Logo

சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தமிழக அரசியலில் புதிய அத்தியாயம்- வரலாறு எப்போதும் மறக்காது!

சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு 

தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் 
 வரலாறு எப்போதும் மறக்காது 

டி.டி.வி.தினகரன் நன்றி அறிக்கை

சென்னை:

சசிகலாவுக்கு மிகுந்த முகமலர்ச்சியோடு அளிக்கப்பட்ட வரவேற்பு தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்திருப்பதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகாவில் இருந்து தமிழகம் திரும்பிய சசிகலாவுக்கு பெங்களூருவில் தொடங்கி சென்னை வர 330 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு வழி நெடுக அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.  நேற்று (08/02/2021) காலையில் தொடங்கி இன்று (09/02/2021) காலை வரை தொடர்ந்து சுமார் 24 மணி நேரம் சசிகலாவுக்கு மிகுந்த முகமலர்ச்சியோடு அளிக்கப்பட்ட இந்த வரவேற்பு தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்திருக்கிறது.

கர்நாடகாவிலும், தமிழகத்திலும் தன்னெழுச்சியாக இத்தகைய பிரம்மாண்டமான வரவேற்பினை நிகழ்த்திய அம்மாவின் உண்மைத் தொண்டர்களான லட்சோப லட்சம் கழக உடன் பிறப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  அதிலும் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட நெருக்கடிகளையும், அச்சுறுத்தல்களையும், அத்துமீறல்களையும் மிகுந்த பொறுமையோடும், ராணுவ கட்டுப்பாட்டோடும் எதிர் கொண்டு என்னுடைய அன்பு வேண்டுகோளை ஒவ்வோர் இடத்திலும் கழக உடன்பிறப்புகள் செயல்படுத்தி காட்டியதை வரலாறு எப்போதும் மறக்காது.   ஒரு சாதனையாக நிகழ்த்தப்பட்டிருக்கும் சசிகலாவுக்கான வரவேற்பை உலகமெங்கும் கொண்டு சேர்த்த அனைத்து வகை ஊடகங்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். 

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் லட்சியப் பாதையில் புத்தெழுச்சியோடு பயணிப்போம். தமிழ்நாட்டின் எதிரியான தீயசக்தி கூட்டம் தலையெடுத்து விடாத வகையில் ஒற்றுமையுடன் நின்று, வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியை குவித்து அம்மாவுக்கு சமர்ப்பிக்க உறுதியேற்போம்.  இவ்வாறு டி.டி.வி. தினகரன் இன்று(09/02/2021) வெளியிட்டுள்ள இரண்டு பக்க அறிக்கையில்  தெரிவித்துள்ளார். இதே போன்று தனது டிவிட்டரிலும், முக நூல் பக்கதிலும் தனது நன்றியை பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement