OUR CLIENTS
அனுமதியின்றி அள்ளப்படும் வெள்ளைத் தாது மண் பீங்கான் தயாரிப்பதற்காக லாரிகளில் கடத்தல்!
அனுமதியின்றி அள்ளப்படும் வெள்ளைத் தாது மண் பீங்கான் தயாரிப்பதற்காக லாரிகளில் கடத்தல்! Posted on 15-Jun-2018 அனுமதியின்றி அள்ளப்படும் வெள்ளைத் தாது மண் பீங்கான் தயாரிப்பதற்காக லாரிகளில் கடத்தல்!

காஞ்சிபுரம், ஜூன் 15-

வட்டம்பாக்கம் ஏரியில் இருந்து அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் அள்ளப்படும் தாது மண், லாரிகள் மூலம் காரைக்கால் பகுதியில் உள்ள பீங்கான் தொழிற்சாலைக்கு பல ஆண்டுகளாக கடத்தப்பட்டு வருகிறது. 

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட வட்டம் பாக்கம் ஊராட்சியில் உள்ள பகுதியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 130 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரி நீரைப் பயன்படுத்தி வட்டம்பாக்கம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வட்டம்பாக்கம் ஏரியில் தமிழகத்தின் வேறு எந்தப் பகுதியிலும் கிடைக்காத அரிய வகை வெள்ளைத் தாது மண் மிகுந்து காணப்படுகிறது. விலை அதிகம் உள்ள இந்த மண் கலைநயமிக்க பீங்கான் பொருள்கள், பொம்மைகள் மற்றும் மின்சாரம் கடத்தாப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. 
இதனால் இந்த வெள்ளைத் தாது மண்ணுக்கு வெளிச் சந்தையில் அதிகமான தேவை உள்ளது. 

இந்த நிலையில், வட்டம்பாக்கம் ஏரியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு அனுமதியுடன் மண் குவாரி இயங்கியது. அப்போதுதான் ஏரியில் சுமார் 10 அடிக்கு கீழ் இந்த அரிய வகை வெள்ளை மண் இருப்பது தெரியவந்தது. இதையறிந்த சில நபர்கள் உரிய அனுமதியின்றி ஏரியில் பல அடி ஆழத்திற்கு பாறைப் படிவங்கள் போல் உள்ள வெள்ளைத் தாது மண்ணை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வெட்டி எடுத்து வருகின்றனர். 

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தாது மண்ணை எடுத்து, கடந்த நான்கு ஐந்து, ஆண்டுகளாக நாள்தோறும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியில் உள்ள தனியார் பீங்கான் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு கடத்தி வருகின்றனர். இந்தலையில், வட்டம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்துக் கால்வாய்களில் சுமார் 30 அடி ஆழத்திற்கு வெள்ளைத் தாது மண்ணிற்காக கடத்தல்காரர்கள் பள்ளம் தோண்டியுள்ளனர். இதனால் ஏரிக்கு வரும் நீர், பள்ளங்களிலேயே தேங்குவதால் பல ஆண்டுகளாக வட்டம்பாக்கம் ஏரி நிரம்புவது செயற்கையாகத் தடுக்கப்படுகிறது. மூன்று போகமும் விவசாயம் நடைபெற்று வந்த இப்பகுதியில் தற்போது ஒரு போகம் மட்டுமே விவசாயம் நடைபெற்று வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

மேலும் வட்டம்பாக்கம் காப்புக் காட்டுப் பகுதிக்கு அருகிலேயே அதிகமான பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால் காப்புக் காட்டில் இருந்து இரவு நேரங்களில் உணவிற்காக வெளியே வரும் நரி, முயல், உடும்பு போன்ற வன உயிரினங்கள் அவற்றில் விழுந்து இறக்கின்றன. அதேபோல், வட்டம்பாக்கம் கிராமத்தில் இருந்து மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளும் அவ்வப்போது பள்ளத்தில் விழுந்து பலியாவது தொடர்ந்து நடைபெறுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியது: எங்கள் பகுதியில் உள்ள ஏரியில் இருந்து அள்ளப்படும் மண் ஒரு டன் ரூ. 8 ஆயிரம் வரை விற்கப்படுவதாகத் தெரிகிறது. அதிக விலைக்கு விற்கப்படும் இந்த அரிய வகை மண்ணை சென்னையைச் சேர்ந்த தனியார் ஒருவர் அரசு அனுமதியின்றி, அதிகாரிகள், அரசியல்வாதிகள், ரௌடிகள் ஆதரவுடன் கடந்த நான்கு வருடங்களாக கடத்தி வருகிறார். இதுகுறித்து நாங்கள் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், தற்போது வரை மண் கடத்தப்பட்டு வருகிறது. 

ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாயில் பள்ளம் தோண்டப்பட்டதால் தற்போது ஏரிக்கு வரும் நீர் தடுக்கப்படுவதால், தற்போது எங்கள் பகுதியில் ஒரு போகம் மட்டுமே விவசாயம் நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள நாங்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். எனவே மண் கடத்தலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். 

Label