OUR CLIENTS
கேபிள் டிவியில் செட்டாப் பாக்ஸ் தருவதில் மெகா மோசடி கண்டும் காணாமல் குறட்டை விடும் கேபிள் டிவி வட்டாட்சியர்!
கேபிள் டிவியில் செட்டாப் பாக்ஸ் தருவதில் மெகா மோசடி கண்டும் காணாமல் குறட்டை விடும் கேபிள் டிவி வட்டாட்சியர்! Posted on 13-Jun-2018 கேபிள் டிவியில் செட்டாப் பாக்ஸ் தருவதில் மெகா மோசடி கண்டும் காணாமல் குறட்டை விடும் கேபிள் டிவி வட்டாட்சியர்!

வேலூர், ஜூன் 13-

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கேபிள் டிவியில் செட்டாப் பாக்ஸ் தருவதில் மெகா மோசடி நடந்து வருகிறது.

இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கேபிள் டிவி வட்டாட்சியர் கண்டும் காணாமல் குறட்டை விட்டு வருகிறார்.
வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் தனியார் டிஷ் டிவி ஆன்டெனாக்களை வாங்கியே பல நுகர்வோர் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோன்று நுகர்வோர் கேபிள் டிவிக்களையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளில் கேபிள் டிவி மாதாந்திர கட்டணம் தலா ஒரு வீட்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.150 முதல் ரூ.170 வரை வசூல் செய்யப்படுகிறது. இதை பல நுகர்வோர் வெளியில் சொல்வதில்லை. அத்துடன் புதியதாக கேபிள் இணைப்பு பெற வேண்டும் என்றால் கறாராக ஒரு இணைப்புக்கு தலா ரூ.500 வசூலித்து விடுகின்றனர். இந்த தொகையை கடைசிவரை திரும்ப தருவதே இல்லை. 

வாடகை வீட்டில் இருப்போர் வீட்டை காலி செய்தாலும் அந்த தொகையை கழித்து கொள்வதும் இல்லை. இணைப்பு கட்டணம் வாங்குவதோடு சரி. இப்படி அடாவடி பகல் கொள்ளையில் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் 40 சேனல்களுக்கு மேல் ஒளிபரப்புவதே இல்லை. இதுதொடர்பாக கேபிள் டிவி ஆப்ரேட்டர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டால் எங்களுக்கு வரும் சேனல்களைத்தான் நாங்கள் ஒளிபரப்புகிறோம் என்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர். கேபிள் டிவி வட்டாட்சியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அந்த அலுவலத்தில் உள்ள பாதுகாப்பு தொழிலாளிதான் பதில் கூறுகிறார். ஐயா வெளியில் சென்றுள்ளார் என்ற பதில்தான் கிடைக்கிறது என்கின்றனர் பல நுகர்வோர்.

கேபிள் டிவி பல நேரங்களில் சரிவர ஒளிபரப்புவதே இல்லை. சேனல்கள் தெளிவாக தெரிவதும் இல்லை. புள்ளி புள்ளியாக சேனல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. குறிப்பாக ஒரு வீட்டில் இணைப்பு இருந்தாலும் அடுத்த அறைக்கு ஒரு தொலைக்காட்சிக்கு கூடுதல் இணைப்பு தர வேண்டும் என்றால் தலா ரூ.250 கூடுதலாக இணைப்பு கட்டணம் செலுத்தும் நிலை வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் நிலவுகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த தொகையும் திரும்ப பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. காட்பாடியில்தான் கேபிள் டிவியில் கொள்ளையோ கொள்ளை அடிக்கப்படுகிறது. அரசு வழங்கும் தலா ரூ.200க்கான செட்டாப் பாக்ஸ் எங்கு வழங்கினார்கள் என்பது இதுநாள் வரை சிதம்பர ரகசியமாகவே இருந்து வருகிறது. கேபிள் டிவி ஆப்ரேட்டர்களை கேட்டால் அது குறைந்தபட்சம் ரூ.800 லிருந்துதான் ஆரம்பமாகிறது என்கின்றனர். அதாவது ரூ.800, ரூ.1000, ரூ.1500 என்றுதான் செட்டாப் பாக்ஸ்கள் தனியார் நிறுவனங்கள் தயாரித்ததை கேபிள் டிவி நுகர்வோர்களிடம் விளக்கி கூறுகின்றனர். அரசு அறிவித்த ரூ.200க்கான செட்டாப் பாக்ஸ்கள் எங்கு போயின என்பது தெரியவில்லை. அதைப்பற்றி கேட்டால் எங்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஒற்றைவரியில் கூலாக பதில் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் அகலுகின்றனர். தனியார் செட்டாப் பாக்ஸ்கள் விற்பனை செய்தால் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு நல்ல கமிஷன் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டிய கேபிள் டிவி வட்டாட்சியர் எதைப்பற்றியும் கண்டும் காணாமல் அமைதி காத்து வருகிறார். இவருக்கும் ஏதாவது கமிஷன் தருகிறார்களா கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் என்பதும் தெரியவில்லை. மாவட்ட ஆட்சியர் கேபிள் டிவி தொழிலில் உள்ள சூட்சுமங்களை விளக்கவும், நடவடிக்கை எடுப்பதாக எச்சரிக்கை விடாமல், கேபிள் டிவி வயர்களை மின்கம்பங்களில் கட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். 

கேபிள் டிவி தொழில் பணம் கொழிக்கும் தொழிலாக ஆரம்ப காலத்தில் இருந்தே இன்று வரை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. கேபிள் இணைப்பு கேட்டால் கேட்டவுடன் நுகர்வோருக்கு தருவதில்லை. கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் வயர் இல்லை என்று பல சாக்கு போக்குச் சொல்லி நுகர்வோர்களை ஏமாற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். 10 நாட்களாக பலர் இணைப்பு பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் பலர் டிஷ் டிவிக்கு மாறி விடுகின்றனர். இதை பல நுகர்வோர் வெளியில் சொல்ல முடியாமல் மனதில் வைத்து புழுங்குகின்றனர். பல ஏழை எளியோர், நடுத்தர வர்க்கத்தினர் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கேபிள் டிவி குறித்து தெளிவான அறிக்கையை கேபிள் டிவி வட்டாட்சியர் அடிக்கடி வெளியிட வேண்டும். ஒரு கேபிள் டிவி ஆப்ரேட்டர் எத்தனை இணைப்பு வைத்துள்ளார் என்ற உண்மையான அறிக்கையை இதுநாள் வரை கேபிள் டிவி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளதாக தகவல் இல்லை. பொய் கணக்கு காண்பித்து தில்லாலங்கடி வேலையில் தில்லுமுல்லுகளுடன்தான் பணியாற்றுகின்றனர். நிலைமை இப்படி இருக்க மாவட்டத்தில் ஏதாவது ஒரு பகுதியிலாவது கேபிள் டிவி பயன்படுத்தும் நுகர்வோர் தலா ரூ.70 மாத கட்டணமாக செலுத்துகிறேன் என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். ஒருவர் கூட இல்லை என்பதுதான் நிதர்சன உண்மையாகும். இப்படி பல தில்லாலங்கடி வேலைகள் இதில் நடக்கிறது. காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் பகுதியில் சுனில்குமார், செங்குட்டை பகுதி ரமேஷ், வள்ளிமலை ரோடு தமிழ்ச்செல்வன் ஆகியோர் செயல்படும் பகுதிகளில் இணைப்பு கொடுப்பதில் பல தில்லாலங்கடி வேலைகள் நடந்து வருகிறது. புகார் கொடுத்தாலும் அந்த கேபிள் டிவி ஆப்ரேட்டரின் உரிமத்தை கேபிள் டிவி வட்டாட்சியர் ரத்து செய்து நடவடிக்கை எடுத்ததாக எந்த தகவலும் இதுநாள் வரை நடக்கவில்லை. அப்படி என்றால் மாவட்டம் முழுவதும் முறையாக கேபிள் டிவி தொழில் நடக்கிறது என்று அர்த்தம் கொள்ளலாமா?. இப்படி பல மோசடிகள் கேபிள் டிவி தொழிலில் அரங்கேறி வருகின்றன. கட்டணமே குறைந்தபட்சம் ரூ.150தான். செட்டாப் பாக்ஸ் எத்தனை வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று ஏன் கேபிள் டிவி வட்டாட்சியர் கணக்கெடுப்பு நடத்தவில்லை. வேறு என்ன பணிகளை அவர் கவனித்து வருகிறார். கட்டணம் செலுத்தாத கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் இணைப்பு சில மணி நேரம் மட்டுமே துண்டிக்கப்படுகிறது. வேறு எந்த பணியும் கேபிள் டிவி வட்டாட்சியர் மேற்கொண்டதாக தகவல்கள் இல்லை. ஏதாவது ஒரு ஏரியாவில் கேபிள் டிவி வட்டாட்சியர் வீடு வீடாக ஆய்வு நடத்த தயாராக உள்ளாரா? என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர். 

கேபிள் டிவி வட்டாட்சியர் எதற்காக பணியமர்த்தப்பட்டாரோ அந்த பணியை அவர் செய்யவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் செட்டாப் பாக்ஸ்கள் இதுநாள் வரை அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்படவில்லை என்று ஏன் விசாரணையோ (அ) ஆய்வோ நடத்தவில்லை என்று தெளிவுபடுத்தப்படுமா?. மாவட்ட ஆட்சியர் ராமன் கேபிள் டிவி வட்டாட்சியரை அழைத்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்பதே கேபிள் டிவி நுகர்வோர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. கேபிள் டிவியில் உள்ள மெகா ஊழலை மறைக்கும் முயற்சியில் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுடன் கேபிள் டிவி வட்டாட்சியர் கைகோர்த்து கொண்டு செயல்படுகிறார். இதனால் திருடனுக்கு துணை போனதாக அவரது செயல் இருப்பதாக நுகர்வோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கேபிள் டிவியில் நடைபெறும் பல தில்லாலங்கடி ஊழல்களையும், குறைபாடுகளையும் களைய மாவட்ட ஆட்சியர் ராமன் சாட்டையை சுழற்றுவாரா? அனைவருக்கும் ரூ.200 மதிப்பிலான செட்டாப் பாக்ஸ்கள் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label