Logo

மன்னித்து விடு மித்ரா தற்கொலை செய்து கொண்ட விவசாயி!

மன்னித்து விடு மித்ரா
தற்கொலை செய்து கொண்ட விவசாயி!

தூத்துக்குடி, ஜன.3-


பூச்சி தாக்குல் காரணமாக சேதமடைந்த பயிர்களால் மன உளைச்சலுக்கு காரணமான விவசாயி பேத்திக்கு மன்னிப்பு கூறி விட்டு தனது நிலத்தின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தினை சேர்ந்தவர் நாரயணசாமி (வயது 58). நாரயணசாமிக்கு திருமணமாகி மகாலட்சுமி என்ற மனைவியும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். அபிராமிக்கு திருமணமாகி கோவில்பட்டியில் வசித்து வருகிறார். நாரயணசாமி, மகாலெட்சுமி இருவரும் மகள் அபிராமி வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றி வந்த நாரயணசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மில் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.


அதன் பின்னர் ஊரில் உள்ள 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்தாண்டு முதலில் நாரயணசாமி மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். போதிய மழை இல்லாத காரணத்தினால் மக்காச்சோளத்தினை அழித்து விட்டு உளுந்து பயிரிட்டுள்ளார்.


உளுந்து செடியில் மஞ்சள் நோய் தாக்கி உளுந்தும் பாதிக்கப்பட்டதால் மீண்டும் மக்காச்சோளத்தினை பயிரிட்டுள்ளார். மக்காச்சோளத்திலும் அதிகளவில் படைப்புழு தாக்கி பயிர்கள் பாதிக்கப்பட்டதால் கடந்த சில தினங்களாக நாரயணசாமி மன வேதனையுடன் இருந்துள்ளார்.


இதற்கிடையில் இன்று காலையில் நிலத்திற்கு சென்று பயிர்களை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்றுள்ளனார். இந்நிலையில் அவரது நிலத்தின் அருகேயுள்ள மரத்தில் இறந்த நிலையில் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை பார்த்த அருகில் இருந்தவர்கள் நாலாட்டின்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.


போலீசார் விரைந்து வந்து நாரயணசாமி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாரயணசாமி, தனது பேத்தி மித்ரா மீது அதிக பாசம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தரையில் கிடந்த ஈரமான மண்ணை எடுத்து அங்குள்ள சுவற்றில் மித்ரா என்னை மன்னித்து விடு என்று எழுதி வைத்துள்ளர்.


கடந்த 2 ஆண்டுகளாக விவசாயம் மேற்கொண்டு வரும் நாரயணசாமிக்கு கடந்த ஆண்டு விவசாயம் ஓரளவு நன்றாக இருந்துள்ளது. ஆனால் இந்தாண்டு பூச்சி தாக்கம் காரணமாக மக்காச்சோளம், உளுந்து இரண்டுமே பாதிக்கப்பட்டதால் மனம் உடைந்து இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


அரசு கொடுக்கும் 500 ரூ பயிர்காப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு எந்த விதத்திலும் கட்டுபடியாகது என்றும்., அரசு கூடுதலாக நிவாரணம் வழங்கினால் தான் விவசாயிகள் தற்கொலை தடுக்க முடியும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement