Logo

தென்கரைக்கோட்டை ஸ்ரீ கல்யாண ராமர் கோயில் வளாகத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?

 

தென்கரைக்கோட்டை

ஸ்ரீ கல்யாண ராமர் கோயில் வளாகத்தில்

அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?

 

தர்மபுரி, ஜன.4-

தென்கரைக்கோட்டை ஸ்ரீ கல்யாண ராமர் கோயில் வளாகத்தில் குடிநீர், மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் ஒன்று தென்கரைக்கோட்டை ஸ்ரீ கல்யாண ராமர் கோயில். வரலாற்று சிறப்பு மிக்க இத் திருக்கோயில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக்கோட்டையில் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்துக்கு தர்மபுரி, அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, சேலம் பகுதிகளிலிருந்து வருவதற்கு பேருந்து வசதிகள் உள்ளன. மொரப்பூர் மற்றும் பொம்மிடி ரயில் நிலையங்களில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் தென்கரைக்கோட்டை ஸ்ரீ கல்யாண ராமர் கோயில் அமைந்துள்ளது. கி.பி.16 ஆம் நூற்றாண்டில் குறுநில மன்னர்கள் சீலப்ப நாய்க்கர் கால சிற்றரசர்களால் நிறுவப்பட்டதாக கருதப்படும் இந்தக் கோயில் அரசர்களின் கோட்டை காவல் தெய்வமாக விளங்கியதாகும். ஸ்ரீ கல்யாண ராமர் கோயில் அமைந்துள்ள பகுதியில் நான்கு திசைகளிலும் மதில் சுவர்களும், அகழிகளும் அமைக்கப்பட்டுள்ளன. போர்க் காலத்தில் எதிரிகளின் வருகையைக் கண்டறிந்து, தாக்குதல் நடத்தும் வகையில் நுழைவுவாயில் நேர்க்கோட்டில் இல்லாமல், வளைந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் வளாகத்தில் 29 தூண்களில் கலைநயம் மிக்க ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த தூண்களைத் தட்டினால், ஒவ்வொரு தூணிலும் தனித்தனி ஓசைகள் ஒலிக்கும். கோயில் தூண்களில் காவல் தெய்வங்களின் உருவம் மட்டுமின்றி, அன்றைய மக்களின் வாழ்க்கை முறைகள், விலங்குகளுடன் பெண்கள் போரிடும் சிற்பங்கள், போர்முறைகள் உள்ளிட்ட பண்டைய நாகரிகப் பழக்க வழக்கங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

கோயில் கருவறையில் ஸ்ரீ ராமபிரான், சீதை, லட்சுமணன், வாலி, சுக்கிரீவன், வசிஷ்டர், ஆழ்வார்கள் உள்பட ராமர், சீதையுடன் திருமணக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருமணம் கைகூடாத இருபாலினத்தாரும் இந்தக் கோயிலில் வழிபாடு மேற்கொண்டால் திருமணத் தடை நீங்கும் என்பது சிறப்பு அம்சமாகும். இக் கோயிலில் பிரதி சனிக்கிழமைகளிலும், முக்கிய விழாக் காலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

தென்கரைக்கோட்டை வளாகம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். அரசர்கள் வாழ்ந்த அரண்மனைகள், குளம், குதிரைகள் கட்டப்பட்டிருந்த இடங்கள், தானியக் கிடங்குகள் உள்ளிட்ட வரலாற்று சின்னங்கள் போதிய பாரமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த வரலாற்று சின்னங்களை அரசு சார்பில் பராமரிக்க வேண்டும். அதே நேரத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோட்டை வளாகத்தைச் சுற்றிப் பார்வையிடும் வகையில் பாதை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

தென்கரைக்கோட்டை ஸ்ரீ கல்யாண ராமர் கோயில் மற்றும் ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் சுப முகூர்த்த தினங்களில் திருமணங்கள் நடைபெறுகிறது. இப் பகுதியிலுள்ள 50&க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு தென்கரைக்கோட்டை கோயில் மையப் பகுதியாக உள்ளது. திருமண விழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு திருமண மண்டப வசதிகள் இல்லை. அதேபோல், குடிநீர் மற்றும் உயர் கோபுர மின் விளக்குகள், கழிப்பிடம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ கல்யாண ராமர் கோயில் வளாகத்தில் திருமண மண்டபம், சமுதாயக் கூடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க தென்கரைக்கோட்டை வளாகத்தை பார்வையிட பக்தர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வருகை தருகின்றனர். இந்த கோட்டை வளாகத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள் உள்ளன. அதே நேரத்தில் கோட்டை வளாகத்தில் ஏராளமான இடங்களில் முட்புதர்கள் வளர்ந்து அடர்ந்து காணப்படுகின்றன. இங்குள்ள குளங்கள் தூர்ந்து போய் காணப்படுகின்றன. எனவே, குடிமராமத்து பணிகள் திட்டத்தில் கோட்டை வளாகத்திலுள்ள குளங்கள் மற்றும் சுற்றுச் சுவர்களை சீரமைப்பு செய்து, கோட்டை வளாகத்தில் மூலிகைப் பண்ணையை அமைக்கலாம். அதேபோல், தர்மபுரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களுடன் தென்கரைக்கோட்டையும் இணைத்து, மேம்பாட்டு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பக்தர்களுக்கு தேவையான கூடுதல் வசதிகளை மேம்படுத்த அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement