OUR CLIENTS
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு இரண்டு நீதிபதிகளின் முரண்பட்ட தீர்ப்பு!
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு இரண்டு நீதிபதிகளின் முரண்பட்ட தீர்ப்பு! Posted on 15-Jun-2018 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு இரண்டு நீதிபதிகளின் முரண்பட்ட தீர்ப்பு!

சென்னை, ஜூன் 15-

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று தலைமை நீதிபதியும், செல்லாது என்று நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார். இரண்டு நீதிபதிகளிடையே மாறுபட்ட தீர்ப்பு இருப்பதால் இந்த வழக்கின் தீர்ப்பை மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்பட 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கடந்த 18.9.2017 அன்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உயர்நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தக்கூடாது என்றும் 20.9.2017 அன்று உத்தரவிட்டார்.

பின்னர், அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் தலைமையிலான முதன்மை அமர்வுக் மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பல நாட்கள் நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர், கொறடா, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருக்காக உச்ச நீதிமன்ற மூத்த வக்கீல்கள் பலர் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23&ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று காலை முதலே நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் 18 எம்எல்ஏக்களும் நீதிமன்றத்திற்கு வந்தனர். அதேசமயம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தினார்.  

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று மதியம் 1.40 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.  அப்போது,   பதினெட்டு அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் பிறபித்த உத்தரவு செல்லுபடியாகும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நேற்று தீர்ப்பு கூறியுள்ளார்,  இரண்டு பேர் கொண்ட அமர்வின் மற்றொரு உறுப்பினரான நீதிபதி சுந்தர், சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். மாறுபட்ட தீர்ப்பு வெளியிடப்பட்டிருப்பதால் 3வது நீதிபதி ஒருவருக்கு வழக்கு அனுப்பப்படும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவித்துள்ளார். வழக்கை விசாரிக்க உள்ள மூன்றாவது நீதிபதி யார் என்பது விரைவில் வெளியிடப்படும்.  மூன்றாவது நீதிபதி யார் என்பதை நீதிபதி குலுவாடி ஜி. ரமேஷ் அறிவிப்பார் என்றும் இந்திரா பானர்ஜி குறிப்பிட்டார்.

வழக்கில் மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பை வெளியிடும்வரை அவையில் பெரும்பான்மையை அறிவதற்கான எந்த வாக்கெடுப்பும் நடைபெறக்கூடாது எனவும் நீதிபதிகள் இன்றைய தீர்ப்பில் தெரிவித்தனர்.வழக்கு முடிவது போல வந்த நிலையில் மீண்டும் ஓட்டம் துவங்கி உள்ளது குறிப்பிடத் தகுந்தது.

Label