கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கட்டாய மொழிப்பாடம் இல்லை- மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்
தமிழ் கட்டாய மொழிப்பாடம் இல்லை
மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை, பிப்.9-
தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கட்டாய மொழிப்பாடம் இல்லை என்பதற்கு முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் கண்டிப்பாக சமஸ்கிருதம் படித்து, தேர்ச்சி அடைந்தால் மட்டுமே, 6-ம் வகுப்பில் இருந்து 7-ம் வகுப்பிற்கு செல்ல முடியும்' என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக, வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ‘சமஸ்கிருதத்திற்கு பதில், தமிழை மொழிப்பாடமாக எடுத்து தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்க முடியாது' என்று வெளிவந்துள்ள இன்னொரு தகவல் பேரதிர்ச்சி அளிக்கிறது.
உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளத்தில் வாழும் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழியை பின்னுக்குத் தள்ளி வழக்கொழிந்து போன சமஸ்கிருதத்தை தமிழ்நாட்டு மாணவர்கள் மீது திணிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் தாய்மொழி விரோத நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுதவிர, 6 முதல் 8-ம் வகுப்பு வரை இந்தியும் கட்டாயம் என்றும், ஆனால், தமிழ் கட்டாய மொழிப்பாடம் இல்லை என்றும் அந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னைத் தமிழ்மொழியை, சொந்தத் தமிழ் மண்ணிலேயே அவமதிக்கும் துணிச்சல், மத்திய பா.ஜ.க. அரசுக்கு எப்படி, எங்கிருந்து வந்தது? 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களே இல்லை என்ற அவல நிலை உள்ளது. தமிழகத்தில் தமிழ்மொழிக்கு உரிய இடம் இல்லை. பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமனமும் இல்லை என்று மதிமயங்கி செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு, இந்தி பேசும் மாநிலங்களில் இதுபோன்று இந்தி கட்டாயம் இல்லை, இந்தி கற்றுக்கொடுக்க ஆசிரியர்களை நியமிக்க மாட்டோம் என்று சொல்லிவிட முடியுமா? மாணவர்கள் தமிழில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே, 6-ம் வகுப்பில் இருந்து 7-ம் வகுப்பிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்தி பேசும் வட மாநிலங்களில் உத்தரவு பிறப்பிக்க முடியுமா?
ஆனால் அங்கெல்லாம் செய்ய சிறிதும் துணிச்சல் இல்லாத மத்திய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டில் தமிழ் சொல்லிக் கொடுக்க மாட்டோம் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க மாட்டோம் என்று ஆணவமாக கூறுவதற்கு காரணம், தமிழகமும், தமிழர்களும் இளிச்சவாயர்கள், ஏமாந்தவர்கள் என்ற எண்ணமா?
‘தமிழ்நாட்டில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ் மொழியை ஏன் கற்கக் கூடாது' என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அதாவது சட்டத்தின் ஆட்சிக்கு, மத்திய பா.ஜ.க. அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயமாக கற்க உத்தரவிட்டு சமஸ்கிருத, இந்தித் திணிப்பை தமிழகத்தில் அறவே கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு நிச்சயமாக வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்ச் செம்மொழிக்கு, அ.தி.மு.க.-பா.ஜ.க. அரசுகள் கை கோர்த்து உருவாக்கும் பேராபத்தை தமிழகம் ஒருபோதும் மறக்காது, மன்னிக்காது. தமிழகத்தின் எதிர்காலமாம் இன்றைய மாணவ-மாணவிகள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள் என்று எடுத்துரைக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Leave A Comment