Logo

சட்டசபை தேர்தலில் போட்டியிட அதிமுக விருப்ப மனு அறிவிப்பு - கட்டணம் ரூ.15,000..!

 

சென்னை, பிப்.15-

அதிமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்ப மனு கொடுக்கலாம் என்று  அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர்  கூட்டாக இன்று (15/02/2021) அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

தமிழக சட்டசபையின் 5 ஆண்டு பதவி காலம் மே மாதம் 24ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு வருகிற ஏப்ரல் மாதம் கடைசியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது. இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தமிழ்நாட்டில் தேர்தல் தொடர்பான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் அதிமுக, திமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டி.டி.வி.தினகரனின் அமமுக ஆகிய கட்சிகள் எப்படி போட்டியிட போகின்றன என்ற எதிர்பார்ப்பு எகிர்கிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதே போல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே முதல்கட்ட சுற்றுப் பயணத்தை முடித்து விட்டார். அடுத்த கட்டமாக அவர் கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தல் நடைபெறும்போது வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அ.தி.மு.க. முந்துவது வழக்கம். அதே போல் இந்த தேர்தலிலும் வேட்பாளர்ளை தேர்வு செய்யும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்க உள்ளனர்.

இந்நிலையில், அ.தி.மு.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்ப மனு கொடுக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 24.2.2021-புதன்கிழமை முதல் 5.3.2021-வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு  விண்ணப்ப கட்டணத் தொகையை செலுத்தி, விருப்ப மனு விண்ணப்ப படிவங்களை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து, மீண்டும் தலைமைக்கழகத்தில் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுக்க கட்டணத்  தொகை ரூ.15,000/-

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் விருப்ப மனு கொடுக்க கட்டணத்  தொகை ரூ.5,000/- ஆகும்.

கேரள சட்டசபை தேர்தலில் விருப்ப மனு கொடுக்க கட்டணத்  தொகை ரூ.2,000/-ஆகும்.

இவ்வாறு அதிமுக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளில் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியோடு, கழகம் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்பும் உடன்பிறப்புகள் தலைமைக் கழகத்தில் 24.02.2021 - 05.03.2021 வரை விண்ணப்ப கட்டணம் செலுத்தி விருப்பமனு விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அதிமுக தேர்தலை எதிர்கொள்ள தயாராகிவிட்டது என்பதை இந்த அறிவிப்பு உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதனால் தமிழக அரசியல் தேர்தல் களம் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement