Logo

இந்தோனேஷியாவில் ரத்தசிவப்பு நிறத்தில் ஓடும் வெள்ளம்!

இந்தோனேஷியாவில் ரத்தசிவப்பு நிறத்தில் ஓடும் வெள்ளம்!

ஜாவா, பிப்.9-

இந்தோனேஷியாவில் மழை பெய்து ரத்த சிவப்பு நிறத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா பகுதியில் ஜெயில் கோட் என்ற இடம் உள்ளது.  இங்குள்ள கிராமங்களில் ரத்த சிவப்பு நிறத்தில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வெள்ளத்தை சொல்போனில் படம் பிடித்து சமுக வலைத் தளங்களில் பதிவிட்டனர்.

இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது இந்தோனேஷியாவின் பெகலோஸ்கன் நகரின் தெற்கு பகுதியில் பாரம்பரிய முறையில் ஆடைகளுக்கு சாயமிடும் தொழிற்சாலைகள் உள்ளது. அந்த சாயம் மழைநீரில் கலந்ததால்தான் வெள்ளம் சிவப்பு நிறமாக மாறியுள்ளது என்றும் தெரிய வந்தது.

இதற்கு முன்பும் பெகலோஸ்கனில் உள்ள நதிகளும் இந்த சாய தொழிற்சாலைகளால் நிறம் மாறி இருக்கின்றன. இந்த முறையும் அதேபோன்ற வெள்ளம் இந்த கிராமங்களை சூழ்ந்து இருக்கிறது. அடுத்து மழை பெய்யும் போது நிறம் மாறிவிடும் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இந்தோனேஷியாவில் அடிக்கடி மழை பெய்துவதும் இயல்பான ஒன்று. சமீபத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 43 பேர் உயிரிழந்தனர். அதுபோல் இப்போதும் நடந்திருக்கிறது. மழை வெள்ளத்தில் சாயம் கலந்ததால் இந்த பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. சமீபத்தில் இந்தோனேஷியாவில் ஒரு விமான விபத்து ஏற்பட்டது. எரிமலை வெடிப்பும் ஏற்பட்டது. இப்போது மீண்டும் மழை பெய்து ரத்த சிவப்பு நிறத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அவ்வாறாக கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, ஜகர்தா நகரின் வடக்கே உள்ள மற்றொரு கிராமத்திலும் சாலைகளில் பச்சை நிற நீர் ஓடியுள்ளது. தற்போது, ஜெங்கோட் கிராமத்தில் செயல்பட்டு வரும் சாய ஆலையில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, சாலைகளில் ஓடிய நீர் அனைத்தும் சிவப்பு நிறத்துடன் தோற்றம் அளித்துள்ளது. இது குறித்து உள்ளுர் மக்கள் தெரிவிக்கையில், சாலைகளில் விதவிதமான நிறத்தில் நீர் ஓடுவது இயல்பானது என்றும் தெரிவித்தனர்

******************************************************

 

மியான்மரில் ராணுவ ஆட்சி

நீடிக்கும் மக்கள் போராட்டம்

யாங்கூன், பிப்.9-

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக யாங்கூன் நகரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

மியான்மரில் நடந்து முடிந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டி வந்த ராணுவம்  கடந்த 1-ம் தேதி ஆட்சியை கைப்பற்றியது. அத்துடன் ஆங் சான் சூ கியையும், அந்த நாட்டின் அதிபராக இருந்து வந்த வின் மைன்டையும் கைது செய்து வீட்டுச்சிறையில் தள்ளியது. ஓராண்டு கால நெருக்கடி நிலையையும் அறிவித்தது.

இதற்கிடையே, ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டின் மக்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர். வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்துகின்றனர். ராணுவ ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கி உள்ளனர். அரசு ஊழியர்களும், சுகாதார பணியாளர்களும் நடத்துகிற ஒத்துழையாமை இயக்கத்தில் பல தரப்பினரும் சேர்ந்து வருகின்றனர். இது ராணுவ ஆட்சிக்கு தலைவலியாக மாறி வருகிறது. இந்நிலையில், மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக யாங்கூன் நகரில் இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். மியான்மரின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான யாங்கூனில் மக்கள் பெருந்திரளாக கூடி, ராணுவ ஆட்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். ஆங் சான் சூ கி உள்ளிட்ட தலைவர்களை விடுதலை செய்யவும் வலியுறுத்தினர்.  தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் யாங்கூனில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை நடத்தி அதிர வைத்தனர்.

தங்களுக்கு ராணுவ ஆட்சி வேண்டாம், ஜனநாயக ஆட்சி தான் வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனை கட்டுப்படுத்த களமிறங்கியுள்ள இராணுவம், தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கலைத்து வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய போராட்டம் மியான்மரில் வெடித்துள்ளது.

******************************************************

 

கொரோனாவில் இருந்து மீண்டவர்களை

உருமாறிய வைரஸ் எளிதாக தாக்கும்

 

வாஷிங்டன், பிப்.9-

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் குணம் அடைந்தவர்களையும் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் தாக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. வைரஸ் பரவுவது சில நாடுகளில் குறைந்து வந்த நிலையில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உரு மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவியது.

மரபணுவில் மாற்றம் அடைந்த இந்த வைரஸ் முன்பைவிட 70 சதவீதம் வேகமாக பரவும் என்று தெரிவிக்கப்பட்டது. இதே போல் உருமாறிய கொரோனாவால் அதிக உயிரிழப்பு மற்றும் பாதிப்புகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்தனர். இதனால் இங்கிலாந்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதே போல் ஐரோப்பிய நாடுகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. உருமாறிய கொரோனா அதிக வீரியம் மிக்கதாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளும் பலன் அளிக்காமல் போகலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்கனவே அந்நோயின் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களை எளிதாக தாக்க வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனா வைரசை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் குணம் அடைந்தவர்களையும் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் தாக்கலாம்.

தடுப்பு மருந்துகளை செலுத்தி ஆய்வு செய்த போது உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளது. இந்த தரவு உண்மையாக இருந்தால், தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதில் நாம் நெருக்கமாக இருக்கிறோம் என்ற எண்ணத்தில் இருந்து பொது மக்கள் பின்வாங்க நேரிடும் என்றனர்.

******************************************************

 

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement