Logo

இன அழிப்பு நடவடிக்கையை கண்டித்து இலங்கையில் தமிழர்கள் எழுச்சி போராட்டம்

இன அழிப்பு நடவடிக்கையை கண்டித்து இலங்கையில் தமிழர்கள் எழுச்சி போராட்டம்

கொழும்பு, பிப்.9-

இலங்கையின் கிழக்கு மாகாண பொத்துவில் இருந்து பொலிகண்டி வரை தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி தமிழ் மக்கள் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினார்கள்.

இலங்கையின் வடக்கு- கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களின் உரிமையை பாதிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இலங்கை தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு, வடக்கு, கிழக்கு மாகாணங்களை புத்த மயமாக்குதல் ஆகியவற்றை கைவிட வேண்டும். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். காணாமல் போன தமிழர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும். முஸ்லிம் மக்களின் உடல் அடக்கம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு. மலையக மக்களின் சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகளை இலங்கை தமிழர்கள் முன்வைத்து வருகிறார்கள். ஆனால் இவற்றை இலங்கை அரசு கண்டு கொள்ளவில்லை.

எனவே இலங்கை தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து இலங்கை அரசுக்கு எதிராக அகிம்சை வழியில் போராடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் அமைப்புகள், அரசியல் பிரமுகர்கள், சமய தலைவர்கள், காணாமல் போனோரின் பெற்றோர்கள், முஸ்லிம் அமைப்புகள் இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்தனர்.

இதையடுத்து இலங்கையின் கிழக்கு மாகாண பொத்துவில் என்ற இடத்தில் இருந்து பொலிகண்டி வரை இந்த அகிம்சை எழுச்சி போராட்டம் நடத்தப்பட்டது. தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி தமிழ் மக்கள் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினார்கள்.

இறுதி நாளான்று கிளிநொச்சியில் போராட்டம் தொடங்கியது. யாழ்ப்பாணத்தை நோக்கி சென்ற இந்த பேரணியில் ஏராளமானோர் இணைந்தனர். போராட்டத்தை ஒடுக்க நீதிமன்ற உத்தரவு, போலீஸ் ஆகியவற்றை அரசு பயன்படுத்தி தடுக்க முயன்றது. என்றாலும் பேரணியும், போராட்டமும் வெற்றிகரமாக நடந்தது.

போராட்டம் நடைபெற்ற பகுதியில் தமிழர்கள் வாகனங்களை தடுக்க சிங்களர்கள் ஆணிகளை வீசினார்கள். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டோரை அடையாளம் காணும் வகையில் வீடியோ எடுத்தனர். என்றாலும் அமைதியான முறையில் தமிழர்கள் போராட்டத்தை நடத்தி நிறைவு செய்தனர். இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறும்போது, ‘யுத்தம் நடந்த காலத்துக்கு பிறகு தமிழர்களின் போராட்டம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடந்த இந்த எழுச்சி மிகு அகிம்சை போராட்டம், தமிழர் உரிமைகளை திரும்ப பெறுவதற்கான முதல் வெற்றி. இதுபோன்ற போராட்டங்கள் இனி வேறு வடிவில் நடைபெறும்’’ என்றார்.

******************************************************

 

அமெரிக்காவில் எச்1பி விசா பதிவு அடுத்த மாதம் தொடக்கம்

வாஷிங்டன், பிப்.9-

அமெரிக்காவில் 2022-ம் ஆண்டுக்கான எச்1பி விசாக்களுக்கான பதிவுகள் அடுத்த மாதம் (மார்ச்) 9ம் தேதி முதல் தொடங்கும் என்று அமெரிக்க குடியேற்ற துறை அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் வெளி நாட்டினர் தங்கி பணிபுரிவதற்காக எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதில் அதிகளவில் இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப பணியாளர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். ஆனால் வெளிநாட்டு பணியாளர்களால் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது என்று கூறி முன்னாள் அதிபர் டிரம்பின் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் எச்1பி உள்ளிட்ட விசாகள், நிரந்தர குடியுரிமை அட்டை ஆகியவற்றுக்கு தடை விதித்தார்.

பின்னர் இந்த தடையை மார்ச் மாதம் வரை நீட்டிப்பதாக அறிவித்தார். இதற்கிடையே டிரம்ப் தனது பதவிக்காலம் முடிவதற்கு 2 வாரங்கள் இருக்கும் நிலையில் எச்1பி விசாக்கள் ஒதுக்கீடு செய்யும் முறையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார்.

விசா ஒதுக்கீட்டில் குலுக்கல் முறைக்கு பதிலாக விண்ணப்பதாரர்களின் தகுதி, ஊதியம், பணித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் விசா வழங்கப்படும் என்ற நிர்வாக உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவு வருகிற மார்ச் 9ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இருந்தது.  இதற்கிடையே புதிய அதிபராக பொறுப்பேற்ற ஜோபைடனின் நிர்வாகம் எச்1பி விசா மீதான டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கையை தாமதப்படுத்துவதாக தெரிவித்தது.

எச்1பி விசா வழங்குவதில் இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை குலுக்கல் முறையே தொடரும் என்று ஜோபைடன் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது. இந்த உத்தரவால் இந்திய தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் அமெரிக்காவில் 2022-ம் ஆண்டுக்கான எச்1பி விசாக்களுக்கான பதிவுகள் அடுத்த மாதம் (மார்ச்) 9ம் தேதி முதல் தொடங்கும் என்று அமெரிக்க குடியேற்ற துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அத்துறை வெளியிட்ட அறிக்கையில், எச்1பி விசா விண்ணப்பிப்பதற்கான பதிவுகள் வருகிற மார்ச் 9ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை நடைபெறும். மார்ச் 31ம் தேதிக்குள் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

******************************************************

 

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement