Logo

தலைமை தேர்தல் ஆணையருடன் அரசியல் கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு

தலைமை தேர்தல் ஆணையருடன் 
அரசியல் கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு

சென்னை, பிப்.11-

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்தனர்.
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் சட்டப்பேரவை காலம் வருகிற ஜூன் மாதத்துக்குள் முடிகிறது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் மே மாதத்துக்குள் நடத்தி முடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தேர்தலுக்காக புதிய வாக்காளர் பட்டியல் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது. இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் ஓட்டு பயன்படுத்தும் முறை நடைமுறைபடுத்தப்பட உள்ளது. கொரோனா காலமாக உள்ளதால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, 90 ஆயிரம் வாக்குச்சாவடியாக அதிகரிக்கப்படுகிறது. ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்பதை ஆண்-பெண் வாக்குச்சாவடிகளாக பிரிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தமிழகத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை கவனிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் பொதுச்செயலாளர் உமேஷ் சின்கா, துணை தேர்தல் ஆணையர் சுதிப் ஜெயின், ஆசிஷ் குந்த்ரா, துணை தேர்தல் ஆணையர் ஸ்ரீனிவாசா, பங்கஜ் ஸ்ரீவத்சவா ஆகியோர் அடங்கிய உயர் மட்ட குழுவினர் கடந்த டிசம்பர் மாதம் 21, 22 ஆகிய இரு தேதிகளில் சென்னை வந்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்று இருந்தனர். அப்போது தமிழக சட்டசபை தேர்தலை ஒரே நாளில் நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி கூறியிருந்தனர்.
இந்தநிலையில் சட்டசபை தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று சென்னை வந்தார். அவருடன் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ்குமார், கூடுதல் செயலாளர் ஷிபாலி சரண் ஆகியோரும் வந்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்தனர். அப்போது சட்டசபை பொதுதேர்தல் தொடர்பாக ஒவ்வொரு கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு அறிந்தனர்.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், காங்கிரஸ் சார்பில் மாநில துணைத் தலைவர் ஆர்.தாமோதரன், சட்டப்பிரிவு அமைப்பாளர் எஸ்.கே.நவாஸ் மற்றும் பாரதிய ஜனதா, தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 10 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்திய தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோரா ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளையும் தனித்தனியாக அழைத்து அவர்களிடம் கருத்துக்களை கேட்டார்.
அப்போது தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், தமிழகத்தில் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவத்தையும் அதிகளவில் ஈடுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். வாக்காளர் பட்டியலில் இறந்த வாக்காளர்களை நீக்காமல் வைத்திருப்பது பற்றியும் குறிப்பிட்டார். வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் பற்றி கடந்த முறை தேர்தல் கமி‌ஷனில் முறையிட்டும் இதுவரை அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று முறையிட்டனர். எங்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினர். அ.தி.மு.க. சார்பில்  வலியுறுத்தும் போது, தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
காங்கிரஸ் சார்பில் பங்கேற்ற ஆர்.தாமோதரன் கூறியதாவது, 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். ஏனென்றால் இது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு போட வழிவகுத்து விடும். எனவே 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டுகளை அறிமுகப்படுத்த கூடாது.
தமிழகத்தில் தேர்தலை ஒரே தேதியில் நடத்த வேண்டும். வாக்குப்பதிவு முடிந்தவுடன் 10 நாட்களுக்குள் ஓட்டுக்களை எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும். நீண்ட நாள் காத்திருக்கும் சூழ்நிலையை உருவாக்க கூடாது. அதற்கேற்ப தேர்தல் அட்டவணையை தயாரிக்க வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 56 ஆயிரத்து 300 பேரை நீக்கி இருக்கிறார்கள். 90 ஆயிரத்து 479 பேரை புதிதாக சேர்த்து இருக்கிறார்கள். இதில் குளறுபடி இருப்பதாக கடந்த முறையே நாங்கள் புகார் செய்தோம். ஆனால் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விவரம் இதுவரை எங்களுக்கு தெரிவிக்கவில்லை.
243 தொகுதிகளுக்கும் வெளிமாநில தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தேர்தல் கமி‌ஷன் தடுத்து நிறுத்த வேண்டும். கோடைகாலமாக இருப்பதால் ஓட்டு சாவடியில் சாமியானா பந்தல், குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். கொரோனா கால சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்து வாக்காளர்களுக்கு கிருமி நாசினி கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு தாமோதரன் வலியுறுத்தினார்.
இதே போல் மற்ற கட்சி பிரதிநிதிகளும் தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இன்று (11-ம் தேதி) காலை 10 மணிக்கு வருமான வரித்துறை மற்றும் வங்கி உயர் அதிகாரிகளை வர வழைத்து பல்வேறு தேர்தல் கட்டுப்பாடுகள் குறித்து விளக்குகிறார்.
காலை 11 மணிக்கு தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோரா ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு மதியம் 1 மணியளவில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அப்போது தேர்தலுக்காக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்ற விவரங்களை விரிவாக தெரிவிக்கிறார். அதன் பிறகு மாலை 5 மணிக்கு புதுச்சேரிக்கு செல்கிறார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லி சென்றதும் விரிவாக ஆலோசித்து தேர்தல் தேதியை முடிவு செய்கிறார். இதே போல் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் தேதி முடிவு செய்யப்படுகிறது. பின்னர் அடுத்த மாதம் முதல் வாரம் தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிக்க உள்ளார்.

 

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement