Logo

கொளகம்பட்டியில் கால்வாய் வசதி இல்லாமல் வறண்டு கிடக்கும் ஏரி

கொளகம்பட்டியில்

கால்வாய் வசதி இல்லாமல் வறண்டு கிடக்கும் ஏரி

 

 

அரூர், ஜன.4-

அரூர் அருகேயுள்ள கொளகம்பட்டியில் கால்வாய் வசதி இல்லாததால் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு கிடப்பதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், கொளகம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது வரட்டனேரி. இந்த ஏரியானது சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் தண்ணீர் தேங்கினால் கொளகம்பட்டி, எருக்கம்பட்டி, வாழைத்தோட்டம், நம்பிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிகளைப் பெறுவதுடன், கிராமப் பகுதியில் குடிநீர் பிரச்னைகள் தீரும். இந்த நிலையில், கொளகம்பட்டி வரட்டனேரிக்கு தண்ணீர் வருவதற்கான கால்வாய் வசதிகள் இல்லை. ஏற்கனவே இருந்த நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதனால், இந்த ஏரியானது ஆண்டுதோறும் வறண்டு கிடக்கிறது.

கொளகம்பட்டி காரை ஒட்டுவில் தடுப்பணையில் இருந்து அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் அருகில் தற்காலிகமாக சிறிய அளவிலான கிணறு அமைத்து, அதில் மின் மோட்டார் வைத்து வரட்டனேரிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் பணியில் அங்குள்ள விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அதாவது, விவசாயிகள் தங்களின் பங்களிப்பு தொகையாக ரூ. 2 லட்சம் செலவு செய்து, 10 ஹெச்.பி., மின்மோட்டார் மற்றும் குழாய்களை அமைத்து தண்ணீர் எடுத்துச் செல்லும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து கொளகம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், கொளகம்பட்டி வரட்டனேரி வறண்டு கிடப்பதால் ஆண்டுதோறும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதேபோல், வேளாண்மை பணிகள் பாதிக்கின்றது. அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் இருந்து கொளகம்பட்டி வரட்டனேரிக்கு சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு புதியதாக கால்வாய் அமைத்தால், வரட்டனேரி நிரம்பி விடும். இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான கால்வாய் அமைக்க ஜேசிபி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்கள் உள்ளிட்ட வாகன உதவிகள் செய்ய 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் தயார் நிலையில் உள்ளனர். கால்வாய் அமைக்க தேவையான அரசு புறம்போக்கு நிலமும் உள்ளது. எனவே, பொதுப்பணித்துறையினர் கால்வாய் அமைக்க தேவையான சர்வே பணிகளை மேற்கொண்டு கால்வாய் அமைக்க அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கூறுகின்றனர்.

அரூர் பெரிய ஏரிக்குச் செல்லும் கால்வாயில் இருந்து கொளகம்பட்டி வரட்டனேரிக்கு தண்ணீர் செல்வதற்கான பிரிவு கால்வாய் அமைக்க சுமார் ரூ. 20 லட்சம் நிதியுதவி இருந்தால் போதுமானதாக இருக்கும். புதியதாக கால்வாய் அமைத்து கொளகம்பட்டி ஏரியில் தண்ணீர் தேங்கினால், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறும். அதேபோல், கோடைக் காலங்களில் அப் பகுதியிலுள்ள கிராமங்களில் குடிநீர் பிரச்னைகள் ஏற்படாது. எனவே, கொளகம்பட்டி வரட்டனேரிக்கு தண்ணீர் எடுத்துச் செல்வதற்காக கால்வாய் அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பதே விவசாயிகளின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement