Logo

சமூக செயல்பாட்டாளர் திஷா ரவி கைது-தலைவர்கள் கண்டனம்

 சமூக செயல்பாட்டாளர் திஷா ரவி கைது-தலைவர்கள் கண்டனம்

புதுடெல்லி, பிப்.16-

சமூக செயல்பாட்டாளர் திஷா ரவியை கைது செய்து இருப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. பல முக்கிய அரசியல் தலைவர்கள் திஷா ரவியின் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து எழுதி உள்ள பிரியங்கா, ஆயுதம் தாங்கியவர்கள் நிராயுதபாணியாக உள்ள ஒரு பெண்ணைப் பார்த்து அஞ்சுகின்றனர். ஆயுதம் இல்லாத அந்த பெண், நம்பிக்கைக்கான ஒளியை பரப்புகிறார்.’ எனக் கூறியுள்ளார். மேலும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவும் தனது பேஸ்புக்கில் கருத்தை தெரிவித்துள்ளார். அதில், தனது கருத்தை தெரிவிக்கும் பெண்ணை கைது செய்கிறோம் என்றால், நம்மை மிகப்பெரிய ஜனநாயக நாடு என நாம் எப்படி அழைத்துக் கொள்ள முடியும்? எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரமும் இது குறித்து கருத்து கூறியுள்ளார்.  அதில், மவுன் கார்மேல் கல்லூரியைச் சேர்ந்த 22 வயது மாணவியும் பருவநிலை செயல்பாட்டாளருமான திஷா ரவியை, அச்சுறுத்தலாக பார்த்து அஞ்சுகிறது என்றால், இந்திய நாட்டின் அடித்தளம் மிகவும் பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம் எனக் கூறியுள்ளார்.

மேலும், சீன படைகளை எல்லை தாண்டி வருவதை விட, டூல் கிட் ஆவணங்களை வைத்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது மிகவும் ஆபத்து மிக்கது போல், என சிதம்பரம் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத், திஷா ரவி கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி உள்ளனர். எதிர்ப்புகளை, விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள முடியாத அரசாக மோடி அரசு இருப்பதாக அவர் கூறினார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். திஷா ரவி கைது செய்யப்பட்டு இருப்பது, ஜனநாயக விரோதமானது எனவும், நமது விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது குற்றம் அல்ல எனவும் கூறியுள்ளார். 

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக சமூக வளைதளங்களில் டூல்கிட் ஆவணங்களைத் திருத்தி பரப்பியதற்காக திஷா ரவிவை டில்லி போலீசார் கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். தற்போது 5 நாள் போலீஸ் காவலில் அவர் வைக்கப்பட்டு உள்ளார்.


 

விவசாய சட்டங்களை ஆராயும் குழு கூட்டம்

புதுடெல்லி, பிப்.16-

விவசாய சட்டங்கள் குறித்து ஆராயந்து அறிக்கை அளிப்பதற்காக உச்ச நீதிமன்றம் அமைத்த வல்லுனர் குழு நேற்று கூடி, விவசாயத்துறை வல்லுனர்களுடன் நேரிடையாகவும், கானொலி காட்சி வாயிலாகவும் கருத்து கேட்டதாக தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்கள், விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த ஜனவரி 12ம் தேதி விசாரணையின் போது, வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. மேலும், 3 பேர் அடங்கிய வல்லுனர் குழுவை அமைத்து, விவசாயிகள் கடுமையாக எதிர்த்து வரும் வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வு நடத்த கூறியது. மேலும், 2 மாதங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

இந்தக் குழு நேற்று 7வது முறையாகக் கூடி வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய்ந்தது. இந்த கூட்டத்தில் பெரும் கல்வியாளர்கள், விவசாயம் தொடர்பான வல்லுனர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கானொலி வாயிலாகவும் கலந்து கொண்டனர். அவர்களின் கருத்துக்களை குழு பதிவு செய்து கொண்டது.


 

 

மகாராஷ்டிராவில்  டிரக் கவிழ்ந்து விபத்து
16 தொழிலாளர்கள் உயிரிழப்பு

 

மும்பை, பிப்.16-

மகாராஷ்டிரா - ஜல்கான் மாவட்டம் கிங்கான் கிராமம் அருகே நேற்று முன்தினம் இரவு லாரி கவிழ்ந்து விபத்து 15 பேர் உயிரிழந்தனர். பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் துலே மாவட்டத்தில் இருந்து ரவேர் மாவட்டத்திற்கு லாரி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு கிங்கான் என்ற கிராமம் அருகே டிரக் வந்து கொண்டிருந்தபோது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 16 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.  5 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள உள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

சாலை விபத்தில் 16- பேர் பலியான சோகத்திற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திப்பதாகவும் தனது டுவிட்டரில் மோடி பதிவிட்டுள்ளார்.


 

விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை 

சென்னை, பிப்.16-

விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.


 

பாஜக மாநில தலைவர் எல் முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். இரட்டை இலக்கத்தில் எங்கள் உறுப்பினர்கள் பேரவையில் இடம் பெறுவார்கள். அனைத்து மாவட்ட மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.5 ரூபாய்க்கு மதிய உணவு திட்டம்

கொல்கத்தா, பிப்.16-

மேற்கு வங்காளத்தில் ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.


 

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களுடன் மேற்கு வங்காளத்திற்கும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. எப்போது வேண்டுமென்றாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் கட்சிகள், மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி பிரசாரத்தை தொடங்கிவிட்டன. எதிர்க்கட்சிகளும் பிரசாரம் செய்து வருகின்றன. மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். அதேசமயம் பா.ஜனதா கடும் சவாலாக விளங்கி வருகிறது.

இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் ஏழை மக்களுக்கு 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார் மம்தா பானர்ஜி. ஐந்து ரூபாய்க்கு அரிசி சாதம், பருப்பு, காய்கறி மற்றும் முட்டைக்கறி கிடைக்கும். ஒரு பிளேட் சாப்பாட்டிற்கு மாநில அரசு 15 ரூபாய் மானியமாக வழங்கும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சுய உதவிக்குழுக்களால் மதியம் 1 முதல் 3 மணி வரை இந்த உணவுக்கூடம் இயங்கும். படிப்படியாக மாநிலம் முழுவதும் இந்தத் திட்டம் விரிவு படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.


 

தனியுரிமை கொள்கை எதிர்த்து வழக்கு
வாட்ஸ்அப், மத்திய அரசுக்கு 
உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி, பிப்.16-

வாட்ஸ்அப் கொண்டுவந்துள்ள புதிய தனியுரிமைக் கொள்கைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்குமாறு வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


 

வாட்ஸ்அப் நிறுவனம், இந்தியாவில் தனது தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்களைச் செய்தது. கடந்த ஜனவரி 4ம் தேதி இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, வாட்ஸ்அப் பயனாளர் தனது தகவல்களை பேஸ்புக் மற்றும் அதன் குழும நிறுவனங்களுக்கு பகிர ஒப்புதல் அளிக்க வேண்டும். முன்னதாக இந்த கொள்கையை ஏற்க பிப்ரவரி 8ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது மே 15ம் தேதி வரை இது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த கொள்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

 இந்த தனியுரிமை கொள்கைகளை தடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதில் வாட்ஸ்அப் நிறுவனம் ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கு தனியுரிமை கொள்கைகளில் வேறுபாடு காட்டுவதாக கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கு திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷரத் ஏ பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் தங்களது தனியுரிமையை இழக்கும் அச்சத்தில் இருப்பதாக நீதிபதி கூறினார். நீங்கள் 2 அல்லது 3 டிரில்லியன் மதிப்புள்ள நிறுவனங்களாக இருக்கலாம். ஆனால் மக்கள் தங்களது தனியுரிமையை மதிக்கின்றனர். அதைப் பாதுகாப்பது எங்கள் கடமை என நீதிபதி குறிப்பிட்டர்.

நிறுவனங்கள் சார்பாக வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அரவிந்த் தாடர் ஆஜராகி இருந்தனர். ஐரோப்பியர்களையும் இந்தியர்களையும் வெவ்வேறு விதமாக வாட்ஸ்அப் கையாள்கிறது என்பதை உடனடியாக மறுத்தனர். அந்நாடுகளில் சிறப்பு சட்டங்கள் உள்ளதால் அதற்கு கட்டுப்பட்டு நடப்பதாகவும், இந்தியாவில் தகவல்களை பாதுகாக்க சிறப்பு சட்டங்கள் கொண்டு வந்தால் அவற்றை நிறுவனங்கள் கடைபிடிக்கும் என அவர்கள் கூறினர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மெகதா, இது இந்தியாவுக்கும் அச்சுறுத்தலான விசயம் எனக் கூறினார். அந்நிறுவனங்கள் நமது தனியுரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. வேறுபாடு காட்ட கூடாது எனக் கூறினார்.

வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பதில் அளிக்கும் படி வாட்ஸ்அப், பேஸ்புக் நிறுவனங்களுக்கும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.


 

நேபாளம், இலங்கையில் பாஜகவை விரிவுபடுத்த திட்டம்! - வைரலாகும் திரிபுரா முதல்வரின் பேச்சு

கவுகாத்தி, பிப்.16-  

பாஜக நிகழ்ச்சியில் திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் கூறிய கருத்து வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


 

திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் சமீபத்தில் அகர்தலாவில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பேசிய அவர், கட்சியை நாடு முழுவதும் விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், அண்டை நாடுகளிலும் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது என்றார். அவர் பேசியதாவது:-

ஒருமுறை கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். அப்போது, பாஜகவின் வடக்கு மண்டல செயலாளர் அஜய் ஜாம்வால் பேசும்போது, பல மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்திருப்பதாக கூறினார். அதற்கு பதிலளித்த அமித் ஷா, இப்போது இலங்கையும் நேபாளமும் எஞ்சியுள்ளதாக கூறினார். நேபாளம் மற்றும் இலங்கையில் கட்சியை விரிவுபடுத்தி, அங்கு அரசாங்கத்தை அமைப்பதற்கு அங்கு வெற்றி பெறவேண்டும் என்று கூறினார்.  அமித் ஷாவின் தலைமையில் பாஜக உலகின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. கேரளாவில் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் மேலாக இடதுசாரிகளும் காங்கிரசும் மாறி மாறி ஆட்சியமைக்கும் போக்கை பாஜக மாற்றும். அங்கும் பாஜக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

பிப்லப் தேவ் கூறிய இந்த கருத்து நகைச்சுவைக்காக சொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், சர்வதேச அரசியல் தொடர்பாக அவர் கூறிய கருத்து வைரலாகி வருவதுடன், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.


 

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட  விருப்ப மனு - மநீம அறிவிப்பு

சென்னை, பிப்.16-

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட பிப்ரவரி. 21 முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 


 

2021இல் நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி. 21ம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என மநீம அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்திய அரசியல் கட்சிகளிலேயே 'ப்ளாக்செயின்' தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி விருப்ப மனுக்களை பெறும் கட்சி என்பதில் பெருமை அடைகிறோம் என்றும் மக்கள் நீதி ம‌ய்ய தலைமை அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் னீணீவீணீனீ.நீஷீனீ என்ற இணையதளத்தின் மூலமாகவும் விருப்ப மனுக்களை அளிக்கலாம் எனவும் கமல்ஹாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.விவசாயிகள் விரும்பவில்லை
திரும்பப் பெற வேண்டியதுதானே?
பிரியங்கா காந்தி கேள்வி

பிஜ்னோர், பிப்.16-

விவசாயிகள் வேளாண் சட்டங்களை விரும்பவில்லை என்று கூறும்போது, மத்திய அரசு அவற்றை திரும்பப் பெற வேண்டியதுதானே என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.


 

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு வேளாண் சட்டங்களால் விவசாயிகள் நன்மை அடைவார்கள் எனத் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் விவசாயிகள் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் எனக் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், பிரியங்கா காந்தி கூறுகையில் ‘‘விவசாயிகள் டெல்லி எல்லையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் 80 நாட்களாக போராடி வருகிறார்கள். தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளது. அவர்கள் எதற்காக உட்கார்ந்து இருக்கிறார்கள்?.

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என பிரதமர் கூறுகிறார். விவசாயிகள் இந்த சட்டங்கள் வேண்டாம் என்று, அவர்களாகவே கூறும்பொழுது, நீங்கள் அதை ஏன் திரும்பப் பெற மறுக்கிறீர்கள்?’’ என பிரியங்கா காந்தி கேட்டுள்ளார்


 

பனிச்சரிவு வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு 

உத்ரகாண்ட், பிப்.16-

உத்ரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. அந்த மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.


 

இதில் இதுவரை 56 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் 29 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூறியுள்ளனர்.


 

25 உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், மேலும் 150 பேரை காணவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த மாநிலத்தின் தபோவன் சுரங்கத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா உறுதி

அகமதாபாத், பிப்.16-

குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.


 

வடோதராவில் நிஜாம்பூரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய் ரூபானி கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார். அப்போது, மேடையிலேயே அவர் திடீரென மயங்கி விழுந்தார். அதைத்தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அவரது உடல் நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

மேலும், அவர் யார் உதவியும் இல்லாமல் மருத்துவமனை ரூமில் நடப்பதாக கூறப்பட்டு உள்ளது. இசிஜி, எகோ, சிடி ஸ்கேன் பரிசோதனை முடிவுகள், ஆக்சிஜன் அளவு அனைத்தும் நார்மலாக இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு அவர் மருத்துவமனையில் கண்காணிப்பின் கீழ் வைக்கப்படுவார் எனக் கூறப்பட்டு உள்ளது.

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement