Logo

மீனவர்கள் எல்லை கடந்து செல்லாமல் இருக்க அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

 

மதுரை, மார்ச் 5-

 

 

இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி தாக்குவது, குறித்து நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில், இந்திய மீனவர்கள் பன்னாட்டு கடல் எல்லைகளை கடந்து செல்ல கூடாது என மத்திய, மாநில அரசுகள் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. 

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சட்டவிரோதமாக கைது செய்வது, கொலை செய்வது, படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவது, துப்பாக்கி முனையில் தமிழக மீனவர்களை கடத்துவது, சட்டவிரோதமாக சிறையில் அடைப்பது போன்ற செயல்களைச் செய்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் 1500 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். 2013 மே 3ஆம் தேதி தமிழக அரசு இந்திய மீனவர்களை காப்பாற்றுவதற்காக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. ஆனால் மத்திய அரசு தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் தற்போது வரை இலங்கை சிறைச்சாலையில் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு சரியான உணவு, தண்ணீர் கிடைப்பதில்லை. தமிழக மீனவர்கள் குறித்து மத்திய அரசு எந்த ஒரு கவனமும் கொள்ளவில்லை.

தமிழக மீனவர்கள் 1500 நபர்கள் இலங்கை கப்பல் படையினர் கொலை செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இந்திய அரசு எடுக்கவில்லை. இந்திய அரசு இலங்கையை நட்பு நாடாக கருதுகிறது. இந்திய அரசு வலிமையான முடிவு எடுக்காததால் இலங்கை அரசு மனித உரிமை மீறலை மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் 2021 ஜனவரி 18ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக வாடகை படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் சென்ற மெசியா, நாகராஜ், செந்தில் குமரன், சாம்சந் ஆகிய 4 நபர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து துன்புறுத்தி கொலை செய்து கடலில் வீசியுள்ளனர்.

எனவே, 2021 ஜனவரி 18ஆம் தேதி 4 இந்திய மீனவர்களை கொலை செய்த இலங்கை கப்பல் படையை சேர்ந்த நபர்களை கைது செய்யவும், இறந்த இந்திய மீனவர்கள் 4 குடும்பத்தினருக்கும் இலங்கை அரசு நிவாரணம் வழங்கவும், இந்திய மீனவர்களையும் அவர்களது உடைமைகளையும் காப்பாற்றுவதற்கு முறையான வழிகாட்டுதல்களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மத்திய அரசு வழக்கறிஞர் கூறும்போது  இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில் குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், மீனவர்கள் இந்திய எல்லையை தாண்டும் போதுதான் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இந்திய மீனவர்கள் பன்னாட்டு  கடல் எல்லைகளை கடந்து செல்ல கூடாது என மத்திய, மாநில அரசுகள்  மீனவர்களிடம்  உரிய  விழிப்புணர்வு  ஏற்படுத்த வேண்டும். எவ்வாறு கடல் எல்லையை கடக்காமல் மீன் பிடிப்பது என உரிய வழிமுறைகளை வகுத்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பன்னாட்டு கடல் எல்லையில் கடக்கும் போது நவீன சாதனங்கள் மூலம் எச்சரிக்கை மணி எழுப்பும் வகையில் தேவையான நவீன கருவிகளை மீனவர்களுக்கு வழங்க வேண்டும். பயன்படுத்த வேண்டும். மத்திய அரசின் பதில் மனுவை ஏற்று வழக்கை முடித்து வைத்தனர்.


 

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement