Logo

பாழடைந்த கட்டடம் இடிக்கப்படுமா?

பாழடைந்த கட்டடம் இடிக்கப்படுமா?

பூவிருந்தவல்லி, பிப்.17-

 இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடம் இடித்து அப்புறப்படுத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் பாழடைந்து விழும் நிலையில் இருந்ததால் அனைத்து மகளிர் காவல் நிலையம் புது கட்டடமாக மாற்ற வேண்டும் என்பதற்காக புதிய கட்டடம் பழைய கட்டடத்திற்கு எதிரே கட்டப்பட்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியால் கடந்த 2017ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. பிறகு அனைத்து மகளிர் காவல் நிலையம் புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. இருந்தாலும் பழைய கட்டடம் அப்படியே விடப்பட்டது. இதனால் பாழடைந்த நிலையில் இருந்த கட்டடம் தற்போது முட்புதர் சூழ்ந்து பேய் பங்களாவாக காட்சியளிக்கிறது. இந்த கட்டடத்தில் பாம்பு, பல்லி, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் குடியேருவதற்கு முன் இதனை இடித்து புதிய கட்டடம் கட்டுவார்களா? அல்லது பூங்காவாக அமைக்கப்படுமா? என்றும் காவல்துறையினரும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் எந்த பணியும் நடைபெறாமல் இழுத்தடிக்கப்படுமா? என்பதும் போகப் போகத்தான் தெரியும்.

 

மின் கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?

பூவிருந்தவல்லி, பிப்.17-

ஆவடி பகுதியில் எலும்பு கூடாக காட்சியளிக்கும் மின் கம்பம் அகற்றப்பட்டு புதிய மின் கம்பம் நிறுவப்படுமா? என்று பொதுமக்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி பின் புறத்தில் அமைந்துள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரில் மின்கம்பம் பழுதடைந்து எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது. தற்போது அந்த மின் கம்பம் இப்ப விழுமோ, எப்ப விழுமோ? என்று தெரியவில்லை. யார் உயிருக்காவது உலை வைப்பதற்கு முன்பு மின்வாரியம் இந்த கம்பத்தை அகற்றினால் நலம் பயக்கும். அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தினமும் குறைந்தபட்சம் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். ஆகவே எந்த ஒரு அசம்பாவிதமும் நடப்பதற்கு முன்  மின் துறையினர் உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. மின்துறையின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

சாய் நகரில் பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட
நடைபாதை சாலை சரி செய்வது எப்போது?

குன்னூர், பிப்.17-

உதகை தாலுகாவுக்கு உட்பட்ட ஜங்ஷன் பகுதியில் அருகில் உள்ள சாய் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நடைபாதை சாலை சரி செய்யப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நீலகிரி  மாவட்டம், உதகை  தாலுகாவுக்கு உட்பட்ட ஜங்ஷன் பகுதி அருகில் உள்ள சாய் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு ஒதுக்கித் தரப்பட்டுள்ள நடைபாதை சாலை சரிவர இல்லாத நிலை காணப்படுகிறது. இந்த சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், இதன் அருகே வசிக்கும்  பொதுமக்கள் ஆகியோருக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள்  பாதிக்கப்படாமல் இருக்க இந்த பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல பயன்படுத்தப்படும் நடைபாதை சாலையை சரி செய்ய போர்க்கால நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உதகை நகராட்சி நிர்வாகம் இந்த பகுதியை பார்வையிட்டு பொதுமக்கள் தினமும் சந்திக்கும் பிரச்னையை சரி செய்து தர நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இந்த கோரிக்கையை பொதுமக்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர். உதகை நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement