Logo

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நேரம் 1 மணி நேரம் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நேரம் 
1 மணி நேரம் அதிகரிப்பு

கூடுதலாக 25 ஆயிரம் வாக்குச்சாவடிகள்

சென்னை, பிப்.12-
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நேரம் 1 மணி நேரம் கூடுதலாக்கப்படவுள்ளது, 25 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்படும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவது குறித்து தமிழ்நாடு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று (10-2-2021) ஆலோசனை நடத்திய நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
சென்னையில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து  சுனில் அரோரா விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மே 24-ம் தேதியுடன் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதவிக் காலம் நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. வாக்குப்பதிவு முடிந்து 2 நாள்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாகவே இருக்கும். வழக்கம் போலவே வரும் தேர்தலிலும் அதிகமான வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கிறோம். அதே வேளையில், இந்த முறை வாக்கு சதவீதத்தை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் பேரிடர் சூழலில் பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்த வேண்டியது அவசியம். வாக்காளர்கள் எவ்வித தயக்கமும் இன்றி வாக்குச்சாவடிக்கு வர நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகமாக இருந்தபோதே பீகாரில் பேரவைத் தேர்தல் நடத்திக் காட்டினோம்.
புதிய வாக்காளர்கள், பெண்கள், முதியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நோய் பரவல் குறைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, தமிழ்நாட்டில் தற்போது உள்ள வாக்குச்சாவடி                                                          
 மையங்களை 68 ஆயிரத்திலிருந்து 93 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளன. அதாவது ஏற்கனவே இருப்பதைவிட தற்போது 25 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்படும்.
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஞ்சல் முறையில் வாக்களிக்கும் திட்டத்துக்கு அரசியல் கட்சிகள் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கின்றன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சிறப்பு பார்வையாளர்கள் 2 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறினார். 
தமிழக சட்டசபை தேர்தல் எப்போது?
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது நடத்தப்படும் என டெல்லி சென்ற பிறகு அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறினார்.
சுங்க இலாகா அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர். வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தது தொடர்பாக தகவல்கள் அடுத்த 24 மணி நேரத்தில் வெளியிடப்படும்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது நடத்தப்படும் என டெல்லி சென்ற பிறகு அறிவிக்கப்படும். தமிழக சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் நடத்தப்படும். ஆர்.கே.நகர், வேலூர் இடைத்தேர்தல் போன்று சட்டசபை தேர்தல் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement