Logo

அமைச்சர்கள் கடிதமும் கலக்கமும் அதிமுவில் நீடிக்கும் குழப்பம்...!

அமைச்சர்கள் கடிதமும் கலக்கமும்

அதிமுவில் நீடிக்கும் குழப்பம்...!

சென்னை, ஜன.31-

சசிகலாவின் ஆரம்ப என்ட்ரியே அதகளமாக இருக்கிறது.. முதல்நாளியே ஜெயலலிதா பயன்படுத்திய காரில் வந்துள்ளார்.. அதிலும் அந்த காரில் அதிமுக கொடி பறக்க விட்டு கெத்தாக வந்திருக்கிறார்.. இதனால் அதிமுக வட்டாரமே வெலவெலத்து போயுள்ளது..!
ஜெ உயிருடன் இருந்த போது அசைக்க முடியாத சக்தியாக அஇஅதிமுகவிலும், ஆட்சியிலும் இருந்தவர் சசிகலா. ஜெ-வுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கமாக இருந்தவர். ஜெயலிலதா இந்த 30 ஆண்டு காலத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சராக இருந்த போதும், மற்றுமோர் 15 ஆண்டுகாலம் பதவியில் இல்லாத போதும் அஇஅதிமுக வை கட்டியாண்டது சசிகலாதான். தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள அஇஅதிமுக தொண்டனை கூட பெயர் சொல்லி அழைக்கும் திறன் கொண்டவராக சசிகலா இருந்தவர். இந்த 30 ஆண்டு காலத்தில் - ஜெ பதவியில் இருந்த போதும், இல்லாத போதும் - சசிகலாவை சந்திக்காமல் ஜெயலலிதாவை சந்தித்த அஇஅதிமுக தொண்டர்களையும், தலைவர்களையும் விரல் விட்டு எண்ணி விடலாம்.
இதற்கிடையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகால சிறை தண்டனை முடிவடைந்து. இதன் காரணமாக கடந்த 27-ந் தேதி மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து விடுதலை ஆனாலும் கொரோனா காரணமாக விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா தொடர்ந்து சிகிச்சை பெற்றார். அவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து சசிகலாவை இன்று டிஸ்சார்ஜ் செய்வதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், விக்டோரியா ஆஸ்பத்திரியில், 7 நாள் தனிமையில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் சசிகலாவுக்கு அறிவுறுத்திய நிலையில், சசிகலாவின் டிஸ்சார்ஜ் செய்திகள் 4 நாட்களுக்கு முன்பேயே செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.. அஷ்டமி, நவமி என அடுத்தடுத்து வருவதால், முதல் வாரத்துக்கு முன்பேயே சசிகலா சென்னைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது...  ஆனால், சசிகலாவை வரவேற்க அமமுகவில் மிகப்பெரிய வரவேற்புக்கு ஒரு வாரமாகவே தடபுடல் ஏற்பாடுகள் நடந்து வந்தன.. சசிகலாவின் கார் வரும்வழி முழுக்க உற்சாக வரவேற்பை தர வேண்டும் என்றும் முடிவாயின.. அதன்படியே நேற்று மதியம் 12 மணிக்கு சசிகலா டிஸ்சார்ஜ் ஆனார். அவரை அழைத்து செல்வதற்காக டிடிவி தினகரன் ஆஸ்பத்திரிக்கு வந்தார்... சசிகலாவுக்கு தனியாக ஒரு கார் தயார் செய்யப்பட்டிருந்தது.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா காரில் ஏறி அமர்ந்தார்.. அப்போது அவரது ஆதரவாளர்களின் முழக்கம் விண்ணை பிளந்தது. இந்த 10 நாட்களாகவே இப்படித்தான்.. சசிகலா ட்ரீட்மென்ட்டில் இருந்தபோது, ஆஸ்பத்திரிக்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் குவிந்து முழக்கங்களை எழுப்பியபடி இருந்தனர்.  சசிகலாவுக்கு சொந்தமான அந்த காரின் முன் பக்கத்தில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது.. சசிகலா கார் முன்னாடி செல்ல, அவரை பின்தொடர்ந்து டிடிவி தினகரன் உள்ளிட்டோர் காரில் சென்றனர்.. மேலும் தொண்டர்களும், சசிகலாவின் ஆதரவாளர்கள் அதிகமாக குவிந்துவிட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் சசிகலா சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு காரணம், ரிலீசுக்கு பிறகு அதிமுகவை சசிகலா மீட்டெடுப்பதே முதல் வேலையாக இருக்கும் என்று அமமுக தரப்பில் தொடந்து சொல்லி வரும் நிலையில், காரில் இப்படி அதிமுக கொடி பறப்பது மேலும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. இதில் இன்னொரு விசேஷமும் உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இந்தக் காரைத்தான் பயன்படுத்தி வந்தார். இது ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவன கார் என்று கூறப்படுகிறது.
காரின் எண் டிஎன் 09 3737 என்பதாகும். இந்த கார் எண்ணின் கூட்டுத் தொகை 2 ஆகும். இதிலும் ஒரு முக்கியமான மேட்டர் இருக்கிறது. அதாவது ஜெயலலிதாவுக்கு ஒரு காலத்தில் 9, 5, 7 ஆகிய எண்கள்தான் ராசி எண்ணாக இருந்தது. கூட்டுத் தொகை அது போல வருவதாக பார்த்துக் கொள்வார். அதே போல 2 என்ற எண் சசிகலாவுக்கு ராசியான எண்ணாகும். ஜெயலலிதாவும் இதையே ராசி எண்ணாகவும் தனது கடைசி நாட்களில் வைத்துக் கொண்டார். காரணம் கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்த தேதி 11 ஆகும். அதேபோல மே 11ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதால் 11 அல்லது 2 என்ற எண் அவருக்கு ராசியாக மாறியது.. சசிகலாவும் இதையே தனது ராசி எண்ணாக பின்னாளில் மாற்றிக் கொண்டார். இந்தக் காரைத்தான் இன்று சசிகலாவும் மருத்துவமனையிலிருந்து வந்தபோது பயன்படுத்தியுள்ளார். அன்று அந்தக் காரில் தேசிய கொடி பறந்தது. இன்றோ அதிமுக கொடி பறந்தது.
ஜெயலலிதாவை காரை கையில் எடுத்த சசிகலா அடுத்து அதிமுகவையும் கைப்பாற்றுவாரா என்ற பரபரப்பான எதிர்பார்ப்புக் கிளம்பியுள்ளது. 
இந்நிலையில், சசிகலாவின் ஆளுமைத்திறனை அறிந்த அதிமுக அமைச்சர்களும், நிர்வாகிகளூம், சசிகலா விடுதலையாகி வந்தால் எப்படியும் கட்சி அவர் கண்ட்ரோலுக்குத்தான் வந்து சேரும் என்று கணக்கு போட்டார்கள். அதனால்தான் சசிகலாவை எடப்பாடி பழனிச்சாமி ஓரம் கட்டினாலும், தங்கள் விசுவாசத்தை காட்டிக்கொள்வதற்காக பெங்களூரு பரப்பன அக்கரஹாரா சிறையில் இருந்த சசிகலாவுக்கு அவ்வப்போது கடிதம் எழுதி வந்துள்ளனர் அதிமுக அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகள் பலரும். சசிகலாவுக்கு எதிராக கட்சிக்குள் நடந்த காய்நகர்த்தல்கள் குறித்து விளாவரியாக சில அமைச்சர்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்களாம். உட்கட்சி விவகாரங்கள், அரசின் டெண்டர் விவகாரங்கள் அனைத்தையும் சசிகலாவுக்கு கடிதமாக எழுதி இருக்கிறார்களாம்... என்ற தகவல்கள் பரவிவருகின்றன... ( உண்மை என்ன என்பது அவரவர்களுககு வெளிச்சம்)
சசிகலாதான் அதிமுகவுக்கு தலைமை ஏற்பார் என்ற நினைப்பிலேயே ஒருவரை மாற்றி ஒருவர் போட்டுக்கொடுத்து வந்துள்ளனர் கடிதங்களில். அந்த கடிதங்கள் எல்லாம் இப்போது சசிகலாவின் கையில் இருக்கின்றன. சசிகலா விடுதலை ஆகிறார் என்றதமே அமைச்சர்கள் செல்லூராஜூ, ராஜேந்திரபாலாஜி, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்டோர் சசிகலாவின் வருகைக்கு வாழ்த்து சொல்ல, கட்சிக்குள் சர்ச்சை வெடித்தது. 
சசிகலாவை பற்றி பேசினால் கட்சி நீக்கம் என்று தலைமை எச்சரித்திருக்கிறது. ஆனாலும், மூத்த நிர்வாகிகள் பலரும் சசிகலா பற்றி பேசி வருவதால், சசிகலாவுக்கு போஸ்டர் ஒட்டிய சின்னச்சின்ன நீர்வாகிகளை நீக்கம் செய்து அதன் மூலம் மூத்த நிர்வாகிகளுக்கு மிரட்டல் கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார்கள். சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்வது என்பது 100 சதவிகிதம் கிடையாது என்று எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக சொல்லிவிட்டதால், சசிகலாவுக்கு கடிதம் எழுதியவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.
ஓபிஎஸ், ஈபிஎஸ்சுடன் இணைந்துவிட்டபோது, தன்னை தனியாக சந்தித்து பேசியதை போட்டு உடைத்திருந்தார் டிடிவி தினகரன். அதுபோல, தன்னை ஆதரிக்கவில்லை என்றால், அவர்கள் எழுதிய கடிதங்களை எல்லாம் சசிகலா வெளியிட்டால் என்னாவது? என்ற கலக்கத்தில் இருக்கிறார்களாம்.  கட்சியா? கடிதமா? என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் விவகாரம் கசிந்து கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்திய விவகாரம் குறித்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி “அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான், மற்றவர்கள் தங்கள் சுயநலத்துக்காக கூறுகின்றனர். அதிமுகவில் இல்லாத சசிகலா, அதிமுக கொடியை பயன்படுத்தியது கண்டனத்திற்குரியது. பல்வேறு கோணங்களில் அதிமுகவை கைப்பற்ற தினகரன் முயற்சி செய்து பார்த்தார். தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக தன்பக்கம் இருப்பவர்களை ஏமாற்றி வருகிறார் தினகரன்” எனக் கூறினார்
அதிமுக-அமமுக இணைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த கே.பி.முனுசாமி “அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு டிடிவி தினகரன் மன்னிப்புக் கடிதம் தந்தால் அதுபற்றி தலைமை பரிசீலனை செய்யும்” எனத் தெரிவித்தார். இது மேலும் குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதிமுக, அமமுக இணைப்பையும், சசிகலாவையும் மறைமுகமாக ஏற்றுகொள்கிறாரா கே.பி.முனுசாமி என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதல்வர் பதவியை சசிகலா கேட்டவுடனே, ராஜனாமா செய்தவர் ஓ.பி.எஸ். அதன் பிறகு பல பிரச்சனைகளில் சசிகலாவை பற்றி பேசியிருந்தாலும், சசிகலா மீண்டும் ஓ.பி.எஸ்.-ஐ வைத்தே, அ.தி.மு.க.வில் மாற்றத்தைக் கொண்டுவரப் போவதாக சசிகலாவின் வட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.  இந்தச் சூழ்நிலையில்தான், துணை முதல்வரான ஓ.பி.எஸ்.-ன் இளைய மகன் ஜெயபிரதீப், தனது முகநூல் பக்கத்தில் பெங்களூருவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சசிகலா, பூரண குணமடைந்து, வரவேண்டும் என பதிவிட்டிருந்தார்.
சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்தார். ஆனால், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். இதுகுறித்து எந்த இடத்திலும் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மேலும் எடப்பாடியாருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சவால்கள் பல சமாளிக்கும் கட்டத்தில் உள்ளார் எடப்பாடியார்... தேர்தல் கூட்டணி மட்டுமல்ல அதிமுகவில் உட்கட்சி கூட்டணிகளும் அரங்கேறும் என்பது நிதர்சனம்.. புரளி, உண்மை என்னவென்று.. காலத்தின் சூழல்களே உணர்த்தும்...

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement