Logo

மத்திய அரசு போதுமான நிதி அளித்துள்ளது – முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு


 

சென்னை,  பிப்.14-

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வரவேற்பு உரையாற்றினார்.

விழா மேடையில் வைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.  பிரதமர் மோடியை தொடர்ந்து முதலமைச்சர், துணை முதலமைச்சர்., சபாநாயகர் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.   பிரதமர் மோடிக்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து நினைவு பரிசாக கிருஷ்ணர் சிலையை வழங்கினார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் விழா தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. 

இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது,

எனது அன்பு வேண்டுகோளை ஏற்று தமிழகம் வந்து நலத்திட்டங்களைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களை அறிவித்த பிரதமருக்கு நன்றி.  நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கு பிரதமர் எடுத்து நடவடிக்கைகள் பாராட்டிற்குரியது .

பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகளால் நாட்டில் விரைவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  கொரோனா தடுப்பூசியால் இந்தியாவிற்கு உலக அளவில் பாராட்டு கிடைக்கிறது. 

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் கொரோனா நோய்த்தொற்று வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றினை முற்றிலும் வேரறுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மக்களுக்கு போடும் திட்டம் தற்போது சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. நம் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது மிகவும் பாராட்டுக்குரியது.

அதிமுக அரசு சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.  18,300 கோடி ரூபாய் செலவில் 45.1 கிலோமீட்டர் நீளத்தில் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலைய வழித்தடம், பரங்கிமலை வரை சீரமைக்கப்பட்டு பயணிகள் சேவை நடைபெற்று வருகிறது.  மேலும், தற்போது 3,770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மதுரை, கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  மெட்ரோ ரயில் சேவை திட்டத்துக்கு மத்திய அரசு தேவையான நிதி அளித்து வருகிறது.  சென்னையில் 45 கி.மீ. தூரத்துக்கு தற்போது மெட்ரோ ரயில் சேவை நடைபெற்று வருகிறது.  சென்னை - மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு போதுமான நிதி அளித்துள்ளது. 

இதற்காக பிரதமர்  நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தனது உரையில் கூறினார்.

மேலும், நீர் மேலாண்மையில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. கோவையில் மெட்ரோ ரயிலுக்கான ஆய்வு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார். 

துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில்,

‛பாரத தேசத்தின் தவப்புதல்வர். பாமர மக்களின் சேவகர் பிரதமர் மோடி. அவரை போன்ற ஒப்பற்ற தலைவரை காண்பது அரிது.

தமிழகத்தின் நலன் நாடும் தன்னிகரில்லா தலைவர் பிரதமர் மோடி.  திறமை எங்கிருந்தாலும் பாராட்ட தவறாதவர் பிரதமர்.  தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிய பிரதமருக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம்.

சிறந்த மாநிலத்திற்கான விருதை தமிழகம் மூன்று முறை பெற்றுள்ளது. சிறந்த ஆளுமைக்கான மத்திய அரசின் விருதை தமிழகம் பெற்றுள்ளது. காவிரி பிரச்னை விவகாரங்களில், தமிழக அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தது. மத்திய பட்ஜெட்டில், தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கியதற்கு நன்றி. 

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான நல்லுறவை வெளிப்படுத்துவது மெட்ரோ ரயில் திட்டம் தான். பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு 2 முக்கிய ரயில் திட்டங்களை கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வரவேற்பு உரையில் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement