Logo

கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தயக்கம் காட்டும் சுகாதார ஊழியர்கள்!

கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தயக்கம் காட்டும் சுகாதார ஊழியர்கள்! 

சென்னை, ஜன.19-
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடையே ஆர்வம் இல்லை. ஊசி பற்றிய விழிப்புணர்வு இல்லாதது, பயம் மற்றும் தொடர்ச்சியாக விடுமுறை தினத்தில் மக்கள் இருப்பது ஆகியவை இதற்கான காரணமாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இதற்கு முக்கிய காரணம், பக்க விளைவுகள் குறித்த அச்சத்தால் மக்கள்  மட்டுமல்ல சுகாதார ஊழியர்களும் கொரோ தடுப்பூசியை போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.
நாடு முழுக்க கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 16ம் தேதி துவங்கி வைத்தார். அந்தந்த மாநிலங்களில் முதல்வர்கள் இந்த பணிகளை துவங்கினர். எடப்பாடி பழனிச்சாமி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணிகளை துவங்கி வைத்தார். தமிழக அரசு மருத்துவர் சங்க தலைவர் செந்தில் முதல் ஊசியை பெற்றுக்கொண்டார்.
நாடுமுழுவதும், முதல் நாளில் 1.91 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அரசு அறிவித்தது. ஆனால், 2-வது நாளில் 6 மாநிலங்களில் 17,072 பேர் ஊசி போட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இரண்டாவது நாளில் 165 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் தடுப்பூசித் திட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை விட இந்தியாவில் அதிகம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது என்று இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.
முதல் இரண்டு நாள்களில் 447 பேருக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டதாகவும், ஆனால், அவற்றில் பெரும்பாலானவை காய்ச்சல், தலைவலி, குமட்டல் போன்ற லேசான அறிகுறிகள்தான் என்றும் அரசு தெரிவித்துள்ளது.  ஆனால், 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறது சுகாதாரத் துறை. டெல்லியில் மட்டுமே 51 பேருக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டதாகவும், அவர்களில் ஒருவருக்கு கொஞ்சம் சீரியசான பாதிப்பு என்றும் டெல்லி யூனியன் பிரதேச சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை மேற்கோள் காட்டி என்.டி.டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் வடக்கு ரயில்வே மருத்துவமனையில் இருந்தும், ஒருவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்று சுகாதாரத் துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்தடுத்த நாட்களில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. சனிக்கிழமை முதல் நாள் 12684 சுகாதாரத்துறை ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஆனால் 16 ஆயிரம் பேருக்கு அன்றைய தினம் ஊசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
2வது நாளான நேற்று முன்தினம் நிலைமை இன்னும் மோசமானது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஒரு சிலர்தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வந்தனர். அதிகபட்சமாக 100 பேர் கொரோனா தடுப்பூசி போட்டிருக்கக் கூடும் என்று தெரிகிறது. சீரம் இன்ஸ்டியூட் தயாரித்த கோவை கோவிஷீல்ட் தடுப்பூசியை மருத்துவ கல்லூரி மாணவர்கள் அங்கு போட்டுக் கொண்டதை பார்க்க முடிந்தது.
சேலம் அரசு மருத்துவமனையில் வெறும் 6 பேர் மட்டுமே நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். சில தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் ஊசி போட்டுக் கொள்ள விரும்புவோர் பதிவு செய்ய முடியவில்லை என்று மீடியாக்களில் செய்திகள் வந்தபோதிலும், தமிழக அரசு இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இதுபற்றி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஒரு நாளைக்கு இத்தனை பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு வைத்துக்கொண்டு நாங்கள் செயல்படவில்லை. தேவை இருப்போர் மட்டும் தடுப்பூசி போட்டால் போதும் என்ற அடிப்படையில்தான் தடுப்பூசி இயக்கம் நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படக்கூடாது என்பதில் தான், கடந்த சனிக்கிழமை முதல் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தினோம் என்று அவர் தெரிவித்தார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் பாலாஜி இதுபற்றி கூறுகையில், சுகாதாரத்துறை ஊழியர்கள் பலரும் பொங்கல் கொண்டாடுவதற்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். அவர்கள் பணியாற்றக்கூடிய இடங்களுக்கு திரும்பிய பிறகு, தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள். அப்போது எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார்.
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 25 செவிலியர்கள் தடுப்பூசி போட பதிவு செய்துள்ள போதிலும், இரண்டு பேர் மட்டுமே ஊசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து சிலரிடம் பேசிய போது, மருத்துவர்கள் முதலில் ஊசி போட்டுக் கொண்டு அவர்களுக்கு எந்த பக்கவிளைவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு நாங்கள் ஊசி போட்டுக் கொள்ளலாம் என்று இருக்கிறோம்.. எங்களது குடும்பத்தினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டு அவர்களுக்கு எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகு தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்து காத்திருப்பதாக சுகாதாரத் துறை மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றக்கூடிய பல ஊழியர்களில் பலரும் காத்திருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் தங்களது செல்போன சுவிட்ச் ஆப் செய்து விட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம், ஈரோட்டில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்தவர்கள் யாரும் வராததால் தடுப்பூசி மையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தது.  ஈரோடு தடுப்பூசி சிறப்பு மையத்தில் தினமும் 500 பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்திருந்த நிலையில் முதல் நாளான சனிக்கிழமை 99 பேர்கள் மட்டுமே தடுப்பூசி போட வருகை தந்திருந்தனர். ஆனால், 2வது நாளான ஞாயிற்றுக்கிழமை ஒருவர் கூட கொரோனா தடுப்பூசி போட முன் வரவில்லை என்பதால் தற்காலிகமாக தடுப்பூசி சிறப்பு மையம் பூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
அன்மையில், நார்வேயில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் உயிரிழந்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ப்ளூம் பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, நார்வேயில் கொரோனா வைரஸூக்கு எதிரான ஃபைசர் பயோன்டெக் (Pfizer-BioNTech) என்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த 23 பேரின் மரணமும் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது, தடுப்பூசி செலுத்தப்பட்ட 80 வயதுக்கும் அதிகமான அந்த நபர்கள் மிகவும் மோசமான உடல்நிலையை கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். ஃபைசர் பயோன்டெக் தடுப்பூசிக்கும் இந்த 23 பேரின் உயிரிழப்புக்கும் நேரடியான தொடர்பு இன்னும் சரியாக நிரூபிக்கப்படவில்லை. எனினும், உயிரிழந்த 23 பேரில் 13 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்ற ஒரு நாள் கழித்து, 46 வயதான சுகாதார பணியாளர் மகிபால் இறந்ததாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். தடுப்பூசி மூலம் தான் அவர் மரணமடைந்தார் என மகிபாலின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், அவர் இதய நோயால் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது மேலும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகளால், பொதுமக்கள் மட்டுமல்லா சுகாதார ஊழியர்களும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர் என்பதே நிதர்சனம்....

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement