Logo

10ம்தேதி திமுக வேட்பாளர்கள் ... 11ம் தேதி தேர்தல் அறிக்கை அறிவிப்பு.... மாவட்ட செயலாளர்களிடம் திமுக தலைவர் தகவல்

சென்னை, மார்ச் 5-

தேர்தலில் விருப்பு வெறுப்பின்றி நமது வேட்பாளர்கள் வெற்றி பெற ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


 

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்காக தி.மு.க.வில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் ஏராளமானோர் விருப்ப மனு கொடுத்து இருந்தனர். அவர்களுக்கு கடந்த 2ம் தேதியில் இருந்து அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்று வந்தது. நாளையுடன் நேர்காணல் முடிவடைகிறது.

இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (05-03-2021) காலை, தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்களின் கூட்டம் காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களை அழைத்து காணொலி வாயிலாக பேசினார். அப்போது தேர்தலில் பணியாற்றுவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தேர்தலின் போது செயல்படுத்த வேண்டிய யுக்திகளையும் விளக்கினார்.


 

சட்டசபை பொதுத்தேர்தல் நெருங்கி விட்டது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிகம் பேர் விருப்ப மனுக்களை கொடுத்துள்ளனர். அந்த மனுக்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களை நேரில் அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டு அறிந்தேன்.   

10ம்தேதி  திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

நேர்காணல் நாளையுடன் முடிவடைவதால் வேட்பாளர் பட்டியல் தயாராகி வருகிறது. வருகிற 10-ந்தேதி நல்ல வெற்றி வேட்பாளர்கள் பட்டியல் வரும். 

நீங்கள் அனைவரும் அந்த வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய கடுமையாக உழைக்க வேண்டும். எல்லோருக்கும் வாய்ப்பு கொடுப்பது இயலாத காரியம். எனவே நான் நிற்பதாக கருதி ஒவ்வொரு வேட்பாளரையும் நீங்கள் வெற்றி பெற செய்ய கடுமையாக பாடுபட வேண்டும். 

11ம்  தேதி தேர்தல் அறிக்கை அறிவிப்பு

11ம்  தேதி தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படுகிறது.

7ம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்-"விடியலுக்கான முழக்கம்"

திருச்சியில் நாளை மறுநாள் (7ம் தேதி) பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மாபெரும் பொதுக்கூட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தின் "விடியலுக்கான முழக்கம்" என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பொதுக்கூட்டம் காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 8 மணி வரை நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது செயல்படுத்தப்பட வேண்டிய அடுத்த 10 ஆண்டுக்கான செயல் திட்டத்தையும் இந்த பொதுக்கூட்டத்தில் அறிவிக்க உள்ளேன்.

இதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் உங்கள் செயல்பாடு அமைய வேண்டும். பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்லும் பணியை தலைமை கழகம் செயல்படுத்த உள்ளது.

எல்.இ.டி. அகன்ற திரை மூலமும் மக்களுக்கு விளக்கி கூற ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு இடங்களிலும் குறைந்தது 50 ஆயிரம் வாக்காளர்களை சென்றடையும் வகையில் இந்த பிரசாரம் அமைய வேண்டும்.

தி.மு.க.வின் செயல் திட்டங்கள் என்ன என்பதை மக்கள் முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் உங்களது பணிகள் இருக்க வேண்டும். இந்த தேர்தலுக்கு தலைமை கழகம் வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்புகளையும் மக்களிடம் நீங்கள் கொண்டு சேர்ப்பதற்கு துணையாக இருக்க வேண்டும்.

விருப்பு வெறுப்பின்றி கடுமையாக உழைக்கவேண்டும்

தேர்தலில் விருப்பு வெறுப்பின்றி நமது வேட்பாளர்கள் வெற்றி பெற ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அனைத்து வேட்பாளர்களும் வெற்றி வேட்பாளர்களாகவே இருப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

அனைவரும் பங்கேற்க அழைப்பு

அந்தக் கூட்டத்தில் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் - பகுதி - வட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தின் மூலம் கழகத் தலைவர் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

அதோடு, நடைபெறவுள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ள 80 வயது மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோர் - நோயுற்றவர்களாகச் சந்தேகிக்கப்படுபவர்கள் ஆகியோருக்கான தபால் வாக்குகள் பதிவு செய்யும் நடைமுறைகளை உன்னிப்பாகக் கவனித்து, அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

அதன்பிறகு தி.மு.க. வழக்கறிஞர்கள் அணியினர் மாவட்ட செயலாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை காணொலி வாயிலாக வழங்கினார்கள்.

இந்தக் கூட்டத்தில், கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன், கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, முனைவர் க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ. இராசா எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மாவட்டக் கழகச் செயலாளர்கள் – பொறுப்பாளர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் பி.வில்சன் மற்றும் என்.ஆர். இளங்கோ ஆகியோர் பங்கேற்றனர்.

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement