Logo

தீவிர அரசியலில் ஈடுபடுவேன் சசிகலாவின் சவாலான பேச்சு!

தீவிர அரசியலில் ஈடுபடுவேன்

சசிகலாவின் சவாலான பேச்சு!

 

சென்னை :

தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை என்று கூறியுள்ள சசிகலா, அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணிய மட்டேன் என்று தெரிவித்துள்ளார். அன்புக்கு நான் அடிமை என்று கூறியுள்ள சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையான சசிகலா அதற்கு முன்னதாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றார். கொரோனா தொற்று நீங்கிய நிலையில் அவர் விக்டோரியா மருத்துவ மனையிலிருந்து கடந்த 31-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் தேவனஹள்ளியில் உள்ள கோடாகுருக்கி பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் அவர் அங்கு தன்னை நேற்று வரை தனிமைப்படுத்திக் கொண்டார். கொரோனா தனிமைப் படுத்துதலுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் ஆன போதே ஜெயலலிதா கார், அதிமுக கொடி என அதகளப்படுத்தினார். இதனால் அமைச்சர்கள் பலரும் கொந்தளித்தனர். சசிகலா பெங்களூருவில் இருந்து புறப்படுகிறார் என்ற உடன் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது, வன்முறைக்கு சதித் திட்டம் தீட்டி இருக்கிறார்கள் என அமைச்சர்கள் கூறினர்

இந்நிலையில், சசிகலா கொரோனா தனிமைப் படுத்துதலுக்குப் பிறகு இன்று பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பினார். பச்சை நிறத்திலான சேலை அணிந்து கொண்டிருந்தார்.  ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடி கட்டி பயணித்தார். பெங்களூருவில் இருந்தே அமமுகவினர் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர்.

தமிழக எல்லையை கடந்த போது முதல் அதிரடியாக அதிமுக நிர்வாகியின் காரில் ஏறினார். இதனால் அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா வலம் வருவதை அதிமுக அமைச்சர்களால் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. காரில் அதிமுக கட்சி கொடியை கட்டியிருந்த சசிகலாவிற்கு காவல்துறையினர் நோட்டீஸ் கொடுத்தனர். அதையும் மீறி காரில் கொடியுடன் பயணித்தார் சசிகலா.

ஓசூரில் மாரியம்மன் கோவிலில் வழிபட்ட சசிகலா, பிரத்தியங்கிரா தேவி கோவிலிலும் வழிபட்டார். கோவிலில் சசிகலாவிற்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. சசிகலா வரும் வழியெங்கும் தொண்டர்கள் மேளதாளம் முழங்கியது. பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பூ மழை தூவி வரவேற்பு கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி கத்திக்குப்பத்தில் தன்னை வரவேற்க காத்திருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, தொண்டர்கள், தமிழக மக்களின் அன்புக்கு நான் அடிமை என்று உருக்கமாக கூறினார். அடக்குமுறைக்கு நான் நான் அடிபணிய மாட்டேன் என்று தெரிவித்த சசிகலா, அன்புக்கு நான் அடிமை... தமிழ் பண்புக்கு நான் அடிமை என்று எம்ஜிஆரின் பாடலை மேற்கோள் காட்டி பேசினார் சசிகலா.

இதனைத் தொடர்ந்து வழிநெடுக ஆதரவாளர்களின் பிரமாண்ட வரவேற்புகளுடன் சசிகலாவின் வாகனம் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் ஊர்ந்து வந்தது. இதனால் இந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த களேபரங்களுடன் வாணியம்பாடி டோல்கேட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். 4 ஆண்டு சிறைவாசத்துக்குப் பின்னர் சசிகலா நடத்திய முதல் பிரஸ் மீட்.

எடுத்த எடுப்பிலேயே அதிமுவுக்கு உரிமை கோருபவராக, கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது; பீனிக்ஸ் பறவை போல அதிமுக மீண்டு வந்திருக்கிறது. புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம் என அதிரடி காட்டினார். மேலும் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் அடிமை; அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணியமாட்டேன் என்றும் பொடி வைத்து பேசினார் சசிகலா

இதன்பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார் சசிகலா. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என பகிரங்கமாக அறிவித்தார். அதேபோல் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது குறித்த கேள்விக்கு எதற்காக இதை செய்தார்கள்? என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்றார். மேலும் கொடியை பயன்படுத் தியதற்காக அமைச்சர்கள் புகாரளித்தது அவர்களின் பயத்தை காட்டுகிறது என்று தெரிவித்த சசிகலா, தாம் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் அதிமுக முன்னேற்றத்திற்காக எனது வாழ்நாளை அர்ப்பணிப்பேன் சசிகலா கூறியிருக்கிறார்.

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement