Logo

ஈரானில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி! - உலகச் செய்தி தொகுப்பு

ஈரானில் பொதுமக்களுக்கு

கொரோனா தடுப்பூசி!

 

ஈரான், பிப்.11-

ஈரானில் பொதுமக்களுக்கு ரஷியாவின் ஸ்புட்னிக்--வி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப் பட்டுள்ளது.

ஈரான் நாட்டில் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. சுகாதார பணியாளர்களின் தியாகத்தின் நினைவாக, கொரோனாவுக்கு எதிரான தேசிய தடுப்பூசி திட்டத்தை தொடங்கியிருப்பதாக அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.

ஈரானில் தற்போது 14 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 58,600 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் அரசு ரஷியாவிடம் இருந்து 20 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்தை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது.

இதில் முதல்கட்ட மருந்துகள் கடந்த வியாழக்கிழமை வந்தன. அடுத்து வரும் 18 மற்றும் 28ம் தேதிகளில் மீதமுள்ள மருந்துகள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

இந்திய--சீன எல்லை பிரச்சனை

அமைதியான தீர்வுக்கு அமெரிக்கா ஆதரவு..!

 

வாஷிங்டன், பிப்.11-  

அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சனையில் சீனா அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் சீனாவின் செயல்பாடுகளுக்கு கவலை தெரிவித்த அமெரிக்கா, இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்சனையில் அமைதியான தீர்வுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சினையில் சீனா அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது. எப்போதும், எங்கள் நட்பு நாடுகளுடன் நாங்கள் நிற்போம். இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.

இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதை நாங்கள் அறிவோம். நேரடி பேச்சுவார்த்தைக்கும் அமைதியான தீர்வு முறைக்கும் நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்றார்.

 

ரஷ்யா, ஈரான், சீன கடற்படைகளின்

கூட்டு போர் பயிற்சி-அமெரிக்கா அதிருப்தி

 

வாஷிங்டன், பிப்.11-  

ரஷ்யா, ஈரான், சீனா ஆகிய 3 நாடுகளின் கடற்படைகள் இந்திய பெருங்கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட போகின்றன.

அமெரிக்காவின் எதிரி நாடுகளான ரஷ்யா, ஈரான், சீனா ஆகிய 3 நாடுகளின் கடற்படைகள் இந்த மாதம் மத்தியில் இந்திய பெருங்கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட போகின்றன. இதற்கான அறிவிப்பை ஈரானுக்கான ரஷிய தூதர் லெவன் தாகரியன் வெளியிட்டார்.

இந்த 3 நாடுகளின் கடற்படைகளும் கடைசியாக 2019-ம் ஆண்டு டிசம்பரில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டன. இப்போது 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் இந்த நாடுகள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட இருப்பது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை அளித்தாலும் அதை அந்த நாடு வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

இதையொட்டி அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, கடற்படைகளின் திறன்களை பயன்படுத்தும் பயிற்சி எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இது போன்ற பயிற்சிகள், கடல்களின் சுதந்திரத்தை பாதுகாப் பதற்கும், உலகெங்கும் உள்ள எங்கள் கூட்டணிகள் மற்றும் கூட்டாண்மைகளை ஆதரிப்பதற்கும், நம்முடைய திறனுக்கு ஒரு தடையாக இருக்கும் என்று கருதவில்லை என கூறினார்.

 

7 மாதங்களுக்கு பிறகு செவ்வாய்

கிரகத்தை அடைந்தது ‘ஹோப்விண்கலம்

துபாய், பிப்.11-  

அமீரகத்தின் ‘ஹோப் விண்கலம் கடந்த 7 மாத பயணத்திற்கு பிறகு செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இதை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

அமீரக அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் வழிகாட்டுதலில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் அமீரகத்தின் செவ்வாய் கிரக பயண திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பயணத்திட்டத்தில் முதல் முறையாக அமீரகத்தில் முற்றிலும் உருவாக்கப்பட்ட ‘ஹோப் விண்கலம் ஒன்றை 2021-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவது இதன் நோக்கமாகும். இந்த விண்கலமானது மனிதர்கள் இல்லாமல் அனுப்ப திட்டமிடப்பட்டது.

அதன்படி விண்கலத்தை உருவாக்கும் பணியானது துபாய் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் விண்வெளி மையத்தின் சார்பில் நடைபெற்றது. இதற்கான முன்தயாரிப்பு பணிகளை அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கடந்த 2016-ம் ஆண்டில் தொடங்கி வைத்தார்.

அந்த விண்கலத்தை 200 அமீரக பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். இந்த ஆண்டில் அமீரகத்தின் 50-வது தேசிய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை கொண்டாடும் வகையில் இந்த செவ்வாய் கிரக பயண திட்டமானது செயல்படுத்தப்பட்டது.

அமீரகத்தின் ‘ஹோப் விண்கலம் கடந்து சென்ற மாபெரும் விண்வெளி பயணம் மிக நீண்ட தொலைவானதாகும். பூமியில் இருந்து மிக அருகாமையில் வரும்போது செவ்வாய் கிரகமானது 6 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். ஆனால் விண்கலம் ஒன்று அதன் சுற்றுவட்டப்பாதையை அடைய வேண்டும் என்றால் 49 கோடியே 35 லட்சம் கி.மீ தொலைவு பயணம் செய்தாக வேண்டும்.

அதற்காக ‘ஹோப் விண்கலம் பூமியில் இருந்து மணிக்கு 39 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் வேகத்தில் விண்ணில் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ‘ஹோப் விண்கலம் விண்வெளியில் மனிதர்களால் கற்பனை செய்ய முடியாத அளவில் மணிக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்தது.

பின்னர், செவ்வாய் கிரகத்திற்கு மிக அருகில் சென்றவுடன் அதன் வேகமானது மணிக்கு 18 ஆயிரம் கிலோமீட்டர் வேகமாக குறைக்கப்பட்டது. இதில் பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு இந்த விண்கலம் சென்றடைய 204 நாட்கள் எடுத்துக்கொண்டது. அதாவது 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ம் தேதி தொடங்கிய பயணம் இந்த ஆண்டில் நேற்று முன்தினம் செவ்வாய் கிரகத்தின் அருகே சென்றடைந்தது. இதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பான் நாட்டில் உள்ள டனகஷிமா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

அமீரகம் மட்டுமல்லாமல் உலகமே எதிர்பார்த்துக் கொண்டு இருந்த இறுதிகட்ட நிமிடங்கள் பலரை நிமிர்ந்து பார்க்க வைத்தது. அந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள டெல்டா 5 என்ற 6 திரஸ்டர் என்ஜின்கள் சுற்றுவட்டப்பாதையை நெருங்கும்போது இயக்கப்பட்டது. இதனை துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் இயக்கப்பட்டது. இதில் அந்த விண்கலத்தில் உள்ள பாதி எரிபொருள் செலவிடப்பட்டது. மிகச்சரியாக 27 நிமிடங்கள் இயக்கப்பட்டது.

ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை நெருங்கியது. ஆனால் மிக நீண்ட தொலைவு காரணமானதால் அதனை உறுதிப்படுத்தும் சிக்னல் 12 நிமிடங்கள் தாமதமாக பூமிக்கு அனுப்பப்பட்டது. இந்த சிக்னல்கள் ஸ்பெயின் நாட்டி மாட்ரிட் பகுதியில் உள்ள ஆண்டெனா மூலம் பெறப்பட்டது. முதல் சிக்னல் கிடைத்ததும் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் கைதட்டி ஆராவாரம் செய்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிலையில் அடுத்த சிக்னல் 27 நிமிடங்கள் திரஸ்டர் என்ஜின்கள் இயங்கி முடித்ததும் கிடைத்தது. இதில் எந்த திரஸ்டர் என்ஜினும் பழுது இல்லாமல் இயங்கியது. சரியாக செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை ‘ஹோப் விண்கலம் அடைந்ததை திட்ட மேலாளர் ஒமரான் ஷரப் உறுதி செய்து அறிவித்தார். உடனடியாக கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் கைதட்டி ஆராவாரம் செய்தனர்.

தற்போது அந்த ‘ஹோப் விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பில் 1,062 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டு, 25 டிகிரி கோணத்தில் அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்ற தொடங்கியது. இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பு ஆய்வு கருவிகள் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேலடுக்கில் உள்ள காலநிலை, பனி மேகங்கள், அங்குள்ள வானில் உள்ள காற்று மண்டலத்தில் கலந்துள்ள ஆக்சிஜன், ஹைட்ரஹன் மூலக்கூறுகளின் அளவு ஆகியவை ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்காக சிறப்பு உணரும் பகுதிகளுடன் கூடிய 3 கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

செவ்வாய் கிரகத்தின் பரப்பில் இருந்து அதிகபட்சமாக 49 ஆயிரத்து 380 கி.மீ உயரத்தில் இருந்தும், குறைந்தபட்சமாக 1000 கி.மீ தொலைவில் இருந்தும் தகவல்களை அளிக்க உள்ளது. இந்த ‘ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்தை முழுமையாக சுற்றிவர 55 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

ஹோப் விண்கல பயணத்தினை அமீரக தலைவர்கள் துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்திற்கு சென்று ஆர்வத்துடன் கவனித்து வந்தனர். வெற்றிகரமாக செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்ததும் அமீரக தலைவர்கள் மட்டற்ற மகிழ்ச்சியை அடைந்தனர்.

அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான், துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஆகியோர் நேரடியாக கட்டுப்பாட்டு மையத்திற்குள் சென்று தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து அமீரக பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இதையடுத்து அமீரகத்தின் ஏனைய பகுதிகளின் ஆட்சியாளர்கள், பட்டத்து இளவரசர்கள், அமீரக அமைச்சர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் என பலரும் தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் உற்சாகத்துடன் தங்கள் வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.

இந்த மகத்தான வரலாற்று சிறப்புமிக்க சாதனைக்கு அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் விண்வெளி ஏஜென்சிகள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. வெற்றியை கொண்டாடும் வகையில் புர்ஜ் கலீபாவில் சிறப்பு வாணவேடிக்கை மற்றும் லேசர் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

 

புதைகுழியில் சிக்கிய

குதிரை பத்திரமாக மீட்பு

 

லண்டன், பிப்.11-

இங்கிலாந்தில் புதைகுழியில் சிக்கி உயிருக்குப் போராடிய குதிரை நீண்ட முயற்சிக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டது.

வேல்ஸ் பகுதியில் வளர்ப்புக் குதிரை ஒன்று நெகிழ்வு தன்மை கொண்ட மணல் பகுதிக்கு வந்த குதிரை புதைகுழியில் சிக்கி உயிருக்குப் போராடியது. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் முதற்கட்டமாக குதிரை மேலும் முழுகாமல் இருக்க, அதன் கழுத்தில் ரப்பர் வளையத்தைப் பொருத்தினர். பின்னர் நீண்ட நேரமாக பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பின்னர் குதிரை பத்திரமாக மீட்கப்பட்டது.

 

 

உலகின் மிக பழமையான விலங்கின் எச்சம் கண்டுபிடிப்பு..!

போபால், பிப்.11-

உலகின் மிக பழமையான விலங்கின் எச்சத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் அடுத்த பழங்கால பீம்பேத்கா கற்பாறைகள் பகுதியில் டிக்கின்சோ என்ற பழங்கால விலங்கின் எச்சத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். ஆராய்ச்சியாளர்களின் தகவல் படி விலங்கின் படிமம் 17 அங்குல நீளம் கொண்டதாகவும், சுமார் 570 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

சவுதிக்கு ஆயுதங்கள் ஏற்றுமதிக்கு

இங்கிலாந்து ஒப்புதல்

 

 

லண்டன், பிப்.11-

சவுதிக்கு ஒன்று புள்ளி 9 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் ஏற்றுமதிக்கு இங்கிலாந்து ஒப்புதல் அளித்துள்ளது.

ஏமன் நாட்டில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிடும் சவுதிக்கு ஆயுதங்கள் ஏற்றுமதிக்கு கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்து தடை விதித்தது.

இந்நிலையில் ஏமன் பிரச்னையில் சவுதிக்கு வழங்கி வந்த ஆதரவை அமெரிக்க வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, ஆயுத ஏற்றுமதிக்கு இங்கிலாந்து ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி ஏவுகணைகள், குண்டுகள் போன்றவை ஆயுதப்பட்டியலில் அடங்கும். இந்த ஆயுதங்களின் ஏற்றுமதி விரைவில் தொடங்கும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement