Logo

திமுகவை நோக்கி நகரும் ரஜினி ரசிகர்கள்

திமுகவை நோக்கி நகரும் ரஜினி ரசிகர்கள்

சென்னை, ஜன.18-
ஆன்மீக அரசியல், நல்லாட்சியை தான் தருவேன் என அவ்வப்போது கூறி வந்தவர் ரஜினிகாந்த். இவர் கட்சி தொடங்கினால் எம்ஜிஆர் கொடுத்த நல்லாட்சியை  தருவேன் என சில விழாக்களில் பிரகடனம் செய்தார். இந்த நிலையில் முதலில் வருவேன் என சொன்ன அவர் தனது உடல் நிலையை காரணம் காட்டி தற்போது அரசியலுக்கு வரவில்லை என தெரிவித்துவிட்டார். ரஜினி அறிக்கையால் திமுகவை நோக்கி ரஜினி ரசிகர்கள் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர்....
ரஜினி அரசியலுக்கு வருவார் என 25 ஆண்டுகளாக எதிர்பார்த்து வந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இந்த நிலையில் 3 ஆண்டுகளாக கிணற்றில் போட்ட கல்லாக அமைதி காத்திருந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்.
எம்ஜிஆர் கொடுத்த நல்லாட்சியை தான் தருவேன், ஆன்மீக அரசியல் என அவ்வப்போது கூறி வந்தவர் ரஜினிகாந்த். இவர் கட்சி தொடங்கினால் அது போன்றதொரு ஆட்சியை தருவேன் என சில விழாக்களில் பிரகடனம் செய்தார்.
இதையடுத்து அண்ணாத்த படக் குழுவினருக்கு கொரோனா உறுதியான நிலையில் ரஜினிக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் 3 நாட்கள் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.  இதையடுத்து முதலில் வருவேன் என சொன்ன அவர் தனது உடல் நிலையை காரணம் காட்டி தற்போது அரசியலுக்கு வரவில்லை என அறிவிப்பு வெளியிட்டார். 
இதனால் ரசிகர்களும் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என கடந்த வாரம் சென்னையில் அறவழி போராட்டம் நடத்தினர்.
இதற்கடுத்த நாள் ரஜினிகாந்த் ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் போராட்டம் நடத்திய ரசிகர்கள் மீது கோபத்தை கொப்பளித்தார். இதனால் ரஜினி மீண்டும் அரசியலுக்கு வர மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. இவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையில் இத்தனை நாட்களாக மாற்று கட்சிகளுக்கு செல்லாமல் பல ரசிகர்கள் காத்திருந்தனர்.  ஆனால், இப்போது மாற்று கட்சியில் இணைய சிலர் முடிவு செய்தனர்.
அதன்படி ரஜினி மக்கள் மன்றத்தின் 4 மாவட்டச் செயலாளர்களான தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே செந்தில் செல்வானந்த், தேனி மாவட்ட செயலாளர் ஆர் கணேசன் உள்பட 4 பேர் திமுகவில் இணைந்துள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக இருந்த ஜோசப் ஸ்டாலின் கூறுகையில் நான் ஏற்கெனவே திமுகவில் இருந்தேன். அது போல் ரஜினி ரசிகர் மன்றத்திலும் இருந்தேன். ரஜினி கட்சி தொடங்குவார் என்பதால் அவருடன் பயணித்தேன். தற்போது அவர் கட்சி தொடங்காதது வருத்தம் அளித்தாலும் அவர் சொல்லும் காரணம் நியாயமானது. இதனால் நான் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளேன். 
கட்சியில் சேருவதை நான் தலைமையிடம் கூறினேன். எந்த கட்சியில் சேர வேண்டும் என நினைக்கிறீர்களோ அதில் சேர்ந்து கொள்ளுங்கள் என கூறினர். இதனால் நான் ஏற்கெனவே இருந்த கட்சியான திமுகவில் தற்போது இணைந்தேன் என்றார்.
தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக இருந்த ஏ. ஜோசப் ஸ்டாலினின் சென்னை முகவரியில் தான் ரஜினி தன் கட்சியை பதிவு செய்து வைத்ததாக முதலில் தகவல் வெளியானது. தற்போது இவர் உள்பட மாவட்ட செயலாளர்கள் விலகிய இந்த செய்தி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் மன்றத்தை வலுப்படுத்த பல்வேறு பணிகளை செய்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது விலகல் மற்ற நிர்வாகிகளை கொதிப்படைய செய்துள்ளது. அதிலும் ரஜினி மக்கள் மன்ற தலைமையிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தோம் என கூறியுள்ளார்கள்.
அறவழி போராட்டம் நடத்திய பின்பு  ரஜினி வெளியிட்ட காட்டமான அறிக்கையால்தான் ரஜினி ரசிகர்கள் திமுகவில் ஐக்கியமாக தொடங்கிவிட்டனர் என்கின்றனர் சக நிர்வாகிகள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement