்கம் மற்றும் ஆயத்தீர்வை துறையினர் ஒரு கண்  வைத்தாலே போதும் என்கின்றனர்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளரும்  இதுபோன்று முறைகேடாக இயங்கும் தாபாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் இந்தப்பகுதி வாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவல் துறையின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label