Logo

சூர சம்ஹாரம் செய்து விடுவேன் என்று பயப்படுகிறீர்களா?- மு.க.ஸ்டாலின்

சூர சம்ஹாரம் செய்து விடுவேன் என்று பயப்படுகிறீர்களா?
முதலமைச்சர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை, ஜன.31-

என் கையில் இருக்கும் வேலை பார்த்ததும் சூரசம்ஹாரம் செய்து விடுவேன் பயப்படுகிறாரா  என்று முதலமைச்சர் பழனிசாமிக்கு மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல்  பிரசார நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம், நாசரேத் பேட்டையில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார். 

இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: ஆவடி தொகுதியை பொறுத்தவரையில், பாண்டியராஜன் எம்.எல்.ஏ. மட்டுமல்ல, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரும் ஆவார். அவர் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அல்ல. இந்தி வளர்ச்சித்துறை அமைச்சர் என்று தனது துறைப் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்தியின் வளர்ச்சிக்காகத்தான் அவர் பாடுபடுகிறார். அவர் முதலில் பாஜ.க., அடுத்து தே.மு.தி.க., அடுத்து அ.தி.மு.க. இப்போதும், தோற்றதும் மறுபடியும் பா.ஜ.க.,வுக்கு செல்கிறாரா? இல்லையா? என்று பாருங்கள். அவர் தோற்கத்தான் போகிறார்கள். அவர் பா.ஜ..வுக்கு போகத்தான் போகிறார். அவர் ஆர்.எஸ்.எஸ்.இல் இருந்து வந்தவர். அதனால் தமிழ்நாட்டு மக்களைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை.
1962-ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்ட அண்ணா “கேடுகள் போக்கிட, நாடு வாழ்ந்திட, தி.மு.க.விற்கு நல்லாதரவு தாரீர்” என்ற முழக்கத்தை எடுத்து வைத்தார்கள். அதே முழக்கத்தைத்தான் இன்றைக்கு நான் உங்கள் முன்னால் எடுத்து வைக்கிறேன்.
அ.தி.மு.க. ஆட்சியால் இந்த தமிழகத்திற்கு எல்லா வகைகளிலும் கேடுகள் சூழ்ந்து விட்டது. உரிமை பெற்ற தமிழகமாக இல்லை. உணர்வு பெற்ற தமிழகமாக இல்லை. சுய ஆட்சி பெற்ற தமிழகமாக இல்லை. சுரணையற்ற தமிழகமாக இருக்கிறது. அடிமைத் தமிழகமாக இருக்கிறது. ஊழல் தமிழகமாக இருக்கிறது.10 ஆண்டுகளாக இந்தக் காட்சிகளைத்தான் நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதல் 5 ஆண்டு காலம் ஊழல் வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், அதற்குப் பிறகு தண்டனை பெற்றுச் சிறைக்குச் சென்று வந்து தன்னுடைய பதவிக்காலத்தை நாட்டு மக்களுக்கு பயன்படுத்தாத வகையிலும்  ஜெயலலிதா ஆட்சியை நடத்தினார்.
அவ்வாறு சிறைக்கு சென்றபோது நடுவில் சிறிது காலம் ஓ.பன்னீர்செல்வம் வழக்கம்போல் பொம்மை முதலமைச்சராகி, இந்த அரசை செயல்படாமல் முடக்கி வைத்திருந்தார்.
அடுத்த 5 ஆண்டு காலத்தில், தங்களுடைய நாற்காலிகளை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், கொள்ளையடிப்பதற்காகவும், அந்த கொள்ளைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், ஒரு சுயநல ஆட்சியை பழனிசாமியும், பன்னீர் செல்வமும் கொடுத்தார்கள் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை தங்களுடைய சுயநலத்திற்காக சூறையாடிய மாபெரும் குற்றவாளிகள் தான் பழனிசாமியும் – பன்னீர்செல்வமும்.இரண்டு பேரும் கொள்ளை அடித்து வைத்திருக்கும் பணம் எவ்வளவு என்று அவர்களுக்கே தெரியாது. அவர்கள் இருவரும் எதிரிகள்தான். அவர்கள் இருவருக்கும் ஆகாது. ஆனால் ஒன்றாகத்தான் இருப்பார்கள். ஏன் என்றால் அவ்வாறு நடித்தால்தான் சுருட்ட முடியும். அதனால் ஒன்றாக இருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆருக்கும்  ஜெயலலிதாவுக்கும் கோயில் திறந்து வைத்திருக்கிறார்கள். அப்போது பேசிய பழனிசாமியும், பன்னீர்செல்வமும் நம்மை விமர்சிக்கிறார்கள்.
நான் ‘இந்தியா டுடே’-வுக்கு ஒரு பேட்டி கொடுத்தேன். அப்போது என்னை பேட்டி எடுக்க வந்த ஒரு பெண் நிருபர் என்னிடத்தில், எம்.ஜி.ஆரும் நானும் இருக்கும் புகைப்படத்தைக் காண்பித்து, இதன் பின்னணி என்ன? ஞாபகம் இருக்கிறதா? என்று கேட்டார்கள்.
அப்போது நான், நன்றாக நினைவிருக்கிறது. 1971ஆம் ஆண்டு அண்ணா மறைவிற்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் 184 இடங்களில் வெற்றி பெற்று - இதுவரை தமிழ்நாட்டில் யாரும் பெற முடியாத வரலாற்று வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்த ஒரே கட்சி தி.மு.க. தான். கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைந்தது.  அந்தத் தேர்தலுக்கு நான் பிரசார நாடகம் நடத்தினேன். ‘முரசே முழங்கு’ என்ற பிரச்சார நாடகத்தில் எனக்கு கருணாநிதி வேடம். அதுதான் அந்தப் புகைப்படம். அந்த தேர்தலுக்குப்பிறகு வெற்றி விழா நடத்த முடிவு செய்து, அதற்காக கருணாநிதியிடமும், எம்.ஜி.ஆரிடமும் தேதி வாங்கினேன். நடித்த நடிகர்களை பாராட்டி மோதிரம் போட வேண்டும் கருணாநிதி,  எம்.ஜி.ஆர்.  எங்களைப் பாராட்டி சான்றிதழ் கொடுக்க வேண்டும். அந்த விழாவிற்கு “வெற்றி விழா” என்று நான் தலைப்பிட்டேன். அதற்கு கருணாநிதி ‘நிறைவு விழா’ என்று போடச் சொன்னார்.
ஏனென்றால் “நான் தான் ஒழுங்காக படிக்காமல் விட்டு விட்டேன். நீயாவது கொஞ்சம் படிக்க வேண்டும்” என்று எனக்கு அறிவுரை சொல்லி அவ்வாறு செய்தார் நாடகம் நடக்கிறது. அப்போது தலைவர்கள் எல்லாம் பேசினார்கள்.
அப்போது எம்.ஜி.ஆர். பேசிய போது, “நான் உன் பெரியப்பாவாக சொல்கிறேன் கேள். ஒழுங்காக படித்து, இப்போது எந்த அளவிற்கு அரசியலில் ஆர்வமாக இருக்கிறாயோ அதே அளவிற்கு இனிமேலும் இருக்க வேண்டும்” என்று அறிவுரை சொன்னார்.
இப்போது எம்.ஜி.ஆரைப் பற்றி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கிறார். இவர் எம்.ஜி.ஆர். முகத்தையாவது பார்த்திருப்பாரா? இன்றைக்கு தேர்தல் வரும் காரணத்தால்தான் அவர்கள் இவ்வாறு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு கோவிலை திறந்து வைத்துப் பேசிய பழனிசாமி, திருத்தணியில் நான் வேல் வைத்திருந்ததை விமர்சித்துள்ளார்.
வேல் எனக்கு பரிசளிக்கப்பட்டது. மாவட்ட திமுக  செயலாளர், பொதுமக்கள், கோயில் பூசாரிகள் எனக்கு வழங்கினார்கள். அதை நான் வைத்திருந்தேன். கடவுள் நம்பிக்கை கூடாது என்று நாம் சொல்கிறோமா? “கோயில்கள் கூடாது என்பதல்ல; கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விட கூடாது என்பதற்காக” என்று பராசக்தி திரைப்படத்தில்  கருணாநிதி எடுத்துக் கூறியிருக்கிறார். இதில் பழனிசாமிக்கு என்ன பிரச்னை வந்தது? வேலைப் பார்த்ததும் எதற்காக அவர் பயப்படுகிறார். சூரசம்ஹாரம் செய்துவிடுவேன் என்று பயப்படுகிறாரா?
அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக மக்கள் அதைத்தான் நிச்சயம் செய்யப் போகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு மட்டுமல்ல, பழனிசாமி - பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கைக்கும் சேர்த்தே முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்தான் இந்தத் தேர்தல்.  அவர்களை நான் விமர்சிப்பது என்பது தனிப்பட்ட முறையில் அல்ல. பழனிசாமி மீதோ, பன்னீர்செல்வம் மீதோ எனக்கு எந்தப் பகையும் இல்லை. அவர்களது அரசியல் நடவடிக்கைகள் தவறானது. அவர்களது ஆட்சி சுயநலமானது. அதனால் தான் விமர்சிக்கிறேன்.  அவர்களை அகற்றிவிட்டு உன்னதமான, ஒளிமயமான ஆட்சியை தமிழகத்துக்கு அமைத்துத் தருவதற்காக நான் உறுதியேற்றுள்ளேன். இவ்வாறு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்,

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement