Logo

100 நாளில் கோரிக்கை நிறைவேறாவிட்டால் கோட்டைக்கே நீங்கள் வரலாம்-மு.க.ஸ்டாலின்

100 நாளில் கோரிக்கை நிறைவேறாவிட்டால் கோட்டைக்கே நீங்கள் வரலாம்-மு.க.ஸ்டாலின்

புதுக்கோட்டை, பிப்.16-

உங்களுடைய பேராதரவுடன் நான் ஆட்சி பொறுப்பேற்ற 100 நாளில் கோரிக்கை நிறைவேறாவிட்டால் கோட்டைக்கே நீங்கள் வரலாம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருமயம் சட்டமன்ற தொகுதியான ஊனையூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். காலை சரியாக 10 மணிக்கு ஊனையூர் கிராமத்திற்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வேனில் இருந்து இறங்கிய அவர் மேடைக்கு வரும்போது இருபுறமும் திரண்டிருந்த பெண்கள் உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலினிடம் கைகுலுக்கினர். மேலும் ஏராளமான பெண்கள் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் மேடைக்கு வந்த அவருக்கு வெள்ளி செங்கோல் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. திருமயம் தொகுதி எம்.எல்.ஏ. ரகுபதி வரவேற்றார். தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் சாதனை படைத்த புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் வீரர்கள், மாற்றுத்திறனாளிகளை அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார். பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் போடப்பட்டது. அந்த திட்டம் கைவிடப்பட்ட போதிலும் அந்த ஆழ்குழாய் கிணறுகள் அகற்றப்படாமல் இருப்பதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் தீர்க்கப்படாமல் உள்ள முக்கிய பிரச்சினைகள் வீடியோவாக ஒளிபரப்பப்பட்டது.

இதையடுத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இங்கு நடைபெறுவது கூட்டம் அல்ல, மாநாடு போன்று இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர்களும் இங்கு வந்திருக்கிறீர்கள்.

இன்றைக்கு உங்கள் குறைகளை, பிரச்சினைகளை கோரிக்கை மனுக்களாக அளித்திருக்கிறீர்கள். இந்த கோரிக்கை மனுக்களை நான் அறிவாலயத்துக்கு எடுத்து செல்வேன். உங்களுடைய பேராதரவுடன் நான் ஆட்சி பொறுப்பேற்ற மறுநாள், இந்த புகார் மனு பெட்டி திறக்கப்படும். திறக்கப்பட்ட 100 நாட்களுக்குள் உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும். ஒருவேளை முடியாவிட்டால் நீங்கள் நேரடியாக இந்த பதிவு எண் கொண்ட அட்டையை எடுத்துக்கொண்டு எந்த அனுமதியும் இல்லாமல் கோட்டைக்கு வாருங்கள். முதல்வர் அறைக்கே நேரடியாக வரலாம். உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். 

இதில் புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட புதுக்கோட்டை, விராலிமலை, ஆலங்குடி, திருமயம், அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை 6 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது மனுக்களை அங்கு வைக்கப்பட்டிருந்த குறை தீர்க்கும் மனு பெட்டியில் போட்டனர். கூட்டத்திற்காக அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தர போராரு என்ற வாசகம் அடங்கிய டிஜிட்டல் போர்டுகள் மேடையை சுற்றி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்தது.

மேடையின் பின்புறம் உள்ளவர்கள் நிகழ்ச்சிகளை காணும் வகையில் பல இடங்களில் அகன்ற திரைகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் ஊனையூர் கிராமம் விழா கோலம் பூண்டிருந்தது. மு.க.ஸ்டாலின் பிரசாரத்தையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 


பட்டாசு ஆலையில் தீ விபத்து 

அதிக பணியாளர்கள் 
அவசர கதியில் வேலை!-அதிகாரி ஆய்வு

விருதுநகர், பிப்.16-

அச்சங்குளம் பட்டாசு ஆலையில் அளவுக்கு அதிகமான பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியதும், அவசர கதியில் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பேர் பலியாகி விட்டனர். இன்னும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை, சிவகாசி, சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் 6 பேரில் மாலா, ராஜம்மாள் ஆகிய 2 பெண்கள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்தரரெட்டி, வெடிபொருள் கட்டுப் பாட்டுத்துறை துணை முதன்மை அதிகாரி சுந்த ரேசன் ஆகியோர் தனித்தனியாக விபத்து நடந்த பட்டாசு ஆலையை ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக அதிகாரி சுந்தரேசன் கூறுகையில், விபத்துக்குள்ளான பட்டாசு ஆலையில் 14 அறைகள் முற்றிலும் இடிந்து தரை மட்டமாகி உள்ளது. 24 அறைகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. கட்டிட சிதறல்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டாசு நிறுவன பெயர்களுடன் லேபிள்கள் கிடந்தன. எனவே அங்கு 4 அல்லது 5 நிறுவன பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்திருக்கலாம் என முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் அளவுக்கு அதிகமான பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியதும், அவசர கதியில் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. பட்டாசு ஆலையில் பயன்படுத்தப்படும் வேதியியல் மாதிரியை சேகரித்துள்ளோம். அதனை ஆய்வு செய்த பிறகுதான் தடை செய்யப்பட்ட வேதிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என தெரியவரும். தற்போது ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்துக்கு விதிமீறல்கள்தான் காரணமா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

 


 

சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

சென்னை, பிப்.16-

மாணவர்கள் நலன்கருதி சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் அன்பரசு, செயலாளர் செந்தில்நாதன், துணைத்தலைவர் சுந்தரகுருமூர்த்தி ஆகியோர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் மனு ஒன்றினை அளித்தனர்.  அந்த மனுவில் கூறியிருப்பதாவது, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது உள்ள வழக்குகளால் பதவி உயர்வு மற்றும் பணி ஓய்வு பலன் பெற முடியாமல் தவித்து வந்த நிலையில், துறைரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய பரிந்துரை செய்ததற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் பதவிக்கான பொது மாறுதல் கலந்தாய்வை இம்மாத இறுதிக்குள் நடத்த வேண்டும்.

அனைத்து ஆசிரியர்களுக்கும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை கொண்டு வந்து ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2004&2006 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்ய வேண்டும். பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கு புதிதாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி நிர்வாகத் திறன் தேர்வுகள் எழுத வேண்டும் என்ற கட்டாயத்தை ரத்து செய்ய வேண்டும்.  தற்போதுள்ள பள்ளி சூழலில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மாதத்தின் முதல் மற்றும் 3வது சனிக்கிழமைகளை விடுமுறை நாள்களாக அறிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


 

பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வு
மோடி அரசு தந்த  கொடூரப் பரிசு
கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்..!

 

சென்னை, பிப்.16-

பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வு, மத்திய அரசு மக்களுக்கு கொடுத்த கொடூரப் பரிசு என்று திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது 

தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சட்டப் பேரவை தேர்தலைக் கருத்தில் வைத்து, பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். 

மதுரை “எய்மஸ்” மருத்துவமனையின் நிலை என்னவென்று அறிந்த தமிழக மக்கள், பிரதமரின் புதிய அறிவிப்புகளின் தன்மையையும், தரத்தையும் நன்கு அறிவார்கள். அவர் வாயால் அறிவிக்கப்படாத ‘பரிசாக’ கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

பொதுமக்கள் பயன்படுத்தும் மானியத்துடனான சமையல் கேஸ் சிலிண்டருக்கு கொரோனா காலத்தில் ஒரே மாதத்தில் 100 ரூபாய் விலை உயர்த்தி, வதை படு படலத்தைத் தொடங்கிய பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தற்போது மானியமில்லாத சிலிண்டர் விலையையும் ரூ.50 உயர்த்தி தேநீர்க்கடை, சிறு உணவகம் போன்ற எளிய மக்களின் வணிகத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக இந்த விலை உயர்வுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சர்வதேசச் சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலருக்கு மேல் விற்பனையானபோது, ரூ.450 முதல் ரூ.500-க்குள்ளான விலையில் சமையல் கேஸ் சிலிண்டர் விற்கப்பட்டது. அதற்கே பா.ஜ.க.வினர் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும், அதை வேண்டுமென்றே கணக்கில் கொள்ளாமல், பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலையை உயர்த்திக் கொண்டே இருக்கிறது. தற்போது 750 ரூபாய்க்கும் அதிகமாகச் சமையல் கேஸ் சிலிண்டருக்கு விலை கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு மக்களைத் தள்ளியுள்ளது பா.ஜ.க. அரசு. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும் மத்திய பாஜக அரசு தொடர்ந்து விலையை உயர்த்துவது ஏன்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

பெட்ரோல் விலை ‘செஞ்சுரி’ அடிக்கப்போகிறது. டீசல் விலை அதனைப் பின் தொடர்கிறது. சமையல் கேஸ் விலை விண்ணைத் தொடுகிறது. 

இந்திய மக்களுக்கு, பிரதமரும் அவரது அமைச்சரவையும் தருகின்ற கொடுமையான பரிசுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மக்களுக்கு இத்தகைய பரிசுகள் தேவையில்லை. அவர்கள் நிம்மதியாக வாழும் வகையில், வரிவிதிப்புகளைக் குறைத்து, விலையேற்றத்தைக் கைவிட வலியுறுத்துகிறேன். இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை மகாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களில் 100 ரூபாயை எட்டிய நிலையில் தமிழகத்திலும் கூடிய விரைவில் பெட்ரோல் விலை சதமடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கேஸ் சிலண்டர் விலை உயர்வு மேலும் மக்களை கவலை அடைய செய்துள்ளது. மத்தியில் உள்ள மோடி அரசோ எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் தொடர்ந்து எரிபொருட்களின் விலையை உயர்த்தியபடியே இருப்பதை வேடிக்கை பார்ப்பது சர்வாதிகார போக்கையே குறிக்கிறது என சமூக ஆர்வலர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 


 

இரட்டைக் குழந்தைகளை குரங்குகள் தூக்கிச் சென்ற தடையம் இல்லை! - சந்தேகம் கிளப்பும் வனத்துறையினர்! 

தஞ்சை, பிப்.16-

தஞ்சையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை குரங்குகள் தூக்கி சென்று அகழியில் வீசியதில் குழந்தை இறந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், குரங்கு தூக்கி சென்றதற்கான எந்த தடயமும் குழந்தையின் உடலில் இல்லை என வனத்துறையினர் கூறியுள்ளனர்.

தஞ்சை மேலஅலங்கம் பகுதியில் ராஜா-புவனேஸ்வரி தம்பதியின், பிறந்து எட்டு நாட்களே ஆன இரட்டை பெண் குழந்தைகளை கடந்த 13ஆம் தேதி குரங்குகள் தூக்கிச் சென்றதாகக் கூறப்பட்டது. ஒரு குழந்தையை வீடு ஓட்டின் மேலும் மற்றொரு குழந்தையை அகழியிலும் குரங்குகள் வீசி விட்டதாகவும் கூறப்பட்டது. ஓட்டின் மேல் வீசப்பட்ட குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதாகவும், அகழியில் வீசப்பட்ட குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டதாகவும் குழந்தையின் தாய் கூறியிருந்தார். 

இது தொடர்பாக, சம்பவம் நடந்த பகுதியிலும் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்களிடமும் வனத்துறையினர் விவரங்களை கேட்டறிந்துள்ளனர். குழந்தையின் மேல் குரங்கின் நகக்கீறலோ எந்தவிதமான காயமோ இல்லை எனவும் குரங்கின் ரோமம் கூட குழந்தைகள் மேல் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக வனத்துறையினர் கூறியுள்ளனர். 

மேலும் குழந்தையை குரங்குகள் தூக்கிச் சென்றால், அதை லேசில் விட்டுவிடாது என்றும், ஒரு கையில் குழந்தையை தூக்கிக் கொண்டு தாவிச் செல்வதற்கான வாய்ப்புகள் கிடையாது எனவும் வனத்துறையினர் கூறுகின்றனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இறந்த குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு முழுமையாக விவரங்கள் தெரியவரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 


 

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் நிச்சயம் தோல்வியே! - மூத்த அதிமுக தலைவர் திருச்சி சௌந்தரராஜன்

சென்னை, பிப்.16-

சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் நிச்சயம் தோல்விதான் கிடைக்கும் என்று அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த திருச்சி சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

அண்ணா திமுகவை எம்.ஜி.ஆர்., தொடங்கிய காலத்தில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயலாளராக இருந்தவர் திருச்சி சௌந்தரராஜன். இவர் திருச்சி-2 தொகுதி (திருச்சி மேற்கு) எம்.எல்.ஏ.வாக 1977, 1980-ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நீண்டகாலத்துக்கு முன்பே அதிமுகவை விட்டு விலகிய போதும் அதிமுகவுக்கு பிரச்சனை ஏற்படுகிற போது தமது கருத்தை தெரிவித்து வருகிறார் திருச்சி சௌந்தரராஜன். 

தற்போதைய சட்டசபை தேர்தல் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் திருச்சி சௌந்தரராஜன் கூறியதாவது, அதிமுகவை எம்.ஜி.ஆருடன் இணைந்து உருவாக்கிய 12 பேரில் நானும் ஒருவன். நான் ஒருவன் மட்டுமே இன்னமும் இருக்கிறேன். மற்றவர்கள் அனைவரும் இயற்கை எய்திவிட்டனர். எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கம் இன்று வரலாறு தெரியாதவர்களிடம் இருக்கிறது.

லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோற்றது. இந்த சட்டசபை தேர்தலிலும் எத்தகைய நிர்பந்தங்கள் இருந்தாலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கவே கூடாது. அப்படி அதிமுக கூட்டணி அமைத்தால் நிச்சயம் தோல்விதான் ஏற்படும். அதிமுகவை காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கும் இருக்கிறது. ஆகையால் இதனை நான் வலியுறுத்துகிறேன். இவ்வாறு திருச்சி சௌந்தரராஜன் தெரிவித்தார்.


 

மத்திய இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற 
தமிழக பல்கலை.,களுக்கு மறைமுக நிர்பந்தமா? 

 

சென்னை, பிப்.16-

மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் படிப்புகளுக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றும்படி தமிழக பல்கலைகழகங்கள் மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகின்றனவா? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று  அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இதை எதிர்த்து 2 மாணவிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 49.9 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தித்ததால், இரு மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி  புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது,  மாணவர்களுக்காக பல பல்கலைக்கழகங்கள் புதிய படிப்புகளை உருவாக்கி வரும்போது, அண்ணா பல்கலைகழகம் மட்டும் 25 ஆண்டுகளாக நடக்கும் படிப்பை நிறுத்தியுள்ளதாக நீதிபதி புகழேந்தி குறிப்பிட்டார். யுஜிசி விதிகளில் மாநில இட ஒதுக்கீட்டை பின்பற்ற அறிவுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்ற  மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகிறதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். 

அப்படிப்பட்ட எண்ணம் ஏதுமில்லை என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. எந்த இடஒதுக்கீட்டை பின்பற்றுவது என தமிழக அரசிற்கு கடிதம் எழுதியது ஏன் என அண்ணா பல்கலைகழகத்திற்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, மத்திய அரசு இடஒதுக்கீட்டை பின்பற்றும்படி எழுதப்பட்ட கடிதம்தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் என்றார்.

 


 

தீ விபத்துகள் குறித்த விழிப்புணர்வு முகாம்

அரூர், பிப்.16-

அரூரில் தீ விபத்துகள் குறித்த விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் 32 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, போக்குவரத்துத் துறை சார்பில் சாலை விதிகள், சாலைப் பாதுகாப்புகள், கண் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதன் ஒருபகுதியாக, அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் தீ விபத்துகள் நேரிடும் போது ஓட்டுநர்கள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் மா.பழனிசாமி தலைமையிலான வீரர்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். தொடர்ந்து, செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள், சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதன் அவசியம் உள்ளிட்ட விழிப்புணர்வு தகவல்களை அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் கே.சிவக்குமார் தெரிவித்தார்.


 

எனது ரசிகர்கள் பொதுவெளியில் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும்-நடிகர் அஜித் அறிக்கை

சென்னை, பிப்.16-

அரசியல் பிரமுகர்களிடம் வலிமை திரைப்படம் குறித்து ரசிகர்கள் கருத்து கேட்பது எனக்கு வருத்தமளிக்கிறது என்று நடிகர் அஜித் நேற்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

நடிகர் அஜித் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், என் மீதும் என் படங்களின் மீதும் அபரிதமான அன்பு கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும் மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம். 

கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் வலிமை சம்பந்தப்பட்ட அப்டேட் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுறச் செய்கிறது.

முன்னரே அறிவித்தப்படி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம்மீது உள்ள மரியாதையை கூட்டும். இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்” என செய்தி அறிக்கையில் நடிகர் அஜித் குறிப்பிட்டுள்ளார்.


 

தீ விபத்துகள் குறித்த விழிப்புணர்வு முகாம்

அரூர், பிப்.16-

அரூரில் தீ விபத்துகள் குறித்த விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

 

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் 32 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, போக்குவரத்துத் துறை சார்பில் சாலை விதிகள், சாலைப் பாதுகாப்புகள், கண் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதன் ஒருபகுதியாக, அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் தீ விபத்துகள் நேரிடும் போது ஓட்டுநர்கள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் மா.பழனிசாமி தலைமையிலான வீரர்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். தொடர்ந்து, செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள், சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதன் அவசியம் உள்ளிட்ட விழிப்புணர்வு தகவல்களை அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் கே.சிவக்குமார் தெரிவித்தார்.


Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement