Logo

மீஞ்சூர்-வண்டலூர் இடையே அமைக்கப்பட்ட 6 வழிச்சாலை திறப்பு

ரூ.1025 கோடி மதிப்பில்
மீஞ்சூர்-வண்டலூர் இடையே அமைக்கப்பட்ட 6 வழிச்சாலை திறப்பு

 

சென்னை, பிப்.9-
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, ஆவடி மற்றும் பொன்னேரி வட்டங்களுக்குட்பட்ட சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் கட்டமாக 1,025 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான 30.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை  சார்பில் அமைக்கப்பட்டுள்ள 6 வழித்தட பிரதான சாலையினை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நேற்று (8.2.2021) தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்
மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உட்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்தும், பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதிசெய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற  பணிகளை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, ஆவடி மற்றும் பொன்னேரி வட்டங்களுக்குட்பட்ட, சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் கட்டமாக 1,025 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெமிலிச்சேரி (தேசிய நெடுஞ்சாலை 716) முதல் பாடியநல்லூர் (தேசிய நெடுஞ்சாலை 16) வழியாக திருவொற்றியூர் & பொன்னேரி & பஞ்செட்டி சாலையில் உள்ள மீஞ்சூர் வரையில் 30.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள 6 வழித்தட பிரதான சாலையினை முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக நேற்று திறந்து வைத்தார்.

நெடுஞ்சாலைத் துறையில் 2018 - 2019 மற்றும் 2019 - 2020-ஆம் ஆண்டுகளுக்கான 94 தட்டச்சர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு அமைச்சுப்பணி தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை நேற்று  வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர்  ஆ.கார்த்திக், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் ரெ.கோதண்டராமன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஒய்.ஆர். பாலாஜி, ஜி.வி.ஆர். மற்றும் அசோகா நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


நிதி, மனிதவள மேலாண்மைத் திட்டத்தில் 
அரசின் வரவுகளை மின்செலுத்துச் சீட்டு நடைமுறை தொடக்கம்

சென்னை, பிப்.9-

நிதித்துறை சார்பில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தில்(IFHRMS)  அரசின் வரவுகளை மின்செலுத்துச் சீட்டு (e-challan)  மூலம் பெறும் நடைமுறையை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நேற்று (8.2.2021) தலைமைச் செயலகத்தில், காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்கள்.

அரசுப் பணிகள் திறம்பட மற்றும் செவ்வனே நடைபெற நிதி மற்றும் மனிதவள மேலாண்மையை ஒருமைப்படுத்தி ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 10.1.2019 அன்று துவக்கி வைத்தார்கள். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதின் மூலம், மாநிலம் முழுவதும்  உள்ள கருவூலம் மற்றும் சம்பளக்கணக்கு அலுவலகங்களில்  தற்போது 19,000-க்கும் மேற்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடியாக இணையத்தின் வாயிலாக பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்கின்றனர். மேலும், சுமார் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினி மயமாக்கப்பட்டு சம்பளப் பட்டியல், பதவி உயர்வு, பணி மாறுதல்கள், விடுப்பு போன்ற மற்ற விவரங்கள் உடனுக்குடன் பதிவிடப்பட்டு வருகிறது.  இந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டமானது, டிஜிட்டல் ஒப்பம்  (Digital Signature)   மற்றும் பயோமெட்ரிக் (Bio-Metric)   முறை மூலம் உறுதிப்படுத்தும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாகும்.
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் அடுத்த கட்டமாக, கருவூலத்தில் பெறப்படும் அரசின் வருவாய் இனங்களை மின்வரவாக (e-receipts)  மின் செலுத்துச்சீட்டு மூலமாக நேரடியாக பெறுவதற்கான நடைமுறையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று துவக்கி வைத்தார்கள். இதன்மூலம், பொதுமக்கள் / அரசு துறை நிறுவனங்கள் / உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை அரசிற்கு செலுத்த வேண்டிய வரவினங்களை, மின்வரவுகளாக   24 மணிநேரமும் தங்குதடையின்றி இணையத்தின் மூலம்(www.karuvoolam.tn.gov.in)   செலுத்த வசதிகள் ஏற்படுத்தப்படுவதால், அரசு நிகழ்நேர வருவாயை உடனுக்குடன் பெற இயலும். 

இச்சேவைகளுக்காக, பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி, இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய 4 வங்கிகளை திரட்டல் வங்கிகளாக(aggregator banks)  தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  இவற்றில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பரோடா வங்கி ஆகிய 2 வங்கிகள் இத்திட்டத்தில் ஒருங்கிணைப்பு பணிகளை முடித்துள்ள நிலையில் இவ்விரு வங்கிகளின் வாயிலாக முதற்கட்டமாக அரசின் வருவாய்கள் பெறப்பட்டு, அரசின் ரிசர்வ் வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  ஏற்கனவே நடைமுறையில் உள்ள வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்தும் திட்டமும் சிறிதுகாலத்திற்கு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.   

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், முதன்மைச் செயலாளர் / கருவூலக் கணக்கு ஆணையர் குமார் ஜயந்த், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பாங்க் ஆப் பரோடா வங்கி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement