OUR CLIENTS
மழைநீர் சேகரிப்பை மீண்டும் தீவிரப்படுத்துமா தமிழக அரசு?
மழைநீர் சேகரிப்பை மீண்டும் தீவிரப்படுத்துமா தமிழக அரசு? Posted on 12-Jun-2018 மழைநீர் சேகரிப்பை மீண்டும்  தீவிரப்படுத்துமா தமிழக அரசு?

சென்னை, ஜூன் 12-

நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது, மத்திய நிலத்தடி நீர் வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிநீருக்கே தவிக்கும் நிலை ஏற்படுவதற்குள், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அரசு மீண்டும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் போதிய மழை கிடைத்தாலும், 80 சதவீதம் பேர் குடிநீருக்கு நிலத்தடி நீரையே பயன்படுத்துகின்றனர். வேளாண் பாசனத்துக்கு 3&ல் 2 பங்கு பேர் நிலத்தடி நீரை நம்பியுள்ளனர். நாட்டில் உள்ள 60 சதவீத மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப் படுகிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் கண்காணிப்பு கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து கடந்த ஆண்டு பருவமழைக்கு முன்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதுதொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்திலும், பஞ்சாப் 2&ம் இடத்திலும், ஆந்திரா 3&ம் இடத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.

அந்த ஆய்வறிக்கையில் தமிழகம் குறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள 526 கண்காணிப்பு கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு செய்யப்பட்டது. அந்த விவரங்களை, கடந்த 2007 முதல் 2016&ம் ஆண்டு வரை பருவமழைக்கு முன்னதாக எடுக்கப்பட்ட நிலத்தடி நீர்மட்ட அளவுகளின் சராசரியுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் 87 சதவீத கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. அதில், 35 சதவீத கிணறுகளில் 2 மீட்டர் ஆழம் வரையும், 24 சதவீத கிணறுகளில் 4 மீட்டர் ஆழம் வரையும், 28 சதவீத கிணறுகளில் 4 மீட்டர் ஆழத்துக்கு கீழும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. 13 சதவீத கிணறுகளில் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள நிலையில், 142 ஒன்றியங்களில், கிடைக்கும் மழைநீரின் அளவைவிட, நிலத்தடி நீரை உறிஞ்சும் அளவு அதிகமாக உள்ளது. 33 ஒன்றியங்கள் அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுபவையாக மாறிவருகின்றன. 57 ஒன்றியங்கள் அதிக நிலத்தடி நீரை உறிஞ்சுபவையாக மாறும் அறிகுறிகள் தென்படுகின்றன என்று மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 77 சதவீத நிலத்தடி நீர் வளம் அழிக்கப்பட்டுவிட்டதாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது. இந்நிலையில் மக்களின் அலட்சியத்தால் தமிழகத்தில் மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவது, வரும்காலத்தில் குடிப்பதற்கே நீர் கிடைக்காத நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே செயல்படுத்தி, கண்டுகொள்ளாமல் விடப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அரசு மீண்டும் தீவிரமாக செயல்படுத்தினால் மட்டுமே நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Label