Logo

சென்னையில் பொது அமைதியை நிலைநாட்ட முக்கிய ரவுடிகள் 89 பேர் சிறையில் அடைப்பு

 

சென்னையில் பொது அமைதியை நிலைநாட்ட

முக்கிய ரவுடிகள் 89 பேர் சிறையில் அடைப்பு

 

சென்னை :

சென்னையில் பொது அமைதியை நிலை நாட்ட முக்கியமான ரவுடிகள் 89 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

போலீஸ் கமிஷனர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னையில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகள், சமூக விரோதிகள் குண்டர் சட்டத்தின் கீழும், உரிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறார்கள்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டு வருகிறார்கள்.

குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர்கள், உரிய நிப ந்தனையை மீறி தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டவர்களின் ஜாமீனும் ரத்து செய்யப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சென்னையில் அமைதியை நிலைநாட்ட வழிவகை செய்யப்படுகிறது. அந்த வகையில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்தவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி தொடங்கி இதுவரை 2,614 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கல்வெட்டு ரவி, சீசிங்ராஜா, ராதாகிருஷ்ணன், எண்ணூர் தனசேகர், காக்காதோப்பு பாலாஜி, ஆற்காடு சுரேஷ், தணிகா, கிருஷ்ணவேணி, தட்சிணாமூர்த்தி, பல்லு மதன் போன்ற பிரபலமான முக்கிய ரவுடிகள் 89 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 571 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் 3,705 குற்றவாளிகள் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

============================================================================

 

தனித்து போட்டியிட தேமுதிக தயார்-விஜயபிரபாகரன் சொல்கிறார்

பொள்ளாச்சி :

தனித்து போட்டியிட தேமுதிக தயார் என்று விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.

பொள்ளாச்சியில் தே.மு.தி.. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தே.மு.தி.. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறியதாவது, தமிழகத்தில் செல்லும் இடமெல்லாம் தே.மு.தி..வுக்கு வரவேற்பு உள்ளது. தே.மு.தி..வை யாராலும் அசைக்கமுடியாது. எனது தந்தையின் ரத்தம்தான் என் உடம்பிலும் ஓடுகிறது. ஆகவே தந்தையின் கனவை தாய் பிரேமலதா ஆலோசனையுடன் நான் நிறைவேற்றுவேன். அதற்காகவே தொண்டர்களை சந்திக்கிறேன். மூன்றாவது அணி அமைத்தால் சிலர் கிண்டல் செய்கிறார்கள்.

தே.மு.தி..வினருக்கு பொறுமையாகவும் இருக்க தெரியும், பூகம்பமாகவும் மாறத்தெரியும். கட்சியையும், தொண்டர்களையும் என்றுமே நாங்கள் அடகு வைக்கமாட்டோம். மற்றகட்சிகளை விட அதிகமாக தே.மு.தி..வில் இளைஞர்கள் உள்ளனர். கேப்டனால் தற்போது சரியாக பேச முடியவில்லை என்றாலும் அவரது குரல் முரசாக தமிழகம் முழுவதும் முழங்கும். தே.மு.தி..வுக்கு 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடும் தைரியம் உண்டு. அவரது சிந்தனை முழுவதும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்காகத்தான். அடைய வேண்டிய இலக்கை தே.மு.தி.. அடையும். ஜெயலலிதாவிற்கு பிறகு தமிழகத்திற்கு பெண் தலைவராக இருப்பவர் பிரேமலதா மட்டும்தான். அவரின் வழிகாட்டுதலால் தே.மு.தி.. இலக்கை அடையும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தே.மு.தி.. - .தி.மு.. கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. பேச்சுவார்த்தை தொடங்கும்போது எல்லாம் தெளிவாக கூறப்படும். எங்கள் வாக்கு வங்கி குறையவில்லை. நாங்கள் செல்லும் இடமெல்லாம் எழுச்சியாக உள்ளது. எந்த இடத்திலும வாக்கு சரிந்த மாதிரி தெரியவில்லை. ஒருமுறை தோற்றோம். அதற்காக தோல்வியே நிரந்தரம் இல்லை. எல்லாமே மாறும். ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கை சூழ்நிலை மாறும். எதற்காக இந்த கட்சியை ஆரம்பித்தோமோ அந்த இடத்தை அடைவோம் என்றார்.

 

============================================================================

 

கடல் சீற்றத்தை கட்டுப்படுத்த கடலோர காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டும்

சென்னை :

கடல் சீற்றத்தை கட்டுப்படுத்த கடலோர காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பா... நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, தமிழ்நாட்டில் கடல் சீற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இயற்கை நமக்கு அளித்த கொடையான அலையாத்திக் காடுகளின் (மாங்குரோவ் காடுகள்) பரப்பளவு கணிசமாக குறைந்திருப்பதாக ஆய்வு முடிவுகளில் தெரிய வந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

கடலோரப் பகுதிகளை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கும் அலையாத்திக் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் வனத்துறை சார்பில் செயற்கைக் கோள் மூலம் தமிழக வனப்பகுதிகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அது குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் 2017 முதல் 2019 வரையிலான காலத்தில் மாங்குரோவ் எனப்படும் அலையாத்திக் காடுகளின் பரப்பளவு 4 சதுர கி.மீ அளவுக்கு குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் தான் மோசமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் அலையாத்திக் காடுகள் குறிப்பிடத்தக்க அளவில் அழிந்து விட்டதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகள் கடல் சீற்றத்தை தடுப்பது மட்டுமின்றி, பறவைகளின் வாழ்விடமாகவும் திகழ்கிறது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பறவைகள் பிச்சாவரம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அலையாத்திக் காடுகளுக்கு ஆண்டு தோறும் வருகை தருகின்றன.

எனவே, அலையாத்திக் காடுகளை மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக் காடுகளின் பரப்பளவு 1995-2015 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 2,600 ஹெக்டேர் பரப்பளவு அதிகரித்துள்ளன.

அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகத்திலும் அலையாத்திக் காடுகளின் பரப்பளவு 1971 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான 44 ஆண்டுகளில் 6.76 சதுர கிலோமீட்டரில் இருந்து 14 மடங்கு அதிகரித்து 100 கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது. எனவே, திட்டமிட்டு செயல்பட்டால் தமிழ்நாட்டில் அலையாத்திக் காடுகளின் பரப்பளவை நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு அதிகரிக்கச் செய்வது சாத்தியமான ஒன்று தான்.

கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு கருதி தமிழக கடலோரப்பகுதிகளில் அலையாத்திக் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க சிறப்புத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

அலையாத்திக் காடுகளை பறவைகள் சரணாலயமாக மேம்படுத்துவது மட்டுமின்றி, அவற்றை ஒருங்கிணைத்து இயற்கை சுற்றுலா வளையமாக அறிவிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

============================================================================

 

ஐகோர்ட்டில் நேரடி விசாரணை தொடங்கியது

சென்னை :

10 மாதங்களுக்கு பிறகு சென்னை ஐகோர்ட்டிலும், மதுரை கிளையிலும் இன்று  நேரடி விசாரணை தொடங்கியது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் காணொலி காட்சி வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டன. பின்னர் அரசு அறிவித்த தளர்வுகள் காரணமாக ஒருசில வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்பட்டன. பெரும்பாலான வழக்குகள் காணொலி வாயிலாகவே விசாரிக்கப்பட்டன.

10 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் நேரடியாக விசாரணைகள் நடத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று சென்னை ஐகோர்ட்டிலும், மதுரை கிளையிலும் இன்று நேரடி விசாரணை தொடங்கியது.

ஆனாலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைப்படி சில கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகிறது. இறுதி வழக்கு விசாரணைகள் மட்டும் காலை, மாலை என இரண்டு வேளைகளில் விசாரிக்கப்படும். 1 மணி நேரத்துக்கு 5 வழக்குகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். மற்ற வழக்குகள் காணொலி மூலமே நடக்கும். ஒரு வழக்கில் இரு தரப்பிலும் தலா ஒரு வக்கீல் வீதம் கோர்ட்டு அறையின் பரப்பளவுக்கு ஏற்ப வக்கீல்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆஜராக வந்த வக்கீல்கள் உள்ளிட்ட அனைவரும் முக கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உடல் வெப்பத்தை சோதித்த பிறகே அனுமதிக்கப்பட்டார்கள்.

 

============================================================================

 

சசிகலா ஆதரவாளர்கள் பட்டாசு எடுத்து வந்த காரில் தீ விபத்து

கிருஷ்ணகிரி :

கிருஷ்ணகிரி அருகே சசிகலாவை வரவேற்க நின்றிருந்தவர்கள் கொளுத்திய பட்டாசில் இருந்து தீப்பற்றி இரு கார்கள் எரிந்து நாசமாகின.

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே நின்றிருந்தவர்கள், பட்டாசுகளை காரின் அருகே வைத்து கொளுத்தியுள்ளனர். இதில் ஒரு காரில் பற்றிய தீ அருகே இருந்த காருக்கும் பரவியது.

தீப்பிடித்து எரிந்த கார் வெடித்துவிடப் போகிறதோ என அஞ்சி அருகில் இருந்தவர்கள் தூரமாகச் சென்றுள்ளனர். இதனால் தீயை அணைக்க ஆளில்லாமல் 2 கார்களுகளும் முற்றிலும் எரிந்து நாசமாகின. அருகில் இருந்த மற்றொரு காரின் கண்ணாடியை உடைத்து அவசர அவசரமாக அந்த காரை அங்கிருந்து நகர்த்தினர்.

============================================================================

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement