Logo

அரசு நிலம், நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ள உத்தரவு!- செய்தி தொகுப்பு

அரசு நிலம், நீர்வழித் தடங்களில் உள்ள

ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ள உத்தரவு!

 

சென்னை, பிப்.12-

அரசு நிலம், நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமி ப்புகளை இடித்து தள்ளும்படி அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராமாபுரம் பகுதியில் இருந்த சாலையை கோவில் நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாக கூறி அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோவில் நிர்வாகம் சாலையை ஆக்கிரமித்ததா? எப்போது இந்த ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டன என்பன உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதிலளிக்காததால், அரசு நிலத்தை கோவில்

நிர்வாகம் ஆக்கிரமித் திருந்தாலும், அவற்றை இடித்து தள்ள வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், குறிப்பிட்ட அந்தப்பகுதியை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

இந்த ஆய்வுக் குழுவில், மனுதாரர் பிரதிநிதியும், கோவில் நிர்வாக பிரதிநிதியும் இடம் பெற வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதேபோல, ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசியல் காரணங்களுக்காக ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என அரசு அதிகாரிகள் மீது அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், இனி பாரபட்சம் பாராமல் நீதிமன்றத்தின் உத்தரவு என கூறி அரசு நிலம், நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்தனர்.

 

ம.நீ.ம., கட்சியின் முதல்வர் வேட்பாளராக

கமல்ஹாசனை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றம்

 

சென்னை, பிப்.12-

முதலமைச்சர் வேட்பா ளராக கமல்ஹாசனை தேர்வு செய்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை-வானகரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்ற மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்திரத் தலைவராக கமல்ஹாசன் செயல்படுவார் எனவும், தேர்தல்களுக்கான கூட்டணி அமைப்பது, தனித்துக் களம் காண்பது, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க தலைவர் கமல்ஹாசனுக்கு முழு அதிகாரம் உள்ளது எனவும்.

2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி ஒன்றே குறிக்கோளாகக்கொண்டு உழைத்து மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் களைப் பெருவெற்றி பெறச் செய்து தலைவர் கமல்ஹாசனை தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்கச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை எனவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய,

மாநில அரசுகளுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, பிப்.12-

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை விரைவில் சதமடிக்கும் என்கிற அச்சம் மக்களிடம் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி, பெட்ரோல்-டீசல் மீதான வரிகளைக் குறைத்து, விலைக் குறைப்புக்கு வழி வகுத்திட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கட்டுக்குள் உள்ள நிலையிலும், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையினை நாளுக்கு நாள் உயர்த்துவதை வாடிக்கையாகக் கொண்டு மக்களை வதைத்து வருகிறது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு. அதன் விளைவாக, பெட்ரோல் விலை புதிய உச்சமாக ஒரு லிட்டர் ரூ.90-ஐ கடந்துள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் விலையைவிட 22 காசுகள் உயர்ந்து 90 ரூபாய் 18 காசுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையாகிறது. இரு சக்கர வாகனங்களைப் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலையில், இந்த விலையேற்றம் என்பது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கக்கூடியதாகும். அதுபோலவே, டீசல் விலையும் 28 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் 83 ரூபாய் 18 காசுக்கு விற்பனையாகிறது. சரக்குப் போக்குவரத்து-பயணிகள் போக்குவரத்து ஆகியவற்றுக்கு டீசல் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால் அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த விலையேற்றம் உள்ளது.

மத்திய அரசின் டைனமிக் கொள்கையின் அடிப்படையில், சர்வதேசச் சந்தையின் விலை ஏற்ற-இறக்கத்திற்கேற்ப இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்-டீசல் விலையினை நிர்ணயிக்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம் மட்டும் காண்கிறதே தவிர, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாகக் குறைந்தாலும், இந்தியச் சந்தையில் பெட்ரோல்-டீசல் விலை குறைவதேயில்லை. மாறாக, உயர்ந்து கொண்டே இருக்கின்றன.

கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் இந்த விலையேற்றக் கொடுமை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி-சுத்திகரிப்புச் செலவுகளுக்கு மேல் மத்திய அரசின் கடுமையான வரி விதிப்பும், மாநில அரசு சார்பிலான வரி விதிப்புகளும் மக்களை வதைக்கும் விலை உயர்வுக்கு காரணமாகின்றன.

மாநில அரசுக்குச் சேர வேண்டிய வரிவருவாயை மத்திய பாஜக அரசு ஏற்கனவே பறித்துவிட்ட நிலையில், வரிகளின் வாயிலாக பெடரோல்-டீசல் விலையை உயர்த்தி பொதுமக்களையும் நேரடியாகத் துன்புறுத்தும் கொடுமைக்கு உடனே முற்றுப்புள்ளி வைத்திட வலியுறுத்துகிறேன். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை விரைவில் சதமடிக்கும் என்கிற அச்சம் மக்களிடம் உள்ளது. அன்றாடத் தேவையாகிவிட்ட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வு வணிகம் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்போது விலைவாசி கடுமையாக ஏறும். அதுவும் மக்கள் மீதே சுமையாகும்.

கொரோனா நோய்த்தொற்றுப் பேரிடர் எனும் நெருப்பு இன்னும் முழுமையாக அணையாத நிலையில், அதன் மீது விலையேற்றம் என்ற பெயரில் பெட்ரோல் ஊற்ற வேண்டாம். மக்களின் சுமையைக் குறைக்க வேண்டியதே ஆள்வோரின் பொறுப்பு. அதனால் உடனடியாக பெட்ரோல்-டீசல் மீதான வரிகளைக் குறைத்து விலைக் குறைப்புக்கு வழி வகுத்திடுக என மத்திய அரசை வலியுறுத்துகிறேன். மாநில அரசுக்கும் இது பொருந்தும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?

அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

ஈரோடு, பிப்.12--

தமிழகத்தில் 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை திட்ட பணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் நேற்று பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் இணைக்கப்படாத ஏரி, குளங்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் இல்லை. அதற்கு பதிலாக 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்.

இன்றைய சூழ்நிலையில் 6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை. தற்போது 98.5 சதவிகித மாணவர்கள் பள்ளிக்கு வருகை தருகிறார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிறப்பாசிரியர்களுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் நிதி 5500 ரூபாய் மட்டும் தான். ஆனால் தமிழக அரசு ரூ.10 ஆயிரம் வழங்கி வருகிறது. குறிப்பிட்ட உடற்பயிற்சி ஆசிரியர்கள் காலி பணி இடங்கள் நிரப்பபட்டுள்ளது.

ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப இந்த மாத இறுதிக்குள் அதற்கான அட்டவணை வெளியிடப்படும். நீட் தேர்வு இருமுறை நடத்துவது குறித்து மத்திய அரசு கடிதங்கள் வந்த பிறகுதான் நீட் தேர்வு எவ்வாறு நடத்துவது என்பது முடிவு செய்யப்படும்.

10, 12-ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணைகள் வெளியிடுவது குறித்து முதல்வர் முடிவு செய்து பள்ளிகல்வித்துறை ஆலோசனையுடன் அட்டவணைகள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

பா.ஜ.க., அரசு மக்களை பிரித்து ஒற்றுமையை குலைக்கிறது-கனிமொழி

திருப்பூர், பிப்.12-

பா.ஜ.க அரசு மக்களை பிரித்து ஒற்றுமையை குலைத்து பிரித்தாளுகிறது என உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக எம்.பி. கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றியுள்ளார்.

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், உடுமலை சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார். உடுமலை பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் திறந்த வேனில் பிரசாரத்தை தொடங்கினார்.

அப்போது கனிமொழி எம்.பி. பேசியதாவது, மறைந்த தி.மு.க., தலைவர் கலைஞர் அனைத்து சாதியினரும் ஒற்றுமையுடன் ஒரே இடத்தில் நல்லிணக்கத்துடன் வாழவேண்டும் என்பதற்காக சமத்துவபுரத்தை உருவாக்கினார். ஆனால் பா.ஜனதா அரசு மக்களை பிரித்து ஒற்றுமையை குலைத்து பிரித்தாளும் சூழ்நிலையை கையாண்டு வெறுப்பு உணர்வை தூண்டி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும்போது 100 நாட்களுக்கு கூட அ.தி.மு.க., அரசு நீடிக்காது என்று ஸ்டாலின் கூறினார். தற்போது நாங்கள் ஆட்சியை நிறைவு செய்யும் நிலையை எட்டிவிட்டோம். அவரால் என்ன செய்ய முடிந்தது என்று கேட்டு வருகிறார்.

தமிழ்நாட்டின் தன்மானத்தை பா.ஜவிடம் அடமானம் வைத்து அதன் கட்டுப்பாட்டில் இயங்குவது ஒரு ஆட்சியா? இது ஒரு சாதனையா? என்று நான் கேட்கிறேன்.

தற்போது ரேசன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குளறுபடி உள்ளது. அதிகாரம் படைத்தோருக்கு எளிதில் பொருட்கள் கிடைத்து விடுகிறது. ஏழை, எளியோருக்கு பொருட்கள் கிடைப்பதில்லை. இது தான் அ.தி.மு.க.வின் சாதனையா? என்று பேசினார்.

தி.மு.க.ஆட்சிக்கு வந்ததும் கல்வி கடன் ரத்து செய்யப்படும், நெசவாளர்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

பிரச்சாரத்தின்போது மடத்துக்குளம் திமுக எம்.எல்.ஏ ஜெயராமகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

சுற்றுபயணத்தின்போது  நெசவாளர்கள், தொழிலாளிகள் மலைவாழ் மக்கள் விவசாயிகள் என பல்வேறு தரப்பினர் இடையே கனிமொழி கலந்துரையாடினார். இந்நிலையில் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி மலையில் மலைவாழ் மக்களைச் சந்தித்துப் பேசினார்.  அப்போது அப்பகுதி தென்னை ஓலையில் பின்னல் போடும் பெண்களிடம் கலந்துரையாடிய அவர் அப்போது ஓலைதடுக்குப்பின்னல் போட்டு உற்சாகம் காட்டினார்

தொடர்ந்து மலைவாழ் மக்களுக்குத் தேவையான பட்டா குடிநீர் வசதி சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து உடுமலை நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் கனிமொழி பேசினார்.

 

50 பேர் கொண்ட லிஸ்ட்

ரெடி-குஷியில் அதிமுக..!

 

சென்னை, பிப்.12-

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்து விடுதலையான சசிகலா, ஆதரவாளர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் சென்னை திரும்பினார். அவரது வருகை அதிமுகவை பெரிதும் பாதிக்கும் என எதிர்கட்சியினர் பிரச்சாரக் கூட்டங்களில் கூறி வருகின்றனர்.

அதேவேளையில், சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் அவரது பக்கம் சாய்ந்து விடுவார் என்ற தகவல் வெளியாகியது. அதற்கேற்றாற் போலவே, ஓபிஎஸின் இளைய மகன் ஜெய் பிரதீப், சிறையில் இருந்து வெளியாகிய சசிகலாவை வாழ்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும், இது தனது தனிப்பட்ட கருத்து, அரசியல் கிடையாது எனவும் விளக்கமளித்திருந்தார்.

என்னதான் விளக்கம் அளித்தாலும் தற்போது இருக்கும் சூழ்நிலையில், ஓபிஎஸ் மகன் செய்ததை முதலமைச்சர் பழனிசாமி தரப்பினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த விவகாரம் அடங்குவதற்குள், மன்னிப்பு கடிதம் கொடுத்தால் தினகரன் மற்றும் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி கூறினார். இவரது இந்த அறிவிப்பும் ஓபிஎஸ் தரப்பில் இருந்தே வெளியிடக்கூறியதாகவே பார்க்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு எல்லாம் கட்சியுடையதல்ல கேபி முனுசாமியின் சொந்த கருத்து என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குரலாக அமைச்சர் ஜெயக்குமார் ஒலித்தார்.

அதேவேளையில், சசிகலா தொடர்பாக ஓ.பன்னீர் செல்வமும் எந்தவித கருத்தும் கூறாமல் இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தது முதல் சில நிர்வாகிகள் அவரது பக்கம் தாவி வருகின்றனர். மேலும் சில நிர்வாகிகளும் மாறுவதற்கு தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சசிகலாவுடன் தொடர்பில் இருக்கும் நிர்வாகிகள் மற்றும் கட்சி மாற நினைக்கும் நிர்வாகிகளை உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எனவே, அப்படியிருக்கும் 50 நிர்வாகிகளின் பட்டியல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கைக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் சமயத்தில் கட்சி மாறும் நிர்வாகிகளை, தன் பக்கமே வைத்துக் கொள்ளும் விதமாக, அவர்களுக்கு கட்சியின் முக்கிய பொறுப்புகளை கொடுத்து, அவர்களை திசை திருப்பி விடலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று 50 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு, சசிகலாவின் ஆள்பிடிக்கும் முயற்சியை தகர்க்கவும் எடப்பாடி பழனிசாமி சிறப்பான திட்டத்தை வகுத்துள்ளார். அதில், மகன் ஜெய் பிரதீப்பிற்கும் இடம் கொடுத்து, ஓ.பன்னீர்செல்வத்தையும் குஷிப்படுத்தியுள்ளாராம். மேலும், சசிகலாவிடம் சென்று தனது அரசியல் அஸ்தமனத்தை உருவாக்கிக் கொள்ளாமல், மகனின் அரசியல் எதிர்காலத்திற்கு வழி கொடுக்கலாம் என்ற முடிவையும் ஓ.பன்னீர்செல்வம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த திட்டம் ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்துள்ளதாகவும் அதிமுகவினர் கூறுகின்றனர். ஒன்று, சசிகலா தரப்பிற்கு யாரும் சென்றுவிடக்கூடாது என்பதற்காக பட்டியல் வெளியிடுவது. மற்றொன்று, சசிகலா தன் சார்பான பட்டியலை வெளியிடுவதற்கு முன்பு தன் வலிமையை பிரதிபலிக்க செய்யவே அவர் இதனை அரங்கேற்றுவதாகவும் கூறப்படுகிறது.

 

தினகரனிடம் எச்சரிக்கையாக இருங்கள்

சசிகலாவுக்கு அறிவுரை வழங்கிய அமைச்சர்!

 

விழுப்புரம், பிப்.12-

 டி.டி.வி.தினகரன் இடம் இருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என சசிகலாவுக்கு சி.வி.சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.

விழுப்புரத்தில் சமூக நலத்துறை சார்பாக பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் விழா காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் நடைபெற்றது. இந்த விழா சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரை ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர் களிடம் பேட்டியளித்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், டி.டி.வி. தினகரன் இடமிருந்து சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் முதலில் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்படும் என்றும் சட்டம் தன் கடமையை செய்யும் என்று கூறினார்.

மேலும் அதிமுகவை கைப்பற்றுவோம் என டிடிவி தினகரன் கூறி வருகிறார், சசிகலாவுக்கு ஓர் எச்சரிக்கையாக தெரிவிக்கிறோம் டிடிவி தினகரன் இடம் இருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என சசிகலாவுக்கு சிவி சண்முகம் அறிவுறுத்தினார்.

மேலும் டிடிவி தினகரன் நம்பிதான் கட்சியும் ஆட்சியும் சசிகலா ஒப்படைத்துச் சென்றார். ஒரே மாதத்தில் கட்சியை டிடிவி உடைத்தார். முதலில் அவரது குடும்பத்தில் ஒற்றுமையை உருவாகட்டும் என கூறினார்.

எந்த காலத்திலும் அதிமுக மீண்டும் ஒரு முறை அடிமையாக இருக்காது என்றும் டிடிவி தினகரன் குடித்துவிட்டு பேசுகிறார் என்று என்னை சொல்லுகிறார், ஆம் இவர்தான் கூவத்தூரில் எனக்கு ஊற்றிக் கொடுத்தார், எல்லோருக்கும் ஊத்தி கொடுத்தார் என்றும் கூறினார்.

 

7ம் கட்ட கீழடி அகழாய்வு பணியை

தொடங்கி வைக்கிறார் முதல்வர்

 

மதுரை, பிப்.12-

சிவகங்கை கீழடியில் 7ம் கட்ட அகழாய்வை 13ம் தேதி முதல்வர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க இருப்பதாக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார். கீழடியில் மத்திய தொல்லியல்த்துறை சார்பில் 3 கட்டமும், தமிழக தொல்லியல்த்துறை சார்பில் 3 கட்டமாக அகழாய்வு பணி நடைபெற்றது. 2015ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை 6 கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் எடுக்கப்பட்டன.

இதில் தமிழ் பிராமி எழுத்துக்கள், தங்க பொருட்கள், முதுமக்கள் தாழி, கட்டட சுவர்கள், பானை உள்ளிட்ட பொருட்கள் எடுக்கப்பட்டு உள்ளன, 6ம் கட்ட அகழ்வாய்வு நடைபெற்ற கீழடி, மணலூர், கொந்தகை மற்றும் அகரம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement